சென்னை, மே 29: பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகளின் செயல்கள் மனித நேயத்துக்கு முற்றிலும் விரோதமானவை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.சென்னையில் மழைநீர் வடிகால், கால்வாய்கள் அமைக்கும் திட்டத் தொடக்க விழா தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பிறகு, நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:"மாவோயிஸ்டுகள் சமீபகாலமாக பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?மாவோயிஸ்டுகளின் லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம்.ஆனால், அவற்றை நிறைவேற்றுவதில் இப்போது அவர்கள் கையாளுகிற முறைகள் மனித நேயத்துக்கு முற்றிலும் விரோதமானவைகளாக இருக்கின்றன. ரயில் விபத்தில் இறந்துபோன ஒரு குழந்தையின் உடலை பயணிகள் தூக்கிச் செல்லும் காட்சி பத்திரிகைகளில் வந்துள்ளது.அந்தக் குழந்தைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் என்ன மாறுபாடான கருத்து இருக்க முடியும்?பொதுமக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தங்களது நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுகிற நிலை வளர்வது நல்லதல்ல.அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் எனக்கு மாறுபாடுஇல்லை. ஆனால், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக போராடும் இந்த முறை சரிதானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நான் சொல்லி வருகிற கருத்து இது.என்னுடைய கருத்துக்கு மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்கள் மதிப்பளித்து மனித நேயத்தைக் காப்பாற்றுவதற்குப் பக்க பலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.பா.ம.க. கூட்டணி?எங்கள் கட்சியின் (திமுக) உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை' என்றார் முதல்வர் கருணாநிதி.இணைப்புப் பாலமாக இருக்கிறார் ஸ்டாலின்அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இணைப்புப் பாலமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்று மே 29-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவரது ஓராண்டு கால செயல்பாடு குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் சனிக்கிழமை கேட்டனர்.அதற்கு அவர் அளித்த பதில்:"துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் பணி திருப்தி அளிக்காவிட்டாலும், திருப்தி அளிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அவரது பணி மிகவும் திருப்தி அளிக்கிறது.அவர் அரசுக்கு பலமாகவும், எதிர்க்கட்சிகளோடு இணைப்புக்கு பாலமாகவும் செயல்படுகிறார்' என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்
கொள்கையும் அவற்றை நிறைவேற்றுதலும் மக்களுக்காகத்தான். அவ்வாறிருக்க அம்மக்களை அழித்து யாருக்காக அக் கொள்கைகளை நிறைவேற்றப் போகிறார்கள்? எனவே,முதல்வர் கூறுவதுபோல் யாராக இருந்தாலும் மக்களைப் பலியிடக் கூடாது. ஈழத்தில் மக்களைக் கொன்றொழித்த இந்தியமும் சிங்களமும் போன்று யாரும் நடக்கக் கூடாது. இதனை வலியுறுத்தும் முதல்வருக்குப் பாராட்டுகள். அதே நேரம் அரசின் அங்கமான துணை முதல்வர் பதவியில் இருப்பவரை அரசிற்குப் பாலமாக இருப்பதாக மீண்டும் முதல்வர் தெரிவிக்கிறார். அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்வது கேலிக் கூத்தாகும். அரசிற்கு அப்பாற்பட்டவரை அவ்வாறு சொல்லலாம். எனவே, அரசு வேறு அமைச்சுப் பதவி வேறு என்ற நகைச்சுவையை நிறுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/30/2010 2:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 5/30/2010 2:24:00 AM