புது தில்லி, ஏப்.19: விடுதலைப் புலிகள் தலைவர் வி. பிரபாகரனின் தாயாருக்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தில் மத்திய அரசு மீது திமுக கடுமையான குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கவேயில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
÷பிரபாகரனின் தாய் உடல் நலக்குறைவால் மலேசியாவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த வாரம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் இவருக்கு குடியேற்ற உரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்து மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர்.
÷இந்நிலையில் இந்தப் பிரச்னையை மக்களவையில் திங்களன்று அக்கட்சித் தலைவர் டி.ஆர். பாலு எழுப்பினார். கேள்வி நேரம் முடிந்த பிறகு இப்பிரச்னை எழுப்பினார். உடனே பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சியான திமுக இக்குற்றச் சாட்டைக் கூறுவது விநோதமாக உள்ளது என்றார்.
திமுகவும் குற்றச்சாட்டு:÷தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, பிரபாகரனின் தாயார் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு நபர் என்றே பேசினார்.
÷இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவேயில்லை. அவர் மீது எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த அவரை திருப்பி அனுப்பியது ஏன்? என்பது புரியவில்லை என்றார்.
÷இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, அவருக்கு விசா வழங்கிய நிலையில் இங்குள்ள அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும் என்றார்.
2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பார்வதி மற்றும் அவரது கணவர் திருச்சியிலிருந்து இலங்கைக்குச் சென்றபோது மீண்டும் அவர்களிருவரும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
÷இதனால் அதிமுக உறுப்பினர்கள் மிகுந்த கோபமடைந்தனர். உடனே அதிமுக கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பித்துரை குறுக்கிட்டு, அப்போது திமுக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.
÷மருத்துவ சிகிச்சைக்காக வந்தவரை மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பிய மத்திய அரசின் செயலை மன்னிக்க முடியாது என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.
÷தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இது தொடர்பான விவாதத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பார்வதியை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசின் பங்கு ஏதுமில்லை. அவரை திரும்ப சென்னைக்கு வரவழைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக கூறினார்.
÷இதை வெளிப்படுத்தும் விதமாக டி.ஆர். பாலுவின் பேச்சு மக்களவையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில்...: இப்பிரச்னை திங்களன்று மாநிலங்களவையிலும் வெடித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா இது தொடர்பாக பேசுகையில், இந்த சம்பவம் மிகவும் வெட்கக் கேடான மனிதாபிமானமற்ற செயல் என்றார். இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது. மற்றொருபுறம் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இத்தகைய நடவடிக்கை இந்தியாவுக்கு மிகப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
÷இவருக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர் எஸ்.எஸ். அலுவாலியா பேசுகையில், குழந்தைகள் குற்றம் செய்தால், அதற்கு பெற்றோரைத் தண்டிக்கும் சட்டம் உள்ளதா? என்று கேட்டார்.
÷இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளி நளினிக்கு மன்னிப்பு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில் இதுபோன்ற நிகழ்வு மிகவும் வேதனையளிக்கிறது என்றார். இவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர் டி. சிவா மற்றும் அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.
டி.ஆர்.பாலுவைப்பாராட்ட வேண்டும் என முழுச் செய்தியைப் படிக்கும் பொழுது ஒருநபர் எனறே பேசியுள்ளார் என்பது தெரிய வருகிறது. ஆக, உணர்வின் அடிப்படையிலான பேச்சு அல்ல இது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் காங்.உடன் இணக்கமாக உள்ள ஒரே கட்சி தி.மு.க.என இதழ்கள் குறிப்பிடுகின்றன. அந்தக் கட்சிக்கு இந்த அவமான நிலை. மாநிலத் தன்னாட்சி கேட்கும் தி.மு.க. இந்த அவமானததை எப்படி தாங்கிக் கொள்கிறது? பதவி பேரத்திற்குக் கருவியாகவா? தன்மானத்திற்கு ஏற்பட்ட அறைகூவலாகவா? 2003 இல் மறுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு என்றால், இதனை அறிந்து புறம் தள்ளித்தான்அல்லது அப்படி எதுவும் குறிப்பு இல்லாமல்தான் புகுவுரிமை (விசா) வழங்கப்பட்டிருக்க வேண்டும். மூவேந்தர்களுக்குப்பின் அமைந்த மாவீரர் அன்னைக்கு இழைத்த அநீதிக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினருக்குப்பாராட்டுகள். இனியேனும் கொலைகாரக் கூட்டணியை ஆட்சிப் பீடத்தில் அமர விடாது தக்கவர்க்கு வாக்களிப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (அம்மையார் விண்ணப்பித்தால் முதல்வர் கடிதம் எழுதி விடைதான் வாங்கித் தருவார். இசைவுஅன்று)
4/20/2010 3:34:00 AM