சென்னை, ஜூன் 10: இலங்கை அதிபர் ராஜபட்சவை, தமிழக எம்.பி.க்கள் சந்தித்துப் பேசியது வெறும் நாடகம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்ச புதுதில்லி வந்திருக்கிறார். அவருக்கு இந்திய அரசு ஆடம்பர வரவேற்பை அளித்துள்ளது. ஏற்கெனவே இலங்கை சென்று ராஜபட்சவை சந்தித்து வந்த தமிழக எம்.பி.க்கள், இப்போது மீண்டும் தில்லியில் அவரைச் சந்தித்துள்ளனர். இது வெறும் சம்பிரதாய சந்திப்பாக நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் இன்னும் 3 மாதங்களில் குடிமயர்த்தப்படுவார்கள் என்று எப்போதும் சொல்வதையே இப்போதும் ராஜபட்ச சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்டு, ஏதோ பெரிய சாதனை செய்து விட்டதைப் போல தமிழக எம்.பி.க்கள் திரும்பி வந்துள்ளனர். இலங்கையில் நடைபெறும் கொடுமையைவிட, ஆளும் காங்கிரஸ் கட்சி, தி.மு.க. மற்றும் ராஜபட்ச நடத்தும் நாடகம் பெரும் கொடுமையாக உள்ளது. இந்தியா - இலங்கை இடையே இப்போது 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி மேம்போக்கான, கண்துடைப்பான ஒரு ஒப்பந்தம் தவிர, திட்டவட்டமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இதிலிருந்தே, தமிழர்களை ஒழிப்பதில் இந்தியாவும், இலங்கையும் கூட்டாக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிறது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் ராஜபட்ச தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார். இந்திய நாட்டின் சட்டம், ஒழுங்கு எவரையும் விட்டு வைக்காது என்பதை புரிய வைக்க வேண்டும். எனவே, டக்ளஸ் தேவானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். இலங்கையில் நடக்கும் மறு சீரமைப்புப் பணிகளில் சீனர்களைப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணிகளை தமிழர்களுக்கு வழங்க ராஜபட்சவிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்
நாடகம் நடத்துகிறார்கள் என்று நன்கு தெரிகிறது.இவ்வுண்மையை உணர்ந்த பா.ச.க., உலக அளவில் ஈழத்தமிழர் சிக்கல்கள், படுகொலைச் சதிகள், பேரின அழிப்புக் கொடுமைகள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். கொடுமைகளுக்குக்காரணமான அனைத்து உலகத்தலைவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை வாங்கித் தரவேண்டும். இதன்மூலம வேறு எந்நாட்டிலும் இவை போன்ற ஆட்சிவெறியர்களின் இன அழிப்புகளும் படுகொலைகளும் நடக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *6/11/2010 7:12:00 AM