சென்னை, ஏப். 17: மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பழ. நெடுமாறன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரபாகரனின் தாயார் பார்வதி 80 வயதை எட்டிய மூதாட்டி. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். இலங்கைச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு ஆளாகி, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.அவர் இந்தியாவில் 6 மாதம் தங்கியிருக்க, வெள்ளிக்கிழமை காலையில்தான் இந்திய அரசு விசா வழங்கியது. ஆனால், இரவில் சென்னை வந்த அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். பார்வதி வருவதை இந்திய அரசு விரும்பாவிட்டால், அவருக்கு விசா வழங்காமல் இருந்திருக்கலாம். காலையில் விசா வழங்கிவிட்டு, இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும்.இந்திய அரசு விசா வழங்கிய பிறகு, சிலரின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.22-ல் வைகோ, பழ. நெடுமாறன் உண்ணாவிரதம்: பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய சம்பவத்தைக் கண்டித்து வரும் 22-ம் தேதி சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்.பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள வைகோ, மேற்படி போராட்டத்தை அறிவித்துள்ளார்.கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்:பார்வதியிடம் முறைப்படியான விசா இருந்துள்ளது. அப்படியிருந்தும் அவரை சென்னையில் சிகிச்சை பெறக் கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பியதைவிட மனிதாபிமானமற்ற, கொடுஞ்செயல் வேறு இருக்க முடியாது. இதற்கு மத்திய அரசோ அல்லது அதில் பணிபுரியும் அதிகாரிகளோ, யார் காரணம் என்றாலும், அது கண்டனத்திற்கு உரிய செயலாகும்.க.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்:பிரபாகரனின் தாயார் என்பதைத் தவிர, வேறு எந்தக் குற்றமும் புரியாதவர் பார்வதி. அவர் நாடு கடத்தப்பட்டவரோ அல்லது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியோ அல்ல. எனவே, அவருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.அர்ஜுன் சம்பத் கண்டனம்:சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பியதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.அக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஊடுருவி இந்தியாவின் பொருளாதாரத்துக்கே ஆபத்து விளைவுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேலுப்பிள்ளையின் மனைவியும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாருமான பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. இது மனிதநேயமற்ற செயல்.இதுபற்றி தமிழக முதல்வரோ, மனிதநேய அமைப்புகளோ பேசாமல் இருப்பதும் வருத்தத்துக்குரியது. இதுகுறித்து உரிய விளக்கத்தை தமிழக முதல்வர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.காவல் துறையினர் கருத்துபிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் அதற்கு இந்திய அரசு அனுமதி அளித்திருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், வைகோ மற்றும் நெடுமாறன் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு போகாமல் இருந்திருந்தால் மற்ற பயணிகளை போல எந்த பிரச்னை இல்லாமல் அவர் சென்னைக்கு வந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருக்கக் கூடும் என்று காவல் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
கருத்துக்கள்
செய்திக்குப் பொருத்தமில்லாதவாறு போடப்பட்டுள்ள, புன்னகை பூத்த பழ.நெடுவின் படத்தை அகற்ற தினமணிக்கு வேண்டுகோள்.வேதனையின் வெளிப்பாட்டைப் படம் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 4/18/2010 4:55:00 AM
காவல்துறை மூலம் தமிழக அரசுதெரிவித்துள்ள மழுப்பல் கருத்து ஏற்கக்கூடியது இல்லை. கொலைகாரர்களை அரசு மரியாதையுடன் வரவேற்பார்களாம். பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல அன்பர்கள் சென்றால் தடுப்பார்களாம். புதுவகையான நீதியாக உள்ளது. வீரமணியே கலைஞர் சினம் கொள்வாரோ என்ற அச்சத்தை மீறி (ஒரு வேளை அவரிடம் இசைவு பெற்று) கலைஞருக்கு அவப் பெயர் ஏற்படுத்த செய்த செயல் என அறிக்கை விட்டிருக்கும்போது (அவரின் முழு அறிக்கை காண்க) முதன்மைக் கட்சிகள் அமைதி காப்பதும் நமக்கு இழுக்கே. புகுவிசைவை (விசா) அளித்த பின்பு வானூர்தியில் இருந்து இறங்கவிடாமல் செய்ததில் இருந்தே மனித நேயமற்ற இச்செயல் அரசியலாக்கப்படட்டுள்ளது தெளிவாகிறது. அரசு அவரிடம் மன்னிப்பு கேட்டு அரசு செலவில் அழைத்து முழுப் பண்டுவமும் பார்க்க வேண்டும். இதுவே சரியான கழுவாயாக (பரிகாரமாக) அமையும். ஆள்வோரின் ஈவிரக்கமற்ற செயல் ஆளப்டுவோருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதை உணர வேண்டும். பக்சேவைக் குளிப்பாட்டும் பச்சோந்திகள் விலக வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்