திங்கள், 31 மே, 2010

சமூக வேதனையின் வடிகால்தான் எனது கார்ட்டூன்கள்: மதி

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "மதி கார்ட்டூன்ஸ்' புத்தக வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) அருள்தந்தை எல். ஜான் லூர்து, பேராசிரியர
சமூக வேதனையின் வடிகால்தான் எனது கார்ட்டூன்கள் என தினமணி நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் மதி தெரிவித்தார்.விழாவில் அவர் பேசியது:பள்ளியில் படிக்கும்போது கார்ட்டூனிஸ்ட்டாக ஆவேன் என்று நினைத்ததுகூட கிடையாது. பள்ளிப் பருவத்தில் விளையாட்டின் மீதே எனக்கு ஆர்வம் இருந்தது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் எம்.எஸ்சி. படிக்கும்போது மாற்றம் ஏற்பட்டது. அக் கல்லூரியில் படிக்கும்போது, இந்திய கப்பல் படையில் கேப்டனாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஒருமுறை கல்லூரியில், பல்கலைக்கழகத்தின் மண்டல அளவில் நடைபெற்ற ஓவியம் மற்றும் கார்ட்டூன் வரையும் போட்டியில் என் பெயரை, என்னை கேட்காமலேயே எனக்குப் பாடம் எடுத்த பேராசிரியர் முனீஸ்வரன் பதிவு செய்தார். இதனால் வேறு வழியில்லாமல் அந்தப் போட்டியில் கலந்து கொண்டேன். ஆனால் அந்த கார்ட்டூன் போட்டியில், எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இதன் பின்னர் பல்கலைக்கழக, மாநில அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றேன். இச் சம்பவமே என்னை கார்ட்டூனிஸ்ட்டாக மாற்றியது. நீங்கள் கார்ட்டூன் போடுவதால் நாடு திருந்திவிடுமா என கேட்கிறார்கள். இப்போது நம் நாட்டில் காளான் போன்று தினமும் ஒரு கட்சி முளைக்கிறது. ஆனால், அவை பிற கட்சிகளைப் போலவே, மக்களுக்கு நம்பிக்கை துரோகம், மக்களை சுரண்டுதல் என அகங்காரத்துடன் செயல்படுகின்றன. இவற்றைப் பார்க்கும்போது எனக்கும் கோபமும் வெறுப்பும் வருகிறது. அவையே கார்ட்டூனாக வடிவம் பெறுகிறது. நாட்டில் இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா எனக் கேட்டால், சிரிப்பதே புத்திசாலித்தனம் என்பேன். அதைத்தான் எனது கார்ட்டூன்கள் செய்கின்றன. நான் எவ்வளவு கோபமாக கார்ட்டூன் வரைகின்றேனோ அதே அளவுக்கு அக் கார்ட்டூன் நகைச்சுவையோடு வரும். இது என்னை அறியாமல் நடைபெறும் விஷயம். இவ்வளவு அழகாக கார்ட்டூன் வரையும் நீங்கள் ஆங்கில இதழ்களுக்குச் சென்றுவிடலாமே என சிலர் கேட்பது உண்டு. 700 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதுதான் ஆங்கிலம். ஆனால் நம் தாய் மொழியான தமிழ், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. கலை, இசை, இலக்கியம் என அனைத்து வளமும் தமிழில் நிறைந்து உள்ளது. தாய்மொழியான தமிழில் கார்ட்டூன் வரையும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைத்துவிடாது என்றார் மதி. விழாவுக்கு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமை வகித்து புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தமிழகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வாசகர்கள் பெற்றுக் கொண்டனர். தினமணி திருநெல்வேலி பதிப்பின் தலைமைச் செய்தியாளர் ப. இசக்கி வரவேற்றார். கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி நன்றி கூறினார்.
கருத்துக்கள்

மன்பதை உணர்வும் தமிழுணர்வும் கொண்ட மதிக்குப் பாராட்டுகள். அவரது தொண்டு தொடரட்டும்! அவரது புகட்டோவியங்கள் சிலருக்கு வழுக்கு நிலத்தில் பயன்படும் ஊன்றுகோலாக அமையும்; சிலருக்கு வழிகாட்டியாக அமையும்;சிலருக்குத் தன்னைப்பற்றிய மதிப்பீடாக உணர்ந்து திருத்திக் கொள்ள உதவும்;சிலருக்கு மன்பதையின் நிலையைப் புரிந்து கொள்ள உதவும்; பலருக்குத் தம் உள்ளக் கிடக்கை வெளிப்பட்டதில் மனநிறைவாய் அமையும்; பன்முகப் பயனுடைய படைப்பாக அவை விளங்குகின்றன. நல்வாய்ப்பளிக்கும் தினமணிக்கும் பாராட்டுகள். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 6:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக