நான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்கான கல்லறை எனலாம்: நளினி
[கடிதம் இணைப்பு] கடந்த 19 ஆண்டுகளாக சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள நளினி, சிறையில் தமக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம். இந்த கடிதம் அனுப்பப்பட்டதை தொடர்ந்து 20-04-2010 அன்று காலை 6.30 மணியளவில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் அறையில் துணிப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வேலூர் பாகாயம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
06-04-2010
அனுப்புனர்:
S. நளினி,
C 810,
பெண்கள் தனிச்சிறை,
வேலூர் – 632 002
பெறுனர்: சிறைத்துறை தலைவர்,
தமிழ்நாடு சிறைகள்,
சென்னை – 600 008.
வழி : உரியவர் ஊடாக
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
நான் கடந்த 19 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் இருக்கிறேன். அதில் 13 ஆண்டுகாலம் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுட் சிறைவாசியாக இருந்து வருகிறேன். எனது கணவரும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருக்கிறார்.
இதுவரை சட்டப்படியும் சிறை விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டே நடக்கிறேன். எந்தவிதமான கெட்ட பழக்கங்களுக்கும் நான் அடிமை இல்லை. தவிர சிறை ஊழியர்களுக்கு கையூட்டு கொடுத்து அவர்களிடம் தேவையானவைகளை சாதிக்கும் பழக்கமும் எனக்கு இல்லை. இதனால் நான் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகிறேன். அவற்றில் முக்கியமானவை:
என்னை மனு பார்க்க வருபவர்களை பல மணி நேரம் காக்க வைத்து இழுத்தடிப்பது, எனது அம்மா, மாமனார், மாமியார் போன்ற வயதானவர்களை 2 மணி நேரம் முதல் 4 மணிநேரம் காக்க வைத்து திரும்ப அனுப்பிவிடுவது, அனுமதி மறுப்பது, மனு பார்க்க வருபவர்களை விரட்டி அடிப்பது, அவதூறாக பேசுவது, வாய் கூசும் விதமாக திட்டுவது என்று எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்கிறேன். என்னை மனுப்பார்க்க வருபவர்களை திட்டமிட்டு அலைக்கழிப்பது, மரியாதை குறைவான வார்த்தைகளால் இம்சிப்பது என்று யாரும் என்னை நேர்காண வரக்கூடாது என்ற விஷமத்தனமான வேலைகளை செய்கிறார்கள்.
என் வழக்கறிஞர்களை வேண்டுமென்றே காக்க வைத்து காரணம் கேட்டால் நான் தயாராகவில்லை என்று அவர்களிடம் என் மேல் பழிபோட்டு அவர்களை திசை திருப்புவது, அபாண்டமாக என்னையே என் உறவினர்களிடம் எதிராக பயன்படுத்துவது, தொடர்கதையே.
எனது நேர்காணலில் கொண்டு வரும் பொருட்களை எல்லாம் பயன்படு்த்தவே முடியாத அளவிற்கு சோதனை என்ற பெயரில் நாசம் செய்வது, துணிகளை கிழிப்பது, கொண்டுவரும் பைகளை கிழிப்பது என்று அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறிக்கொண்டே போகிறது. நானும் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் சகித்துக் கொண்டும் போகிறேன்.
இதுவரை 19 ஆண்டுகளில் ஒருமுறை கூட சிறைவிதிகளுக்கு புறம்பான பொருட்களை கொண்டுவந்ததும் இல்லை. எனது நேர்காணலில் எனது உறவினர்களை சோதனை செய்து கண்டுபிடித்ததும் இல்லை.
சிறைவிதிமுறைகள் தண்டனை சிறைவாசியை 15 நாட்களு்ககு ஒரு நேர்காணல் மற்றும் வாரம் ஒரு கடிதமும் அனுமதிக்கிறது. கடிதத்தை நேர்காணலாக மாற்றி மாதம் 6 நேர்காணலும் பார்க்க முடியும். அதன்படியே கடந்த 5-6 வருடங்களாக அனுமதிக்கப்படுகிறோம். இந்த சிறையில் “ஏ” வகுப்பு சிறைவாசிகளுக்கான தனிமனு அறையும் கிடையாது. எம்மை சந்திக்க வரும் குழந்தைகளையும் நாம் தொடவும் முடியாத சூழ்நிலையே பெண்கள் சிறையில் நிலவுகிறது. ஆண்கள் மத்திய சிறைகளில் குழந்தைகள் தந்தையுடன் இருப்பதில்லை. ஆனால் பெண்கள் சிறையில் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன், கைக்குழந்தையுடன் கைதாகி வருவதால் பெண் சிறைவாசிகளுடன் குழந்தைகள் சிறையில் இருக்கிறார்கள். சந்திக்கவும் வருகிறார்கள். இது எமக்கு மிக அதிகமான மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்கான கல்லறை எனலாம்.
சிறை மருத்துவரும், வெளி மருத்துவமனையிலிருந்து வரும் மருத்துவர்களும் பரிந்துரைககும் உணவுகளோ, பழங்களோ, காய்கறிகளோ நாம் பெற வழியில்லை. நேர்காணலில் கொண்டுவந்தாலும் சோதனை என்ற பெயரில் அழுக்கான இடங்களில் வீசுவது, அழுக்கான கைகளால் சாப்பாட்டு பொருட்களை கையாள்வது, ஏதும் கேட்டால் அவற்றை திருப்பி அனுப்புவது போன்ற அராஜக போக்கு அவர்கள் விருப்பம் இல்லாத எமது உறவினர்களை திருப்பி அனுப்புவது என்று நாளொரு வண்ணமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் எம்மை யாரும் மனு பார்க்க வரக்கூடாது என்ற காரணம் எம்மை யாரும் மனுப்பார்க்க வரக்கூடாது என்ற காரணம் எம்மை யாரும் மனுப்பார்க்க வரக்கூடாது என்ற திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகமும், உள்நோக்கங்களும்தான்.
இதற்கான தீர்வுதான் என்ன? எமக்கு உரிய பரிகாரம் கிடைக்குமா? சிறைத்துறை நேர்காணல் நேரங்களை எமக்கான தனிப்பட்ட நாள் என்று ஏதும் அறிவுறுத்தப்பட்டால் அதன்படி நேர்காணல் செய்யவும் நான் தயாராகவும் இருக்கிறேன்.
உங்களின் அவசரமான தலையீடு மற்றும் உத்தரவுகள் எமக்கு உரிய பரிகாரம் அளிக்கும் என்று நம்பிக்கையுடன்.
நன்றி
என்றும் உண்மையுள்ள
S. Nalini.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக