திங்கள், 5 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 126:
வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல்



விஜயகுமாரதுங்கா - சந்திரிகா
இந்திய அமைதிப் படையின் பணி குறித்து உலகப் பத்திரிகையாளர்களும், இந்தியப் பத்திரிகையாளர்களும் தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஆசியா வீக், டைம், நியூஸ்வீக் ஆகிய சர்வதேசப் பத்திரிகைகளும், இந்தியாவின் இந்தியா டுடே, சண்டே இதழ்களும் வெளியிட்ட செய்திகள் பெரும்பாலும் அமைதிப் படையின் செயல்பாடுகளைக் கண்டித்தன என்றே சொல்லவேண்டும். நல்லூர் கந்தசாமி கோயிலில் 50 ஆயிரம் பேர் அடைபட்டு, உணவுக்கும், படுத்துறங்கவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் மக்கள் படும் துன்பங்கள் படங்களுடன் வெளியாயிற்று. சண்டே இதழ் விடுதலைப் புலிகளின் நிலையை மறைமுகமாக ஆதரித்தும், இந்தியா டுடே, இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் அட்டைப் படத்துடன் செய்திக் கட்டுரைகளை வெளியிட்டன. லண்டனில் இருந்து வெளி வரும் பத்திரிகைகளோ, ராஜதந்திர ரீதியில் தங்களது விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டன. இவ்வாறான செய்திகளின் மூலம் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் வன்னியின் காட்டுப் பகுதியில் முகாம் அமைத்து கொரில்லாத் தாக்குதலைத் தொடர்கிறார்கள் என்றும், பிரபாகரனின் மனைவி மதிவதனி, குழந்தைகள் உள்ளிட்டவர்கள் நல்லூர் கந்தசாமி கோயிலில் மக்களோடு மக்களாக அடைபட்டிருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. சாவகச்சேரி சந்தையில் வீசப்பட்ட குண்டுகளால் ஏற்பட்ட நாசமும், யாழ்ப்பாணம் மருத்துவமனை குண்டுவீச்சு அவலமும் உலகின் கண்களுக்குத் தெரியவந்தது. டைம் பத்திரிகை, அகதி முகாம் மீது குண்டு வீசித் தாக்கியதை படங்களுடன் வெளியிட்டிருந்தது. இந்தியா டுடே, இந்தியச் சிப்பாய் உயிரிழப்பைப் பெரிதாக்கி தனிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இவையெல்லாமாகச் சேர்ந்து, இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் ரகளையை ஏற்படுத்தியது. இதற்கான அரசு பதிலால் உறுப்பினர்கள் கோபமுற்று அவையைவிட்டு வெளியேறினர்.இலங்கையின் கனவுக் கதாநாயகன் விஜயகுமாரதுங்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் மகள் சந்திரிகாவின் கணவர். வடக்கின் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண பல முயற்சிகளை மேற்கொண்டவர். அரசே எதிர்த்தும் யாழ்ப்பாணப் பயணம் மேற்கொண்டதன் மூலம் சிங்களக் கைதிகள் விடுவிக்கப்படவும் காரணமாக இருந்தவர். அப்போது கிட்டு, யாழ் தளபதியாக இருந்து விஜயகுமாரதுங்காவையும் புத்த பிக்குகளையும் வரவேற்றார். விஜயகுமாரதுங்காவின் அரசியல் மற்றும் வடக்கு-தெற்குக்குப் பாலமாகச் செயல்படும் தன்மைகளால் வெறுப்பு கொண்ட ஜே.வி.பி.யினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிப்ரவரி 16, 1988)விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ராஜீவ் காந்திக்கு அடுத்தடுத்து எழுதிய கடிதங்கள் மற்றும் அவ் இயக்கத்தினர் அளித்த பேட்டிகளின் அடிப்படையில், இந்திய உளவுத்துறை அவர்களை மிகவும் பலவீனம் அடைந்த ஒரு குழுவாகக் கணிக்க முற்பட்டது. இந்தக் கணிப்பின் விளைவாக தில்லித் தலைமையும் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியதுடன், புலிகளுக்கு எதிரான இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் இறங்கியது. இந்தக் கூட்டமைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பை தலைமை ஏற்க வைத்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தில் 13-வது திருத்தத்தைக் கொண்டுவர இலங்கை அரசு முனைப்புக் காட்டியது. இந்த நெருக்கடிக்கு மற்றொரு காரணம், இலங்கையின் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய நிலை. மற்ற பகுதிகளுக்குத் தேர்தல் நடந்து, வடக்கு-கிழக்கில் தேர்தல் நடக்கவில்லையென்றால், அது ஜெயவர்த்தனாவுக்கு மிகப் பெரிய தலைவலி ஆகிவிடும். எனவே, வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெறுவதைவிட தேர்தலை நடத்துவது என்பது அவரது கட்சிக்கும் ஆட்சிக்கும் அவசியமான ஒன்றாக இருந்தது. இதன்பின்னர், வரப்போகும் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இத் தேர்தல் அவசியமாயிற்று. இதேபோன்ற ஒரு நெருக்கடி இந்தியாவிலும் இருந்தது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இறந்தபின்னர் இலங்கை இனப் பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமும், தொடர் ஆளுநர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் தேர்தல் நடத்தவேண்டியிருந்தது. அதன் அடிப்படையில் அமைதிப் படை, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரை முன்னிறுத்த முனைந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினருக்குப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தலில் நிற்க முழுமையான பாதுகாப்புக்கும், தேர்தல் செலவுகளுக்குப் பண உதவியும் செய்வதுடன், பாதுகாப்புக்கு என்று ஆயுதங்களும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாகத் தகவல்கள் உண்டு. எனவே, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரும், ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினருடன் உடன்பாடு செய்துகொண்டு தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். இலங்கைத் தேர்தல் விதிப்படி, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப். தங்களை உடனடியாகப் பதிவு செய்து கொண்டன. ஈரோஸ், விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, பிளாட், டெலோ அமைப்புகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. டெலோ பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கூட்டணியுடன் சேர்ந்துகொண்டது. (ஆதாரம்: அசைன்மெண்ட் ஜாஃப்னா -லெப்டி.ஜெனரல் சர்தேஷ் பாண்டே, பக்.79) யாழ்ப்பாணவாசிகள் இந்தத் தேர்தலில் பங்கு பெறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அவர்களைச் சம்மதிக்க வைக்க இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். கூட்டத்தில் மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது. பொதுமக்களில் சிலர் எழுந்து, ""இந்தத் தேர்தலில் பல்வேறு போராளிக் குழுத் தலைவர்களை அழைத்துப் பேசும்போது, விடுதலைப் புலிகளை மட்டும் ஏன் அழைத்துப் பேசவில்லை'' என்று கேள்வி எழுப்பினர். தீட்சித் தரப்பில் பேசியவர், ""தேர்தல் என்று வரும்போது, இலங்கைத் தமிழர்கள் எனக் குறிப்பிடும்போது அது யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டும் குறிக்காது'' என்று விளக்கினார். ""அப்படியென்றால் இந்தக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவது ஏன்'' என்று கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த இந்திய அதிகாரிகள், ""இந்த மேடையிலேயே விடுதலைப் புலிகளுக்கும் அழைப்பு விடுவதாக எடுத்துக் கொள்ளலாம். அவர்களைத் தேர்தலில் பங்கேற்குமாறு கேட்டு வருகிறோம். அவர்கள் சுயேச்சைகளை ஆதரித்தாலும் ஆதரிக்கலாம்'' என்றார். இந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக சிவானந்த சுந்தரம், ஈரோஸ் பாலகுமாரி உள்ளிட்டோர், ""இது நம்பிக்கைத் துரோகமாகவும், ஏமாற்றுவித்தையாகவும் கருதப்படும்'' என்று வருத்தம் தெரிவித்தனர். (மேற்கூறிய நூல் பக்.79) தமிழீழப் பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான அமைதியான சூழ்நிலை இல்லை என்றும், தேர்தலை நடத்துவதற்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டுத் தேர்தலை நடத்தும்படியும் தமிழீழத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் பொதுநல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் இலங்கை-இந்திய அரசுகளுக்குக் கோரிக்கை வைத்தன. தேர்தலில் கடைசி நேரத்தில் நியமன பத்திரங்களைத் தாக்கல் செய்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றை நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்றுதான் அறிக்கை வெளியிட்டது. ஆளும் ஜெயவர்த்தனா கட்சியின் கிழக்கு மாகாண எம்.பி.க்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை என்று ஜெயவர்த்தனாவிடம் நேரடியாகக் கூறினர். ""அம்பாறை மாவட்டத்தில் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட 24,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. அவர்களில் 11,000 பேருக்கு மட்டும் உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'' (வீரகேசரி-5.11.88) ஒப்பந்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏராளமான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டார்கள். திருகோணமலை புல்மோட்டையில் ஏராளமான தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள கெüளியாமடுவில் சிங்களக் குடியேற்றங்கள் பெருமளவில் நடந்துள்ளன. (வீரகேசரி-22.10.88). தினசரி பத்திரிகைகள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டன. அது மட்டுமல்ல- ""கிழக்கு இலங்கையில் உள்ள மக்களில் கலவரங்களினால் தம் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் தமது இடங்களுக்குச் செல்ல முடியாதவாறு இருக்கின்றனர். தமிழ் மக்களுக்குத் தர வேண்டிய அதிகாரங்கள் வரையறுக்கப்படாது, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை இலங்கை அரசியல் சட்டத்தின் கீழ் நிரந்தரமாக்காது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பொருள் இல்லையென்றும், நெருக்கடி நிலையை நீக்கி அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேர்தலுக்கு முன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசவேண்டும் என்றும்,'' தமிழ்மக்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.நாளை: தேர்தல் குளறுபடிகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக