வெள்ளி, 7 செப்டம்பர், 2018

குவிகம் இல்லம் – அளவளாவல்: இதழாளர் இராணி மைந்தன்

அகரமுதல

  ஆவணி 24, 2049  ஞாயிறு  09.09.2018

காலை  11.00 முதல் 1.00 வரை

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை 600 017

அளவளாவல்: இதழாளர் இராணி மைந்தன்

தொடர்பிற்கு : 9791069435 ; 8939604745

இல்லம் அடைய

வியாழன், 6 செப்டம்பர், 2018

நல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம்.

 

இராசீவு கொலை:

அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத்

தமிழக அரசிற்கு முழு அதிகாரம். 

உச்சநீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு

  21.05.1991 இல் நடைபெற்ற இராசீவு கொலையில் உண்மைக் குற்றவாளிகளைவிட்டு விட்டு அப்பாவிகளைத் தண்டித்துள்ளனர். இவர்கள் விடுதலைக்காகப் பல முயற்சிகள் மேற்கொண்டும் மத்திய அரசுகளின் சதியால் பயனற்றுப் போயிற்று.
  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை விண்ணப்பம் அனுப்பினர். இதில் முடிவெடுக்கக் காலத்தாழ்ச்சி ஆனதை முன்னிட்டு இவர்கள் தண்டனையை வாணாள் தண்டனையாக மாற்றி 2014இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்ளித்தது. இவர்கள் விடுதலை குறித்து அரசு கருதிப்பார்க்கவும் தீர்ப்பளித்தது.
  இம்மூவருடன் வாணாள் சிறைவாசிகளாக இருந்த நளினி, இராபர்ட்டு பயசு, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய நால்வரையும் சேர்த்து எழுவரையும்  விடுதலை செய்ய செயலலிதா தலைமையிலான தமிழக அரசு முடிவெடுத்தது. மத்தியில் இருந்த பேராயக்கட்சியான காங்கிரசும் இப்போது இருக்கும் பா.ச.க.வும்  உண்மைக் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என அப்பாவிகள் விடுதலை ஆவதற்கு எதிர்ப்பாக இருந்தமையால் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
 இவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு 2 மடல்கள் எழுதியது. ஆனால் மத்தியக் குளத்தில் வீசப்பட்ட கற்களாக இவை அமிழ்ந்தன.
அப்போதைய காங்.அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு விடுதலைக்கான இடைக்காலத் தடை பெற்றது. இவ்வாறான அரசியல் யாப்பு அமர்வின் தீர்ப்பிற்கு எதிராகத்  தமிழக அரசு மறுஆய்வு முறையீட்டை அளித்தது.
  நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுவரின் தொடர் முறையீடுகளாலும் தமிழக அரசின் மடல்கள், முறையீடுகளாலும் இதுவரை பயனில்லாமல் இருந்தது.முந்தைய சீராய்வு முறையீட்டு வழக்கில் மத்திய அரசு 3 மாதங்களுக்குள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 கடந்த ஏப்பிரல் 18 இல் எழுவரையும் விடுதலை செய்யக்கூடாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
 இருப்பினும் உச்சநீதிமன்ற அமர்வு நடுநிலையுடன் ஆராய்ந்து எழுவரையும விடுதலை செய்வதற்குத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பளித்துள்ளது.
 முன்பே தமிழக அரசு எழுவர் விடுதலைக்குப்பரிந்துரைத்து ஆளுநருக்குக் கோப்பு அனுப்பியதன் அடிப்படையிலேயே ஆளுநர் விடுதலைக்கு ஒப்பமிடலாம். அல்லது இன்றே ஆளுநருக்கு மற்றொரு தீர்மானம் அனுப்பி விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் இந்த எழுவருக்கும் ஆளுக்கு ஒரு  கோடி உரூபாய் உதவித் தொகையாக அளிக்க வேண்டும்.  விடுதலை பெற்ற சிறைவாசிகள் சங்கம் மூலம் இவர்கள் கேட்கும் உதவிகளை அளித்தல் வேண்டும்.
 இவ்விடுதலைக்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
  20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இசுலாமியர் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
  இவர்களுக்கும் இவர்களுக்கு அளிப்பதுபோன்ற மறுவாழ்வு உதவிகள் அளிக்க வேண்டும்.
  இவர்களின் விடுதலைக்குக் காரணம் மேனாள் முதல்வர் செயலலிதா எடுத்த விடுதலை முடிவு என்பதால்  இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.
  விடுதலைக்குப் பின்னர அமைதியான மகிழ்வான வாழ்வு பெற எழுவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
நல்ல தீர்ப்பு வழங்கிய உச்சநீதிபதிகளுக்குப் பாராட்டுகள்!
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. (திருவள்ளுவர், குறள் 571)

புதன், 5 செப்டம்பர், 2018

நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு!

அகரமுதல


    (ஆடி 29, 1974 /13.08.1943 – ஆவணி 19, 2049/04.09.2018)

நலிவிலும் உழைத்த கண்ணியம்

குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு

  கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்கள், நெஞ்சாங்குலை பாதிப்பால் இடருற்றார்; நேற்று (ஆவணி 19,2049-04.09.2018) இரவு குடும்பத்தினரும் தமிழன்பர்களும் தொழிலாளத் தோழர்களும் வருந்தும் வகையில் இவ்வுலக வாழ்வு நீத்தார். அவரது இறுதி வணக்க ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.
நிகழ்விடம்:
2068, கோபுரம் 2 ஆ, மதிப்பு எழில் தோற்றம்
(Tower 2 B, Prestige Bella Vista)
ஐயப்பன்தாங்கல், சென்னை 600056
(ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் எதிரில்)
தொடர்பிற்கு:
மகன் குகன் : 9677277113
மருமகன் பார்த்திபன் : 9488514067
மருமகன் சிவா:  9840098618
  உழைப்பாளி, எளியவர், தமிழன்பர், இதழாசிரியர், படைப்பாளி, தொழிலாளர் தோழன், கண்ணியம் மிகுந்தவர் எனப் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் கண்ணியம் குலோத்துங்கன். அவர் பணிகளை நினைவுகூரும் வகையில் ‘கண்ணியக் காவலர் குலோத்துங்கன் எனச் செட்டம்பர் 2015 இல் எழுதிய கட்டுரையைக் காண வேண்டுகிறேன்.
  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அதனால் அவர்களின் மக்கள் மீதும் அளவற்ற அன்பு கொண்டு பழகினார். எனவே, மதிப்பிற்குரிய அப்பெருந்தகை என் மீதும் அன்பு கொண்டிருந்ததில் வியப்பில்லை.
 “தமிழறிஞர்கள் கணிணியிலிருந்து விலகி உள்ளனர். அவர்கள் அறிவதற்காகக்கணிணி குறித்துத் தொடர் ஒன்று எழுதித் தாருங்கள்” என வேண்டினார். ‘கணிணியும் கைப்பழக்கம்’ என்னும் தொடர் அதனால் வந்தது. ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட மின்னஞ்சல் சிக்கல், கணிணிப்பாழ் முதலியவற்றால் அனுப்பிய கட்டுரைகள் அவரிடமும் சென்று சேரவில்லை. என்னிடமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. புதியதாக மீண்டும் எழுத நேரமின்றி அத் தொடரை முடிக்காதது உறுத்தலாகவே உள்ளது.
 அவர் நலமாக இருந்த பொழுது திங்கள் இருமுறையேனும் நாங்கள் அலைபேசி வாயிலாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் உழைப்பிற்கேற் மதிப்பைத் தி.மு.க.வும் அரசும் தரவில்லை என்பது என்னைப்போன்ற பலரின் வருத்தம். தன் உழைப்பிற்கேற்ற மதிப்பை வழங்கவில்லை என்ற வருத்தம் அவருக்கிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் “தன் கடன் உழைப்பதே” என வாழ்ந்தார்.
 மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவையும் பிற ஆண்டுவிழாவையும் சிறப்பாக நடத்தினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழறிஞர்கள் குவிய வேண்டும் எனத் தணியா ஆர்வம் கொண்டவர். அவ்வாறு தம் சொந்தச் செலவில் மிகச் சிறப்பாகத் தமிழறிஞர்கள் கூடும் விழா நடத்தியும்  அமைதி கொள்ளவில்லை. அங்கு வராதவர் யாருமில்லை என்னும் அளவிற்கு அனைவரையும் அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுவந்தார். அவருக்கு ஏற்பட்ட நலக்குறைவு அதனை நிறைவேற்ற இயலவில்லை.
 தமிழறிஞர்களைப்பற்றி அட்டைப்படத்தில் படம் வெளியிட்டுக் கட்டுரை எழுதி வந்த அவர், என்னைப்பற்றியும் எழுதிப் பெருமைப்படுத்தினார். மேலும் ‘அண்ணா வளர்த்த கண்ணியக் காவலர் விருது’ வழங்கிச்சிறப்பித்தார்.
  யாரையும் ஊக்கப்படுத்திச்சிறப்பிப்பது அவர் பண்பாடு. எனவே, எங்கள் மகன் பொறி.தி.ஈழக்கதிர் அவரது இதழ்த் தொடர்பான பணிகளில் உதவியதாலும் இதுபோல் பிறருக்கும் உதவுவது அறிந்ததாலும் நட்பு, அகரமுதல இதழ்கள் சிறப்பாக வருவதற்குத் தொண்டாற்றியமையாலும் ‘கண்ணிய இதழியல் செம்மல் விருது’ அளித்து ஊக்கப்படுத்தினார். ‘செந்தமிழ்ச்செம்மல் இலக்குவனார்’ என்னும் நூலை மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுப் பேராசிரியர் இலக்குவனார் மீதுள்ள தம் மதிப்பை வெளிப்படுத்தினார். இத்தகைய ஆன்றோர் மறைவு தனிப்பட்டமுறையிலும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
 அகரமுதல இதழ், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவார் இலக்கிய இணையம் ஆகியவற்றின் சார்பில் அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

சனி, 1 செப்டம்பர், 2018

முனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு

அகரமுதல

ஆவணி 18,  2049, திங்கள், 03.09.2018 மாலை 6.30
அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், எழும்பூர், சென்னை
தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
 பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆற்றும்
 நினைவேந்தல் உரை  & நூல் திறனாய்வு உரை
1.நினைவில் வாழும் பேராசிரியர் சி.இலக்குவனார் சிறப்பியல்புகள்
  1. தஞ்சை கூத்தரசன் எழுதிய ‘ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்’
 ஏற்புரை: தஞ்சை கூத்தரசன் 

புதுமை இலக்கியத் தென்றல்

(பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)

புதன், 29 ஆகஸ்ட், 2018

மாணாக்கர் நலனுக்கான திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் கல்வி இரவு 2018

அகரமுதல

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய

கல்வி  இரவு 2018

  திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழக இசைவு  பெற்றுப்  பண வசதியின்மையால்  படிப்பைத் தொடரமுடியாத நிலையில் மாணவர் பலர் உள்ளனர். இவர்கள் கல்வியைத் தொடர  நிதி சேர்க்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி  இரவு 2018 என்னும் பெயரிலான நிதிசேர் விருந்து  ஆவணி 08, 2049 – 2018.08.24ஆம் நாள் மாலை 6.3௦மணி முதல் இரவு 9.௦௦ மணிவரை  நடைபெற்றது. திருகோணமலை நகருக்கு  அண்மையில் அமைந்துள்ள இலட்சுமி நாராயணன் கோவில்  விருந்து மண்டபத்தில்  இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரம் உரூபா நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஐந்நூற்றுவருக்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
  புனித சூசையப்பர் கல்லூரி முதல்வர் வண. அல்பிரட் அடிகளார், கிழக்குப் பல்கலைக் கழகத் திருகோணமலை வளாக முதல்வர் முனைவர் வ. கனகசிங்கம், குச்சவெளி பகுதிச் செயலாளர் திரு பொ தனேசுவரன், வெருகல் பகுதிச் செயலாளர் கு.குணநாதன், திருகோணமலை நகரசபைத் தலைவர் திரு நா. இராசநாயகம், பட்டினமும் சூழலும் பகுதி அவைத் தலைவர் மருத்துவர் எ. ஞானகுணாளன், வெருகல்  பகுதி அவைத் தலைவர் திரு க சுந்தரலிங்கம்ஆகியோர் மங்கல விளக்கேற்றினர்.   இசை ஆசிரியர் திருமதி கனகேசுவரி தமிழ் மறை ஓத, இசை ஆசிரியர் திருமதி சித்திரா தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்க, அவையோர்  அமைதி வணக்கம் செலுத்த நிகழ்ச்சிகள் தொடங்கின.
  முதலாவது நிகழ்ச்சியாக உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவியரின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. நீராரும் கடலுடுத்த நிலமடைந்தை என்னும் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலுக்கு  அவர்கள் காட்டிய மெய்ப்பாடுகள் அனைவரையும் வியக்கவைத்தது.
 அதனைத் தொடர்ந்து, செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டுப் பெட்டகமான சிலப்பதிகாரக் கதையை  வில்லிசை மூலம் அவையோரின் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
 இதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் தலைமை உரை ஆற்றினார்.அவர் தனது உரையில், பண வசதியின்மையால்  படிப்பைத் தொடரமுடியாத நிலையில் உள்ள முப்பது  மாணவருக்கு இப்பொழுது திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நிதியுதவி வழங்கி வருகின்றமைபற்றியும்   இன்னும் மாணவர் பலர் உதவி கேட்டுக்  காத்திருக்கின்றமைபற்றியும் எடுத்துரைத்தார்.
  மேலும் அவர், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது, பல்கலைக் கழக  மாணவர் ஒன்றியத்தோடு இணைந்து திருகோணமலை மாவட்டத்தின் பின்தங்கிய   பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் 9,10, 11,12,13 ஆம் வகுப்புகளில் கற்கும்   மாணவருக்குக்   கணிதம், அறிவியல், ஆங்கிலம்    ஆகிய பாடங்களை மாலை வேளைகளிலும் சனி, ஞாயிற்றுகிழமைகளிலும்  கற்பிக்கும் திட்டதைநடத்தி வருகின்றமைபற்றிக் கூறினார்.
  திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள தென்னன் மரவடி ஊர்  1984  ஆம் ஆண்டில் முழுமையாக அழிக்கப்பட்டமைபற்றியும், இப்பொழுது இவ்வூரில்  87 குடும்பங்கள் மீளக் குடி யமர்ந்துள்ளமைபற்றியும்,  இவர்களுக்குத் தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு இருபத்து நான்கு  பேராயிரம்(மில்லியன்) உரூபா செலவில் ஒரு பண்ணையை செட்டம்பர் முதலாம் நாள் தொடங்கவுள்ளமைபற்றியும்  இதன் மூலம் தென்னன் மரவடி மக்களுக்கு வருவாய் கிடைப்பதோடு தென்னன் மரவடியின் இருப்பும்  உறுதிப் படுத்தப்படும் என்றும் கூறினார்.
  திருகோணமலை மாவட்டத்தில்  உள்ள பெண்கள் தலைமை தாங்கும்  குடும்பங்களுக்கு   வருவாய் தரும் தொழில் முயற்சிகளை உருவாக்கிக்கொடுக்கும் திட்டத்தின்  முதற் கட்டமாகச் சாம்பல்தீவு, தம்பலகமம், வெருகல் ஆகிய மூன்று இடங்களில் சத்துமா உற்பத்தித் திட்டத்தை தொடக்கி உள்ளதாகவும் கூறினார்.
  திருகோணமலை மாவட்டப் பாடசாலை மாணவரது  தமிழ்மொழி ஆற்றலையும் மனனத் திறனையும் உயர் எண்ண வளத்தையும்  மேம்படுத்தும் நோக்கோடு  கிழக்கு மாகாணக் கல்வித் திணைக் களத்தோடு இணைந்து 2018 ஐப்பசித் திங்களில் பாடசாலை மாணவரிடையே   திருக்குறட் போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் திருக்குறள் போட்டிக்கான பணிகள்  நடைபெற்றுவருவதாகவும்  இறுதித் தேர்வில்  ஒவ்வொரு பிரிவிலும்  முதலாம்  இடத்தைப் பெறும் மாணவர்க்கு உரூபா  25,000.00 பணப்பரிசிலும் இரண்டாமிடத்தினைப் பெறும் மாணவர்க்கு உரூபா 15,000.00 பணப்பரிசிலும் மூன்றாமிடத்தினைப் பெறும் மாணவர்க்கு உரூபா 10,000.00 பணப்பரிசிலும் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் சான்றிதழும் வழங்கப்படும் என்றும்  கூறினார்.
  அடுத்த நிகழ்ச்சியாக   அ/மி சண்முக மகளிர் கல்லூரி மாணவர் வழங்கிய போதைப் பொருளால் விளையும் தீமையை படம்பிடித்துக் காட்டும் நாடகம்இடம்பெற்றது.
  இதையடுத்து,  கிழக்குப் பல்கலைக் கழகத் திருகோணமலை வளாக முதல்வர் முனைவர்  வ.   கனகசிங்கம்  சிறப்புரை ஆற்றினார்.  அவர் தனது உரையில்  திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதோடு திருகோணமலையின் வளங்கள்,  அவற்றை எவ்வாறு பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்பதுபற்றியும் விரிவாக விளக்கினார்.
  இறுதி நிகழ்ச்சியாக அ/மி சண்முக மகளிர் கல்லூரி மாணவர் வழங்கிய உழைக்கும் மக்களது உள்ளத்து உணர்வுகளை எடுத்துரைக்கும் நாட்டார் பாடல்கள் இடம்  பெற்றன .
  இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது .
  இந்த விழாவுக்கும் உணவுக்குமான  அனைத்துச்  செலவுகளையும் கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்றிருந்தமை பாராட்டத்தக்கது.
  இந்தவிழாவின் மூலம் ஐந்து இலட்சம் உரூபா திரட்டத் திட்டம் இட்டிருந்ததாகவும்.இந்த இலக்கைத்  தாண்டி ஏழு இலட்சம் உரூபா கிடைத்ததாகவும் அமைப்பாளர் கூறினர்
  இந்த விழா நிகழ்ச்சிகளைப் பல்கலைக்  கழக மாணவியர் தொகுத்து வழங்கியதோடு  வரவேற்புரையையும் நன்றி உரையையும் அவர்களே மிகத்திறம்பட ஆற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படங்களை அழுத்திப்பார்த்தால் பெரிதாகக் காணலாம்.)

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41


ஆவணி 14, 2049 (வியாழக்கிழமை) 30.08.2018 

மாலை 5.45 மணி

கிளை நூலகம்,

7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   

சாபர்கான் பேட்டை, சென்னை  

நவீன  விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41

தலைப்பு:     நானும் என் எழுத்தும்

சிறப்புரை : அசயன்பாலா

(சிறுகதை ஆசிரியர், திரைப்படம் குறித்த நூற்படைப்பாளர், திரைப்பட இயக்குநர்)

அன்புடன்
நண்பர்கள் வட்டம் 

தொடர்புக்கு :

அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205