வியாழன், 10 ஜூன், 2010

இந்தியா-இலங்கை இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின



குடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை அதிபர் ராஜபட்ச தம்பதியை புதன்கிழமை வரவேற்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்.
புது தில்லி, ஜூன் 9: இலங்கைத் தமிழர்கள் மறுகுடியமர்வு பணியை விரைவுபடுத்துங்கள் என்று தில்லி வந்துள்ள அந் நாட்டு அதிபர் ராஜபட்சவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இரு தலைவர்கள் சந்திப்புக்குப் பின், பாதுகாப்பு, எரிசக்தி, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் இந்தியா, இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.செவ்வாய்க்கிழமை தில்லி வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, பிரதமர் மன்மோகன் சிங்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமர்த்தும் பணியைத் விரைவுபடுத்த வேண்டும் என்று ராஜபட்சவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பின், இரு நாடுகளிடையே பாதுகாப்பு, மின்சாரம், ரயில்வே, கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இலங்கைக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அளிப்பது, தலைமன்னார்- மடு இடையே ரயில் பாதை அமைப்பது, பெண்கள் தொழில் முன்னேற்ற மையம் அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ராஜபட்சவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதன்பின்னர் முதன்முறையாக அவர் தில்லி வந்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கருத்துக்கள்

இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவிக்கவும் கைம்மாறாக மேலும் பல ஒப்பந்தப் பரிசுகளை நல்கவும் சிங்களம் இந்தியத்திடம் இன அழிப்பு அறிவுரைகளையும் நெறியுரைகளையும் பெறவும் நடைபெறும் சந்திப்பு. தமிழர் நலனுக்கு எதிரான கொலைவெறி அணி சந்திப்பு.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 4:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக