வியாழன், 10 ஜூன், 2010

தமிழால் எல்லாம் முடியும்; தமிழக அரசால் முடியுமா? ராமதாஸ் கேள்வி



சென்னை, ஜூன் 9: "தமிழால் எல்லாம் முடியும். ஆனால் தமிழை ஆட்சி மொழியாக்கவோ, பயிற்சி மொழியாக்கவோ தமிழக அரசால் முடியுமா?' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, மாநிலமெங்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசியதாவது: ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி என தமிழ் மொழியால் எல்லாமும் முடியும். ஆனால், அந்தத் தகுதிகளை வழங்க தமிழக அரசால் முடியுமா? இந்தக் கேள்வியை நாங்கள் 20 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். தமிழ் வளர்ச்சிக்காக, தமிழின் உயர்வுக்காக பா.ம.க. தவிர வேறு எந்தக் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. உலகின் எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டின் தாய் மொழிக்கே முக்கியத்துவம் தரப்படும். ஆனால் தமிழ்நாட்டில்தான் தாய் மொழியாம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது.எங்கும் தமிழ் என்பது ஒரு காலத்தில் பெரும் முழக்கமாக இருந்தது. இன்று எங்கே தமிழ் என பெரும் ஏக்கம்தான் ஏற்பட்டுள்ளது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் எழுதுவது பற்றி தமிழக அரசால் இதுவரை 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.அரசாணை வந்து 27 ஆண்டுகளாகியும், அவை அமல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் அந்த அரசாணைகளை அமல்படுத்த முடியும். தாய் மொழியைப் போற்றும் நாடுதான் தரணியில் உயர முடியும். தமிழருடைய எண்ணத்தில், எழுத்தில், சொல்லில் தமிழ் இல்லையெனில், தமிழும் வளராது, நாமும் வளர மாட்டோம் என்றார் ராமதாஸ். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழ் உயர்வுக்காகப் பாமக மட்டும்தான போராடியது என்பது தவிர பிறவற்றை மிகச் சரியாகத் தெரிவித்துள்ளார்.பின் ஏன் இத்தகைய கட்சியிடம் கூட்டணிக்காகத் தொங்குகிறார்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 4:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக