சென்னை, ஏப்.17: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு திருப்பி அனுப்பியிருக்காது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னைக்கு வந்து பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.சிகிச்சைக்காக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அவர் சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விமானத்திலிருந்து அவரை இறங்கவிடாமல், மீண்டும் அதே விமானத்தில் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் நவீன மருத்துவ சிகிச்சைக் கிடைப்பதால்தான் 81 வயதான அவர், இங்கே சிகிச்சைப் பெற வந்திருக்கிறார்.அவர் இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வழங்கியிருக்கிறது. அப்படியானால், இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்பதுதானே பொருள்.அப்படியிருந்தும், சென்னை நகரில் அவரை இறங்க விடாமல் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்குக் காரணமானவர்கள் யார்?நிச்சயமாக தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதனை செய்திருக்கமாட்டார்கள். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. முன்பு ஒருமுறை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் பாலசிங்கம் மற்றும் சந்திரஹாசன் ஆகியோரை சென்னையிலிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கி தடுத்து நிறுத்தியவர் முதல்வர் கருணாநிதி. எனவே, அவரது அரசு இதனை செய்திருக்காது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகள்தான் இந்தச் செயலை செய்திருக்கக் கூடும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள்தான்.அவர்களது அனுமதியின்றி வெளிநாட்டவர் யாரும் இந்தியாவிற்குள் நுழைய முடியாது. சென்னை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார்கள்.மத்திய அரசின் அனுமதியில்லாமல், அவர்கள் கட்டளையிடாமல் இங்குள்ள குடியேற்ற அதிகாரிகள் செயல்பட்டிருக்க முடியாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்பதில் சந்தேகமில்லை. உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற மனிதநேயமற்ற செயல் நடந்ததாக வரலாறு இல்லை.எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைப் பெற அனுமதிப்பதுதான் உலக நாடுகள் கடைப்பிடித்து வரும் நடைமுறை.நமது பகை நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கே வந்து, சிகிச்சை பெற்றுச் செல்ல அனுமதி வழங்கி வரும் நிலையில், இங்குள்ள ஆறரை கோடி தமிழர்களை நம்பி சிகிச்சைப் பெற வந்த பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே, சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள பார்வதி, மீண்டும் சென்னைக்கு வந்து தேவையான மருத்துவச் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்த அனுமதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.
கருத்துக்கள்
அப்பாடா! இராமதாசிற்குத் திமுக வுடன் ஒட்ட ஒரு வழிகிடைத்து விட்டது. அது சரி! தமிழக அரசிற்குத் தெரியாமல் தமிழகக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் எனில் கையாலாகாத முதல்வர் என்ற குற்றச்சாட்டை அல்லவா சொல்கிறார் எனப் பொருள். தமிழ க அரசு செய்திருக்காவிட்டால் ஏன் அமைதி காக்கிறது? பால் திரிந்து வீணான பின்பு நேற்று நன்றாகச் சுவையாக இருந்தது. எனவே, இன்றைய நிலையை நம்பாமல் அதனைப் பயன்படுத்தலாம் எனச் சொல்வாருண்டோ மருத்துவர் அவர்களே! தனித்து விடப்பட்டவரை ஒட்டலாம் என எண்ணிச் செயல்பட்டுத் தலைக்குனிவை அல்லவா ஏற்படுத்துகிறீர்கள். சமுதாயக் கட்சியாகச் சுருக்கிக் கொண்ட நீங்கள் அப்படிக் கூட வாழாமல் மண்டியிட்டு அடிபணிவது ஏன்? ஆட்சிச் சுவை படாதபாடு படுத்துகின்றதா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 4/18/2010 5:10:00 AM
விடுதலைப் புலிகளிடமிருந்து வாங்கிய காசில் ஆளுக்கு கொஞ்சம் போட்டு அந்த அம்மாவை கொண்டு போய் அமெரிக்காவுல வைத்தியம் பாருங்கப்பா !!! இங்க தமிழ்நாட்டுல எங்க பாத்தாலும் கலப்பட மருந்து ::காலாவதி மருந்து நம்பி கூப்பிட்டு கிட்டு வராதீங்க!!! பழி நம்பலுவ மேல வந்துரும் !!! நடந்ததெல்லாம் நல்லதுக்குதான் விடுங்கப்பா !!!