சென்னை, ஜூன் 8: ராஜபட்சவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 4,496 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இதில், 149 பேர் பெண்கள்.சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 459 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை அதிபர் ராஜபட்ச செவ்வாய்க்கிழமை தில்லி வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தடையை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.சென்னை மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கலைக்கோட்டுதயம், வன்னியரசு, ஆர்வலன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன், அம்பத்தூர் நகராட்சி தலைவர் சேகர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமான் தலைமையில் அக் கட்சியினர் நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவன் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் தீரன் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சியினரை மியூசிக் அகாதெமி அருகே போலீஸôர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கருத்துக்கள்
சென்னையில் மட்டும் 3000 த்திற்கும் மேற்பட்டோர் தளையிடப்பட்டதாகவும் ஒரு மண்டபம் போதாமல் 3 மண்டபங்களில் அடைநத்து வைத்ததாகவும் தெரிய வருகிறது. இதனை 500க்கும் குறைவாகக் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் 30000 க்கும் மேற்பட்டோர் தளையிடப்பட்டிருக்க வேண்டும். பக்சேவிற்கு எதிர்ப்பு என்பது ஆளும்கட்சிகளுக்கான எதிர்ப்பு எனக் கருதி எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகின்றனர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/9/2010 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 6/9/2010 3:50:00 AM