திங்கள், 5 அக்டோபர், 2009

பெண்களுக்கெதிராக இலங்கை ராணுவம் கற்பழிப்பை ஓர் ஆயுதமாக பயனபடுத்துவதாக கூறியுள்ள ஹிலாரியின் குற்றச்சாட்டு இலங்கையை ஆட்டம் காண வைத்துள்ளது.

15 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் சுழற்சிமுறைத் தலைமைப்பொறுப்பை செப்டம்பர் மாதம் ஏற்ற அமெரிக்க வெளிவிவகார செயலாலர் ஹிலாரி கிளின்ரன், கடந்த புதன்கிழமைய கூட்டத்தில் கொங்கோ, சூடான், மியன்மார் நாடுகளில் நடந்தது போல, இலங்கை இராணுவத்தினரும் பாலியல் துஷ்பிரயோகத்தை யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினர் எனக் கூறியிருந்தமை பலத்த பாதிப்பை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது.

கொங்கோ அல்லது சூடான் போன்ற சில நாடுகளிலேயே கற்பழிப்பை போர் ஆயுதமொன்றாகப் பாவனை செய்துள்ளதாக பலரும் நினைக்கக்கூடும். ஆனால் உண்மை நிலமையோ பயங்கர மோசமானது. கற்பழிப்பை போர் ஆயுதமாக முன்னர் போஸ்னியா, பர்மா, இலங்கை மற்றும் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளமையை நாங்கள் கண்டுள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், கற்பழிப்பைப் புரிந்த துரோகிகளுக்கு பல நாடுகளிலும் பல சந்தர்ப்பங்களிலும் தண்டனை வழங்கப்படாததால் அவர்கள் மேலும் மேலும் இம்மாதிரியான தண்டனையை மக்களுக்குக் கொடுக்க ஊக்கப்படுத்தப்பட்டனர் என ஹிலாரி கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிலுள்ள மக்கள் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்படவேண்டியது மிக முக்கியமாக கடப்பாடு என்று அவர் மேலும் அழுத்தமாகக் கூறினார். ஐ.நா சாசனத்தின்கீழ் சர்வதேச அமைதியும் பாதுகாப்புமே மிக முதன்மையான பொறுப்பாகக் கூறப்பட்டுள்ளது. இப்போது, அந்த பொறுப்பில் அனைத்து மக்களினதும் உயிர் மற்றும் உடல்களைப் பாதுகாப்பதும் உள்ளடக்கப்படுகிறது. இதில் உலகின் பாதியாக உள்ள பெண்களும் உள்ளடக்கப்படுகிறார்கள். அமைதியும், நிலையான தன்மையும் சவால்களாக இருக்கின்ற நாடுகளில் இந்த பொறுப்பு குறிப்பிடத்தக்களவு கடுமையாக உள்ளது எனவும் தொடர்ந்து கூறினார்.

ஹிலாரியின் இக்கூற்றுக்குப் பதிலளித்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சு, தமது வலைத்தளமூடாக மறுப்பு அறிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரி பொறுப்பற்ற விதமாக உண்மைக்குப் புறம்பாக ஹிலாரி கூறியுள்ளதாகவும், இவ்வாறு இலங்கை இராணுவத்தினர் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபட்டதற்கான அடிப்படைகள் எதுவுமே இல்லை என்றும் அந்த வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹிலாரியின் கூற்றுக்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகும். இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதனைக் கருதுகிறோம். முன்பு ஒருபோதும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வல பத்திரிகையாளர்களுக்குக் கூறியுள்ளார்.

வோஷிங்டனை தளமாகக் கொண்டு இயங்கும் குழுவின் செயற்பாட்டாளர் ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்:

ஆனால் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தமது கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் பெண்களையும், போரின்போது கைதுசெய்யப்பட்ட புலிப்போராளி பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதற்கான ஆதாரங்கள், 1996 செப்டம்பர் மாதத்தில் இலங்கை இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட கிரிஷாந்தி குமாரசாமி காலம் தொடக்கமே இருப்பதை அறிக்கைகள் கூறுகின்றன. கிரிஷாந்தி குமாரசாமி யாழ்ப்பாணம் கைதடி இராணுவ முகாமில் வைத்துக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புலிப் போராளிப் பெண்களை இலங்கை ராணுவத்தினர் நிவாணப்படுத்தி வல்லுறவுக்கு உட்படுத்துவதை வீடியோக்கள் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

ஹிலாரியின் அறிவிப்புக்கு பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமா விடுக்கும் அதிகாரபூர்வ வெள்ளைமாளிகை அறிக்கையில், "பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகள் சகிக்கமுடியாதவை. அவை நிறுத்தப்படுதல் அவசியம். அடிப்படை மனித உரிமைகள் மற்றும் உலக பாதுகாப்பின் சிக்கல்கள் உள்ள நாடுகளில், இதற்கு அமெரிக்க அரசு அதியுயர் முன்னுரிமை வழங்குகிறது. மனித உயிர்களின் கௌரவம் மதிக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக