வியாழன், 10 ஜூன், 2010

இலங்கைத் தமிழர் பிரச்னை: வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை- ராஜபட்சவிடம் திமுக அணி எம்.பி.க்கள் கவலை



தில்லியில் இலங்கை அதிபர் ராஜபட்சவை புதன்கிழமை சந்தித்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆதிசங்கர்.
புதுதில்லி / சென்னை, ஜூன் 9: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபட்சவிடம் திமுக அணி எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர்.ராஜபட்சவை தில்லியில் புதன்கிழமை சந்தித்த எம்.பி.க்கள் தங்களது ஆழ்ந்த கவலையை எடுத்துக் கூறினர்.இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக ராஜபட்ச வந்துள்ளார். அவரை, திமுக அணி எம்.பி.க்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கைத் தமிழர் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பின் போது எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவையும் ராஜபட்சவிடம் அளித்தனர். அதன் விவரம்:இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களின் நல்வாழ்வு, நலம் குறித்த பிரச்னைகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பல்வேறு சமயங்களில் இலங்கை அரசிடம் தனது கவலையை உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், இலங்கையில் போர் முடிந்து ஓராண்டு முடிந்துள்ளது.அங்கு பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்குப் பிறகும், இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறையாமல் மேலும் தொடர்வது மனவருத்தம் அளிக்கிறது. உள்நாட்டில் குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் பல்லாயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் முகாம்களிலே தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.உள்நாட்டில் குடிபெயர்ந்த 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இலங்கை அரசு தாற்காலிகமாக அமைத்துள்ள முகாம்களில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களை மறுகுடியமர்வு செய்ய இறுதி இலக்கு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசை மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.எனவே, மறுகுடியமர்வு பணிகளுக்கு காலம் கடத்தும் போக்கை கைவிட்டு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் உடனடியாக திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும். கவலை அளிக்கிறது: தாற்காலிக முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பருக்குள் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று இலங்கை அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கு எங்களது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை, மறுகுடியமர்வு செய்வதில் உள்ள தாமதத்துக்கு கண்ணி வெடிகளை அகற்றும் பணியே காரணம் என இலங்கை அரசு கூறிவருகிறது. எனவே, கண்ணி வெடிகளை அகற்றும் பணியை விரைவுபடுத்தி இலங்கைத் தமிழர்கள் விரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.காலம் தாழ்த்தக் கூடாது: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மறுகுடியமர்வு பிரச்னைக்கு முறையான வாழ்வாதார திட்டங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சி மையம் ஆகியவற்றை அளிக்க தீவிர முனைப்புக் காட்ட வேண்டும்.இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு ரூ.500 கோடி அளித்தது. இதைப் பயன்படுத்தி பயனளிக்கும் பணியை இலங்கை அரசு இன்னமும் தொடங்கவில்லை. எனவே, இது தொடர்பாக இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஒன்றுபட்ட இலங்கை: ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மைத் தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற 1987-ம் ஆண்டில் இந்தியாவும், இலங்கையும் ஒரு விரிவான ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம், இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காப்பதோடு, இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினரின் நலனையும் மேம்படுத்தலாம். எனவே, 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை உளப்பூர்வமாகவும், விரைவாகவும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்களை விரைவில் மறுகுடியமர்த்தல், அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசு சாதகமான செயல் துடிப்புள்ள நிலையை வகிக்க வேண்டும் என்று திமுக அணி எம்.பி.க்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்க வக்கற்றவர்கள். ஒன்று பட்ட இலங்கை என்கிறார்கள். அந்த நாட்டு இறையாண்மையில் தலையிட இவர்கள் யார்? இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவிக்கவும் கைம்மாறாக மேலும் பல ஒப்பந்தப் பரிசுகளை நல்கவும் சிங்களம் இந்தியத்திடம் இன அழிப்பு அறிவுரைகளையும் நெறியுரைகளையும் பெறவும் நடைபெறும் சந்திப்பிற்காக வந்துள்ள கொலைவெறியனிடம் கஞ்சுகிறார்கள். தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் மொழி , தமிழ்இன அழிப்பு பற்றிக்கூட ஒரு வரி தெரிவிக்கவில்லை. போகட்டும்! தங்களுக்கும் அக்கரை இருக்கிறது எனக் காட்டுவதற்கான நாடகம்தானே! நமக்கென்ன? அவர்களே நடித்து மகிழ்ந்து கொள்ளட்டும்!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக