வெள்ளி, 4 ஜூன், 2010

மகாகவியும் மகாத்மாவும்



வீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடும் பொருட்டு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஒரு விழாக்குழு மே 9-ம் தேதி புதுதில்லியில் அமைக்கப்பட்டுள்ளது.1941-ல் தமது 80-வது வயதில் காலமான ரவீந்திரநாத் தாகூர் தலைசிறந்த மகாகவி மட்டுமல்ல; சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றையும் திறம்படப் படைத்துள்ளார். இவர் உருவாக்கிய ரவீந்திர சங்கீதம் பிரசித்தமானது. தவிர, அவர் கைதேர்ந்த வண்ண ஓவியரும்கூட. கடைசி பதினேழு ஆண்டுகாலத்தில் அவர் தீட்டிய 3,000 நவீன பாணி ஓவியங்களும், வரைந்த கோட்டுச் சித்திரங்களும் கொல்கத்தா விஸ்வபாரதி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.1861 மே 7-ம் தேதி கொல்கத்தாவில் ஒரு செல்வந்த நிலச்சுவான்தாரின் கடைசி மகனாகப் பிறந்தவர் தாகூர். வீட்டிலேயே அறிவியல், கணிதம், இசை, ஓவியம், வடமொழி, வங்காளி, ஆங்கிலம் ஆகிய பல கலைகளைக் கற்றறிந்தார். எட்டாம் வயதில் கவிதை புனையத்தொடங்கினார். பதினைந்தாம் வயதில் அவர் எழுதிய சிறுகதை, வங்க சிறுகதைத் தொகுப்பு நூலில் வெளியாயிற்று.வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்கு இங்கிலாந்து சென்ற அவர் அந்தப் படிப்புப் பிடிக்காமல் இரண்டே ஆண்டில் இந்தியா திரும்பினார். 1883-ல் திருமணம். ஆனால் 1902-ல் மனைவி மரணம். மறுமணம் செய்துகொள்ளவில்லை. 1901-ல் சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவினார். அதுவே பிற்காலத்தில் விஸ்வபாரதி பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது. அவர் வங்க மொழியில் இயற்றிய ""கீதாஞ்சலி'' கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1913-ல் வெளியானது. அதற்காக இலக்கிய நோபல் பரிசு அதே ஆண்டில் வழங்கப்பட்டது.ரவீந்திரநாத் தாகூரும் மகாத்மா காந்தியும் 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களாகக் கருதப்படுகின்றனர். பல விமர்சகர்கள் அவ்விருவரையும் ஒப்பிட்டுப் பல்வேறு கோணங்களில் எழுதியுள்ளனர்.1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர் காலமானார். காந்திஜியின் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவிருந்த ஜவாஹர்லால் நேரு கைது செய்யப்பட்டு அப்போது சிறையில் இருந்தார். தாகூர் மறைவு பற்றித் தமது அன்றைய சிறை டயரியில் நேரு இவ்வாறு எழுதினார்: ""காந்திஜியும் தாகூரும் ஒருவருக்கொருவர் முழுதும் மாறுபட்டவர்களாக இருப்பினும், நம் நாட்டில் தோன்றிய மகத்தான மனித வரிசையில் அவ்விருவருமே இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றனர். ஏதோ குறிப்பிட்ட சீரிய பண்பு பொருந்தியவர்கள் என்றில்லாமல் இன்றளவில் உலகிலுள்ள சிறப்புமிக்க மாமனிதர்களின் பொதுத் தோற்றத்தில் காந்தியும் தாகூரும் தலைசிறந்தவர்கள் என்பதே எனது கணிப்பு. அவ்விருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றது நான் பெற்ற பெரும் பேறு''.காந்திஜி தார்மிகம் செறிந்த அரசியல்வாதி. ஆனால், தாகூர் அரசியலிலிருந்து விலகியே நின்றார் என்று சொல்வாருண்டு. அது அவ்வளவு சரியல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாகூர் நேரடியாகப் பங்குகொண்டதில்லை என்றபோதிலும், 1905-ல் வைஸ்ராய் கர்ஸன் பிரபு வங்கத்தை இரு தனி மாகாணங்களாகப் பிரிவினை செய்ததை எதிர்த்து வங்க மக்கள் திரண்டெழுந்து அவ்வெழுச்சி தேசிய இயக்கமாக உருவெடுத்தபோது அப்போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் தீவிரமாகக் கலந்துகொண்டார்.1913-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் உயர் அரசாங்கம் 1915-ல் தாகூருக்கு "ஸர்' பட்டம் அளித்துக் கௌரவித்தது. 1919 ஏப்ரல் 13 அன்று அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்த அப்பாவி மக்களின் மீது ஆங்கிலேய ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.நாட்டைப் பதறச் செய்த அந்தப் படுகொலையைக் கடுமையாகச் சாடிய தாகூர், தமக்கு முன்னர் அளிக்கப்பட்ட "ஸர்' பட்டத்தை உடனடியாகத் துறந்தார். ஆனால் அச்சமயம் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை; 1915-ல் தமக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட கெய்ஸர் -இ - ஹிந்த் தங்கப் பதக்கத்தையும் துறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் அரசாட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை 1920 ஆகஸ்ட் முதல் தேதி காந்திஜி தொடங்கி வைத்தபோதுதான் தமக்கு முன்பு அளிக்கப்பட்டிருந்த கெய்ஸர் - இ - ஹிந்த் பதக்கத்தையும், தென்னாப்பிரிக்காவில் போயர் யுத்தம் மற்றும் ஜூலு புரட்சியின் போது புரிந்த ராணுவ மருத்துவ சேவைகளுக்காகவும் அளிக்கப்பட்ட பதக்கங்களையும் காந்திஜி துறந்தார்.காந்திஜியின் மீது குருதேவ் தாகூர் தனிப்பட்ட முறையில் பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கி மக்களை வழிநடத்திச் செல்ல காந்திஜி ஒருவர் மட்டுமே முற்றிலும் தகுதி வாய்ந்தவர். தம்மால் அது இயலாது என்று தாகூர் நன்கு அறிந்திருந்தார். 1916-ம் ஆண்டிலேயே காந்திஜியை "மகாத்மா' என்று குறிப்பிட்டு, அந்தப் பட்டத்தைப் பிரபலப்படுத்தியவரும் ரவீந்திரநாத் தாகூர்தான்.இவ்வாறாயினும், இவ்விரு மாமனிதருக்கிடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. அவற்றைப் பற்றி தாகூர் வெளிப்படையாகவே கண்டனம் எழுப்பினார். சுதந்திரப் போராட்டத்தில் வரம்புகடந்த தேசிய ஆர்வத்துக்கும், குறுகிய தேச பக்திக்கும் முக்கியத்துவம் அளிப்பதை தாகூர் ஏற்கவில்லை.விஞ்ஞானி சந்திர போஸின் மனைவி அபலா போஸýக்குத் தாகூர் 1908-ம் ஆண்டில் எழுதிய கடிதத்தில், ""குறுகிய தேசிய மனப்பான்மை அல்லது நாட்டுப்பற்று நமது ஆன்மிக உயர்வின் புகலிடமாக இருக்க மாட்டாது. மானிட வர்க்கம் முழுவதுமே நமது அடைக்கலம் ஆகும். வைரத்துக்கான விலையைக் கொடுத்து வெறும் கண்ணாடிக் கற்களை நான் வாங்கத் தயாரில்லை. மானிட வர்க்கத்துக்கு எதிராகக் குறுகிய தேசபக்தி ஜெயகோஷம் போடுவதை நான் ஒருக்காலும் ஏற்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தின்போது தேசியம் என்று கூக்குரலிட்டுப் பாமர மக்களை ஆட்டுமந்தைபோல் தலைவர்கள் இட்டுச் செல்வதையும் கடுமையாகச் சாடினார்.கைராட்டையின் பெருமையையும் நூல் நூற்பதன் அவசியத்தையும் காந்திஜி திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறி வருவதை தாகூர் கண்டித்தார். ""மாடர்ன் ரிவ்யூ'' (செப்டம்பர் 1928) இதழில் ""சர்க்கா வழிபாடு'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தாகூர் இவ்வாறு சாடினார்:""கைராட்டையை அதன் குறிப்பிட்ட தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடிப்பதை எனது பகுத்தறிவும் மனசாட்சியும் ஏற்கவில்லை. சர்க்காவுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பதால் இந்திய மறுமலர்ச்சிக்குப் புரிய வேண்டிய அதிமுக்கிய பணிகளில் கவனம் செலுத்த இயலாமற் போய்விடும். செக்குமாடுபோல் சர்க்காவை ஒரே மந்த கதியில் சுழற்றிக் கொண்டிருப்பது சாவு போன்ற வெறுமையே ஆகும்; அது புத்தி மழுங்கச் செய்யும் காரியம் என்பதே எனது துணிபு.'' இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து ""கவியும் சர்க்காவும்'' என்ற தலைப்பில் காந்திஜி தமது ""யங் இந்தியா'' (5-11-1925) வாராந்திரியில் எழுதிய கட்டுரையின் சாராம்ச வாசகம் இதுதான்:""மகாகவியின் கண்டன விமர்சனம் கவிதா ரூபமாய் மிகைப்படுத்தி வர்ணிப்பது என்ற வகையில் அவரது உரிமையாம். அதனை நான் எதிர்ப்பதற்கில்லை. ஆயினும், ஒரே மாதிரியான கைராட்டையின் சுழற்சி, சாவு போன்ற வெறுமைக்கு ஒப்பானது அல்லவே அல்ல. பார்க்கப் போனால் சூரியனும் கிரகங்களும் ஒரேமாதிரியான இயந்திரகதியில்தான் இயங்குகின்றன. பாதை தவறினால் அதோ கதிதான்...தினந்தோறும் அரைமணி நேரமேனும் ஓர் யக்ஞமாக அனைவரும் நூல் நூற்க வேண்டும் என்றுதான் கூறி வருகிறேன்; நாள் முழுதும் அல்ல. கிராமப்புறங்களில் மக்கள் வேலையின்றி சோம்பித் திரிவதை அகற்றி, ஏழைகளின் பொருளாதாரத்துக்கு ஓரளவு வருவாய் ஈட்டித்தரும் சாதனமே கைராட்டை. கிராமாந்திரங்களில் சர்க்கா நிலைபெற்றால், பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு எல்லாமே மேம்படும்'' என்றெல்லாம் காந்திஜி வாதித்தார்.இத்தகைய கருத்து மோதல்களுக்கிடையேயும் காந்திஜியும் தாகூரும் ஒருவருக்கொருவர் பெருமதிப்புடன் கடைசிவரை நேசம் பாராட்டி வந்தனர். ""மனிதாபிமானி காந்தி'' என்ற தலைப்பில் தாகூர் 1938-ல் எழுதிய கட்டுரையில் காந்திஜியைக் கீழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார்.""காந்திஜி அரசியல்வாதி. சிறந்த நிர்வாகி. மக்களின் பெருந்தலைவர். தார்மிக சீர்திருத்தவாதி என்ற சிறப்புகள் ஒருபுறமிருக்க, இவற்றுக்கெல்லாம் மேலாக இவைசார்ந்த அன்னாரது நடவடிக்கைகள் எதுவுமே மானிட வர்க்கத்தின்பால் அவர் கொண்டுள்ள அன்பையும் அருளிரக்கத்தையும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, அப் பேரன்பு அவரது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது.''ரவீந்திரநாத் தமது பிற்கால வாழ்வை சாந்திநிகேதன் பள்ளியையும் விஸ்வபாரதி அமைப்பையும் மேம்படுத்துவதன் பொருட்டே அர்ப்பணித்தார். 1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர் மறைந்ததையொட்டி மகாத்மா காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ""ரவீந்திரநாத் தாகூரின் மரணத்தில் நாம் இந்தச் சகாப்தத்தின் மிகச்சிறந்த கவியை மட்டும் இழக்கவில்லை; அபரிமித மனிதாபிமானியையும், ஆர்வமிக்க தேசியவாதியையும் இழந்துவிட்டோம். அவரது சக்திமிக்க தனித்தன்மை, தடம் பதிக்காத பொது நடவடிக்கை ஏதுமில்லை. சாந்திநிகேதனத்திலும் ஸ்ரீநிகேதத்திலும் நம் நாடு முழுவதற்கும், ஏன், இவ்வையகம் முழுவதற்கும் ஓர் மரபுரிமைச் செல்வத்தை அளித்துச் செல்கிறார்'', என்று அஞ்சலி செலுத்தினார். தாகூர் 1911-ல் புனைந்த ""ஜன கண மன...'' பாடல் இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்திய தேசிய கீதமாக ஏற்கப்பட்டது மிகப் பொருத்தமே ஆகும். 1972-ல் கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற தனிநாடாகப் பிரிந்த பின் தாகூர் முன்பு எழுதிய ""அமர் சோனா பங்களா...'' என்ற பாடல் அந்நாட்டின் தேசிய கீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகின் இரு தனித்தனி நாடுகள் ஒரே கவியின் பாடலைத் தங்கள் தேசிய கீதமாக வரித்தது மகாகவி தாகூரின் பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
கருத்துக்கள்

வடநாட்டிலுள்ள கவிஞர்கள், தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டங்களை இந்தியா முழுமையும் கொண்டாடவும் உலகநாடுகளில் தூதரகங்கள் சார்பாகச் சிறப்பு நிகழ்ச்சி நடத்தவும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஈராயிரம் ஆண்டைக் கடந்த தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோ அடிகள் முதலான புலவர்களுக்கும் வள்ளலார், தாயுமானவர் முதலான வாழ்வியல் அறிஞர்களுக்கும் பாரதியார், பாரதிதாசன் முதலான பாவலர்களுக்கும் மத்திய அரசு விழா எடுப்பதில்லை. தமிழின் பெயரால் ஆட்சிக்கு வருபவர்கள் இதற்கான முயற்சியும் எடுப்பதில்லை. அங்ஙனமாயின் எங்ஙனம் வளரும் ஒருமைப்பாடு?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/4/2010 3:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக