ஈரோடு, மே 30: கட்சியினரின் உணர்வுகளை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். வேறு கட்சியில் இணைவது குறித்து சில தினங்களில் அறிவிக்க இருப்பதாகவும் கூறினார். அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: "1972-ல் எம்ஜிஆர், அதிமுக-வைத் துவக்கியதிலிருந்து கட்சியில் உள்ளவர்கள்தான், இப்போது கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்த சூழலில், கட்சியை இணைத்து, மீண்டும் இரட்டை இலை சின்னத்தைப் பெற ஜெயலலிதா முயற்சித்தாலும், நாங்களும் அதற்கு பணியாற்றி இருக்கிறோம். ஜானகி அணியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி தொடர்ந்து எங்களைப் புறக்கணித்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொண்டர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளோம். 2001-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தத் தேர்தலிலும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதைப் பற்றி வருந்தாமல், அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாகப் உழைத்தேன். எந்தப் பணியிலும் நான் சுணக்கம் காட்டியதில்லை. ஆனால் கட்சியில் உரிய மரியாதை எனக்கு அளிக்கப்படவில்லை. சுமார் 15 ஆண்டுகாலம் ஓரம் கட்டப்பட்டபோதிலும், வேறு கட்சிக்குச் செல்லாமல், கட்சி வளர்ச்சிக்காகப் போராடினேன். ஆனால் ஜெயலலிதா ஈரோட்டுக்கு வந்தபோதும், என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றது, மிகுந்த மன வேதனையை அளித்தது. எனக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். ஆனால் செயற்குழுவில் பலரும் என்னைத் திட்டியதை, ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. இனிமேல் அதிமுக-வில் இருப்பது மரியாதையாக இருக்காது என்பதால், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்தேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்த பின்னர்தான், பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தேன். தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக் கணக்கானோர் என்னைத் தொடர்பு கொண்டு, தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அனைவரிடமும் பேசி ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னர், வேறு கட்சிக்குச் செல்வதா அல்லது தனிக்கட்சி அமைப்பதா என்று முடிவு செய்வேன். எனினும் போட்டி அதிமுக-வை உருவாக்கும் எண்ணம் எதுவுமில்லை. எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வேலையில் ஒருபோதும் ஈடுபட மாட்டோம். எனது தந்தை இறந்தபோது, குக்கிராமத்திற்கு நேரில் வந்த எம்ஜிஆர், சடலத்தை தோள் கொடுத்துத் தூக்கினார். ஆனால் எனது தாயார் இறந்தபோது, ஜெயலலிதா அனுதாபச் செய்தி கூட அனுப்பவில்லை. பலமுறை கட்சி வளர்ச்சிக்காக நான் கூறிய யோசனைகளை உதாசீனப்படுத்திய ஜெயலலிதா, என்மீது தேவையற்ற குற்றம் சுமத்தவும் தயங்கவில்லை. அதிமுக தொண்டர்கள் மிகவும் நல்லவர்கள். கட்சியினரின் உணர்வுகளை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும். யாருடைய கட்டுப்பாட்டிலும் ஜெயலலிதா இருக்கக் கூடாது. யார் மீதாவது புகார்கள் வந்தால், இரு தரப்பினரையும் ஒன்றாக அழைத்துப் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி, பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியிலிருந்து பலர் தொடர்ந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாது. தற்போது கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, மக்கள் எண்ணங்களை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதால்தான், திமுக-வால் தொடர்ந்து ஜெயிக்க முடிகிறது. பல்வேறு திட்டங்களாலும் திமுக-வுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது' என்றார் சு.முத்துசாமி.
கருத்துக்கள்
துரத்தப்பட்டடவரின் புலம்பல் என எண்ணாமல் செயலலிலதா அவர்கள் இக் கருத்திற்குச் செவி மடுத்தால் கட்சி வளரும்; இல்லையேல் தளரும். காட்சிக்கு எளியராய் விளங்கினால் தொண்டர் வலிமை உயரும்; கட்சி பொலிவுறும்; இல்லையேல் அழிவுறும்.தெரியாத தொண்டரிடமும் தெரிந்தவர்போல் அன்பு காட்டுவது வளர்ச்சிக்கு வழி; தெரிந்தவரிடமும் பாராமுகம் காட்டுதல் வீழ்ச்சிக்கு வழி. வரலாறு காட்டும் உண்மை இதுதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 5:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்5/31/2010 5:45:00 AM