புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த 1956-ல் நாட்டில் மொழி வாரியாக மாநிலங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களின் நிர்வாகம் அந்தந்த மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியில்தான் நடைபெற வேண்டும் என்று தீர்மானித்து, சட்டப் பேரவையில் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டிலேயே தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது.இதைத் தொடர்ந்து, 1996-ல் முதல் முறையாக தமிழ் ஆட்சி மொழித் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றும் பணிகள் தீவீரப்படுத்தப்பட்டன.அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. திருநெல்வேலியிலும், சேலத்திலும் மண்டல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வகையில், ஆட்சி மொழிச் சட்டத்தை முழு அளவில் நிறைவேற்ற தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, அரசு அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சி பெற அரசு வழி வகுத்தது.மாவட்டந்தோறும் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு ஓர் இயக்குநர் உள்பட 5 ஊழியர்கள் என்ற விகிதத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும், தனி வாகன வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 51 அரசுத் துறை அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஆட்சி மொழி பயன்படுத்தப்படும் நிலைமையை ஆய்வு செய்து, தமிழ்ச் சொற்களுக்கான விளக்கங்களையும், தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட ஆட்சி சொல்லகராதியையும் அளித்து, அனைத்துக் கோப்புகளையும் தமிழ் மொழியில் கொண்டு வரச் செய்வதே இந்த அலுவலகத்தின் அன்றாடப் பணியாகும்.தினமும் ஒன்று அல்லது இரண்டு அரசு அலுவலகம் என்ற விகிதத்தில் மாதம் 40 அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துறையினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இவற்றில் தேனி, அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் உதவி இயக்குநர் பணியிடம் காலியாகவும், கடலூர், விழுப்புரம் மாவட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், சில மாவட்டங்களில் வாகன வசதியும் இல்லை.இதன் காரணமாக, அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக மாற்றும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.மேலும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் கொள்கையை தீவிரமாக அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறையினர் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக முதல்வரின் எதிர்பார்ப்பு, முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் நிறைவேறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்திய முதல்வர், இந்தப் பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி இந்தக் குறையைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
கருத்துக்கள்
பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மட்டும் தமிழ் ஆட்சிமொழி முழுமையாக நிறைவேறுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையிலேயே தமிழ் ஆட்சிமொழியாகச்சிறக்க வேண்டும் என்றால் உடனே தமிழ் வளர்ச்சித்துறையை மூட வேண்டும். நிதியுதவி, பரிசு வழங்கல் முதலான நலப்பணிகளைத் (தமிழ்நாடு இயல இசை நாடக மன்றத்திலிருந்து இயல் பணிகளைப் பிரித்துத்) தமிழ்நாடு இயல்மன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கி அதனிடம் ஒப்படைக்க வேண்டும். அரசாணைகள் அனைத்தையும் தமிழில் வெளிவரச் செய்து தமிழில் உள்ள பட்டியல்கள், காசோலைகள், ஒப்பந்தங்கள் முதலானவை மட்டுமே செல்லத்தக்கன என நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழறிஞர்களைக் கொண்ட வழிநடத்தும் குழுவை அமைத்து நல்ல தமிழில் எழுத வழிகாட்ட வேண்டும். உயர் நீதிபதி தலைமையில் செயலாக்கக் குழுவை நிறுவி விதி மீறுவோருக்குத் தண்டனை வழங்க வேண்டும். இவற்றைச் செய்வார் யாருமில்லை. எனவே, ஆட்சித்தமிழ்ச் செயலாக்கம் என்பது கானல் நீரே. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்