செவ்வாய், 26 ஜனவரி, 2010

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதே போல் தமிழ் நாட்டில் தமிழ் உண்மையிலேயே ஆட்சி மொழியாகச் செயற்படுத்தப்பட வேண்டும். அவரவர் சிமமாசனம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் தமிழ்த்தாயின் சிம்மாசனத்தை நாமே பறிப்பதை நிறுத்த வேண்டும். உதட்டில் தமிழ் ஆட்சியும் உள்ளத்தில் குடும்ப ஆட்சியும் பண ஆட்சியும் இல்லாமல் என்றும் எங்கும் தமிழே ஆட்சிபுரிய வேண்டும். தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் வெற்றி காணா விட்டால் வேறுயார்தான் வெற்றி காண்பர் என்பதை உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்னை : ""இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழும் வரவேண்டும்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார். மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம், சென்னை பெரவல்லூரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கடந்த 1938 ம் ஆண்டு முதல், இந்தியை கட்டாயமாக திணிக்கப்படுவதை எதிர்த்து 30 க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அந்த மொழிப்போரில் ஈடுபட்டவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இக்கூட்டம் நடக்கிறது. இதை, கொண்டாட்டம் என கூறக்கூடாது. மொழிப்போர் தியாகிகளை நினைவூட்டும் நாள். எதிர்காலத்தில் தமிழுக்கு எந்தவித எதிர்ப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்கான அடையாளம்.



இந்தி மொழிக்கு நாம் விரோதி அல்ல. அதை, நம்மீது திணிக்கும்போது, மறுக்கிறோம்; எதிர்க்கிறோம். கடந்த 1938 ல், ராஜாஜி இந்தியை கட்டாயம் என அறிவித்தார். பின்னர் அவரே, 1965 ல் இந்தியை எதிர்த்தார். இந்தி வந்தால், நாம் இரண்டாவது குடிமகனாக ஆகிவிடுவோம் என்றும் கூறினார். தி.மு.க., 1967 ல் உதயமானபோது, முதல்வர் அண்ணாதுரை மொழிப்போர் தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய தீர்மானம் கொண்டு வந்தார். மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆறுதல் தொடர வேண்டும். இந்தியை, தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, குஜராத் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், ஆட்சிமொழியாக இந்தி, அதையடுத்து ஆங்கிலம் உள்ளது. தமிழையும் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்பதையே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் கோரிக்கையாக வைக்கிறோம். அதற்காக, தமிழை மட்டும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.



1986 ல், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது நானும் அன்பழகனும், அரசியல் சட்டத்தின் ஒருபகுதியை எழுதி கொளுத்தினோம். அதற்காக அன்பழகன் உள்ளிட்ட பத்து எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்பட்டது. நாங்கள் சிங்கத்தமிழர் கூட்டம். நாங்கள் ஆட்சியில் இருப்பது பெரிதல்ல; தமிழ்த் தாயின் சிம்மாசனத்தை பறித்தால், விடமாட்டோம். இந்தியாவில் ஆட்சிமொழியாக, தமிழும் வரவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இவ்வாறு முதல்வர் பேசினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக