புதன், 21 ஏப்ரல், 2010

காலாவதி மருந்து குறித்து கூறியது என்ன? முதல்வர் விளக்கம்



சென்னை, ஏப். 20: காலாவதி மருந்து குறித்து நான் சொன்னதை வேண்டுமென்றே திசை திருப்பி பழி போடுவதாக முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் ஆகியோர், காலாவதி மருந்தால் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஆனால், காலாவதி மருந்தால் பாதிப்பில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது டாக்டர்களின் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது என்றனர்.
அவர்களுக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியது:
காலாவதி மருந்துகளைவிட போலி மருந்துகள்தான் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்று நான் சொன்னதை வேண்டுமென்றே திசை திருப்பி, ஏதோ முதல்வர் காலாவதி மருந்துகளால் யாருக்கும் ஆபத்தில்லை என்று தவறாக சொன்னதாக சில நண்பர்கள் இங்கு (சட்டப் பேரவை) மட்டுமல்ல, வெளியிலும் கட்சிப் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்விதமான நன்மையும், தீமையும் இல்லாமல் காலாவதி மருந்து பயன்படாமல் போகிறது. ஒரு நோயாளிக்கு அந்த மருந்தைக் கொடுத்தால், கொடுக்கப்படாத மருந்தைக் கொடுத்ததாக ஆகிவிடும் என்றுதான் இந்த அவையில் விளக்கம் அளித்துள்ளேன். வேண்டுமானால் நான் அளித்த விளக்கத்தை மீண்டும் படித்து பார்த்துக் கொள்ளலாம். காலாவதி மருந்தைவிட போலி மருந்துகள் ஆபத்தானவை என்பதற்காகத்தான் இதனை சொல்ல வந்தேன்.
காலாவதி மருந்துகள் விற்கப்படுவதால் சிலர் பிழைக்கிறார்கள். ஏமாற்றி வாழ்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டவுடன் தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், அமைச்சர் ஆகியோரை அழைத்து, ஆராய்ந்து அன்றைக்கு நான் இட்ட உத்தரவினால்தான் இன்று பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவசரப்பட்டு வேண்டுமென்றே என் மீது அபவாதம் கூற வேண்டுமென்று எண்ணுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைவரும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வேறு கட்சிக்காரர்கள் என்றால், நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன். எதையும் துல்லியமாக ஆராய்ந்து, அதைப் பற்றிச் சொல்லக் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியே இப்படிப்பட்ட மகத்தான தவறை, பழியை என் மீது போடுமேயானால், அதற்காக நான் மிக மிக வருந்துகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.
பாலபாரதி (மார்க்சிஸ்ட்): காலாவதி மருந்துகளும் உயிரைக் குடிக்கும் என்றுதான் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பேசினார். மற்றபடி எவ்வித அரசியல் நோக்கமும் எங்களுக்கு இல்லை என்றார். அத்துடன் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.


பயன்கெடு முடிந்த மருந்தை உட்கொள்ளுவதால் தீமை எதுவும் விளையாது என்று சொல்வதும் தவறே. மருந்தாகச் செயல்படாத ஒன்றை உட்கொள்ளுவதும் உடல் நலனுக்கு ஊறு விளைவிப்பதே. தீமை விளைவிக்கும ஒன்றைத் தீமை யல்லாதது எனச் சொல்வதன் மூலம் அதனை வழங்குவோர் குற்றமற்றவர் எனக் கூறுவதாகத்தானே பொருள். தான் தவறாகப் புரிந்து கொண்டுதெரிவித்ததாக முதல்வர் தெரிவிப்பின் நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/21/2010 3:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக