இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஏப்ரல், 2021

நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ? -இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ? 

விவேகானந்தன் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில்  கார்த்திகை 04, 1992 / 19.11.1961 19 அன்று பிறந்தார். அவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 2009ஆம் ஆண்டு மத்திய அரசின் தாமரைத்திரு(பத்ம சிரீ) விருது அவருக்கு வழங்கப்பட்டது. நாட்டிற்கு நல்ல கருத்துக்கள் வழங்கியதைப் பாராட்டி 2015ஆம் ஆண்டு மதிப்புநிலை முனைவர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது

இயக்குநர் கே.பாலசந்தரால் 1987ஆம் ஆண்டு ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் ‘விவேக்’(கு) என்னும் சுருக்கப் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பின்னர் தன் நடிப்புத் திறமையால் புதுப்புது அருத்தங்கள், உழைப்பாளி, நான் பேச நினைப்பதெல்லாம், கண்ணெதிரே தோன்றினாள், சாமி, வீரா, காதல் மன்னன், மின்னலே, பாளையத்து அம்மன், தூள், செல்லமே, பேரழகன், எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி, அந்நியன் போன்ற எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தன் நகைச்சுவை நடிப்பாலும், நகைச்சுவைக் கருத்துகள் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளைத் தெரிவித்து வந்ததாலும் ‘சின்ன கலைவாணர்’ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து அனைவரின் அன்பையும் பெற்று வளர்ந்தார்.

அபுதுல் கலாம் தூதராக மரக்கன்றுகளை நடுதல் போன்ற பல நற்செயல்கள் மூலம் மக்களின் உள்ளங்களில் இடம் பெற்றுள்ளார். இப்பொழுது மகுடைத் தொற்று(கொரானா நோய்)த் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வந்தார். தான் முன் எடுத்துக் காட்டாக இருக்க  விரும்பித் தன் குழுவினருடன் நேற்று முதல் நாள் மகுடைத்தொற்று (‘கோவேக்சின்’) தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

மறுநாள் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று(17.04.21) வைகறை ஐந்து மணிக்குக் காலமானார்.

இவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட அன்று மருத்துவமனையில் 800 பேருக்குத் தடுப்பூசி செலுத்தியும் வேறு யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனையிலும் இவரின் நலக்குறைவிற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளனர். எனவே, மக்கள் நலன் கருதி இவர் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு படுத்தி யாரும் புரளியைக் கிளப்ப வேண்டா. ஒரு வேளை இவருடைய உடலில் ஏதும் நலக்கேடு இருந்து அதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சிலர் கருதலாம். எவ்வாறிருப்பினும் மருத்துவர்கள் தெரிவிக்காத எதையும் யாரும் பரப்ப வேண்டா.

அவரைப்பற்றிய சில நினைவுகள்: நடிகர் விவேக்கு தன் பள்ளிப் பருவத்தில் மதுரையில் திருநகரில் நாங்கள் குடியிருந்த தெருவில்தான் குடியிருந்தார். கணக்குப் பாடங்களுக்காகவும் பொது அறிவுச் செய்திகளை அறியவும் நாள்தோறும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார். நான் வேடிக்கைக் கணக்குகளும் போடுவேன். அவற்றிலும பெரிதும் ஆர்வம் காட்டுவார். பல் குரலிலும் பேசிக் காட்டுவார். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” ஆதலின் நல்ல எதிர்காலம் அவருக்கு உள்ளது எனக் கூறும் பொழுது அவர் அன்னைக்குப் பெரிதும் மகிழ்ச்சி ஏற்படும். பள்ளி முடிந்த பின்னரும் விடுமுறை நாள்களிலும் ஊர் சுற்றாமல் படிப்பு தொடர்பாக எங்கள் வீட்டிற்கு வருவதால் அவர் எதிர்காலம் குறித்துக் கவலை இல்லை என்பார் அவர் அன்னை.

நான் மதுரையில் மாவட்டக் கலைமன்றத்தின் உறுப்புச் செயலராக இருந்த பொழுது, கலைஇளமணி, கலை வளர்மணி, கலை நன்மணி, கலை உயர்மணி, கலைச்செம்மணி, கலை முதுமணி முதலான விருதுகளைக் கலைஞர்களுக்கு வழங்கினோம். மதுரை மாவட்டக் கலைஞர் என்ற முறையில் இவருக்கும் உயரிய விருது அளிக்க எண்ணினோம். ஆனால், அப்போது தொடர்பு  கொள்ள இயலவில்லை. அவர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய பொழுது ஒரு நாள் அவரை எதிர்பாராத வகையாகச் சந்தித்து அளவளாவினேன்.

‘நான்தான் பாலா’ என்னும் அருமையான படத்தில் பிராமணப்பாத்திரத்தில் கதைநாயகனாக நடித்திருந்தார். நல்ல படம்தான். எனினும் அவ்வகுப்பாரின் ஆதரவு வேண்டும் எனக் கருதிச் சமசுகிருதத்திலிருந்து தமிழ் வந்தது என மொழியியல் அறிவு இன்றிக் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கான கண்டனத்தை விளக்கத்துடன் அளித்தேன்.

அப்படத்தில்

“அம்மா ரொம்ப ரொம்ப நகை நான் கேட்கவில்லை

அப்பா மனசுக்குள் வருத்தம் வைக்க வேண்டாம்”

என்ற பாடல் இடம் பெற்றது. அவர் படித்த திருநகர் சோசப்பு பள்ளியில் (இப்பொழுது சவிதா பள்ளியாக உள்ளது) ஆண்டுவிழா ஒன்றில் இப்பொழுது மருத்துவராக இருக்கும்  எங்கள் தங்கை செல்வமணி பாடி ஆடிய பாடல். தான் படித்த பள்ளிக்கூடத்தை நினைவுகூரும் வகையில் அப்பாடலைச் சேர்த்தது குறித்து மகிழ்ந்தும் பதிவிட்டுள்ளேன்.

அவர் செயலகப் பணியிலிருந்து விலகி முழு நேர நடிகராக மாறிய பின்னர் அவருடன் எத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அவரது நகைச்சுவைக்காட்சிகளைப் பார்க்கத் தவறுவதில்லை. சிரிப்பின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய முன்னோர் வழியில் இவர் உணர்த்திய குமுகாயக் கருத்துகள் பல. மக்களுக்குத் தொண்டாற்றுவதில் முன்னணியா இருந்த அவர் மறைவு அனைவருக்குமே வருத்தத்தை அளிக்கிறது.

பூமியில் பலப்பகுதிகள் அவரது மரக்கன்றுகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும். ஆழ்ந்த இரங்கல். துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

நடிகர் விவேக்கு புகழ் ஓங்குக!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல



சனி, 7 மார்ச், 2020

பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்!

அகரமுதல

[மார்கழி 07, 1953 /திசம்பர் 19, 1922 –
மாசி 24, 2051/மார்ச்சு 7, 2020]
இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர்(1962), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்(1967-71), தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலானபொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர், இனமானப் பேராசிரியர் எனச் சிறப்பிக்கப்படுபவர், திராவிடர் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய  க.அன்பழகனார், நலக்குறைவின் காரணமாகவும் முதுமையின் காரணமாகவும் மரணம் உற்றார்.
அவரின் மறைவிற்கு இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், அகரமுதல மின்னிதழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதன், 5 செப்டம்பர், 2018

நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு!

அகரமுதல


    (ஆடி 29, 1974 /13.08.1943 – ஆவணி 19, 2049/04.09.2018)

நலிவிலும் உழைத்த கண்ணியம்

குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு

  கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்கள், நெஞ்சாங்குலை பாதிப்பால் இடருற்றார்; நேற்று (ஆவணி 19,2049-04.09.2018) இரவு குடும்பத்தினரும் தமிழன்பர்களும் தொழிலாளத் தோழர்களும் வருந்தும் வகையில் இவ்வுலக வாழ்வு நீத்தார். அவரது இறுதி வணக்க ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.
நிகழ்விடம்:
2068, கோபுரம் 2 ஆ, மதிப்பு எழில் தோற்றம்
(Tower 2 B, Prestige Bella Vista)
ஐயப்பன்தாங்கல், சென்னை 600056
(ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் எதிரில்)
தொடர்பிற்கு:
மகன் குகன் : 9677277113
மருமகன் பார்த்திபன் : 9488514067
மருமகன் சிவா:  9840098618
  உழைப்பாளி, எளியவர், தமிழன்பர், இதழாசிரியர், படைப்பாளி, தொழிலாளர் தோழன், கண்ணியம் மிகுந்தவர் எனப் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் கண்ணியம் குலோத்துங்கன். அவர் பணிகளை நினைவுகூரும் வகையில் ‘கண்ணியக் காவலர் குலோத்துங்கன் எனச் செட்டம்பர் 2015 இல் எழுதிய கட்டுரையைக் காண வேண்டுகிறேன்.
  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அதனால் அவர்களின் மக்கள் மீதும் அளவற்ற அன்பு கொண்டு பழகினார். எனவே, மதிப்பிற்குரிய அப்பெருந்தகை என் மீதும் அன்பு கொண்டிருந்ததில் வியப்பில்லை.
 “தமிழறிஞர்கள் கணிணியிலிருந்து விலகி உள்ளனர். அவர்கள் அறிவதற்காகக்கணிணி குறித்துத் தொடர் ஒன்று எழுதித் தாருங்கள்” என வேண்டினார். ‘கணிணியும் கைப்பழக்கம்’ என்னும் தொடர் அதனால் வந்தது. ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட மின்னஞ்சல் சிக்கல், கணிணிப்பாழ் முதலியவற்றால் அனுப்பிய கட்டுரைகள் அவரிடமும் சென்று சேரவில்லை. என்னிடமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. புதியதாக மீண்டும் எழுத நேரமின்றி அத் தொடரை முடிக்காதது உறுத்தலாகவே உள்ளது.
 அவர் நலமாக இருந்த பொழுது திங்கள் இருமுறையேனும் நாங்கள் அலைபேசி வாயிலாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் உழைப்பிற்கேற் மதிப்பைத் தி.மு.க.வும் அரசும் தரவில்லை என்பது என்னைப்போன்ற பலரின் வருத்தம். தன் உழைப்பிற்கேற்ற மதிப்பை வழங்கவில்லை என்ற வருத்தம் அவருக்கிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் “தன் கடன் உழைப்பதே” என வாழ்ந்தார்.
 மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவையும் பிற ஆண்டுவிழாவையும் சிறப்பாக நடத்தினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழறிஞர்கள் குவிய வேண்டும் எனத் தணியா ஆர்வம் கொண்டவர். அவ்வாறு தம் சொந்தச் செலவில் மிகச் சிறப்பாகத் தமிழறிஞர்கள் கூடும் விழா நடத்தியும்  அமைதி கொள்ளவில்லை. அங்கு வராதவர் யாருமில்லை என்னும் அளவிற்கு அனைவரையும் அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுவந்தார். அவருக்கு ஏற்பட்ட நலக்குறைவு அதனை நிறைவேற்ற இயலவில்லை.
 தமிழறிஞர்களைப்பற்றி அட்டைப்படத்தில் படம் வெளியிட்டுக் கட்டுரை எழுதி வந்த அவர், என்னைப்பற்றியும் எழுதிப் பெருமைப்படுத்தினார். மேலும் ‘அண்ணா வளர்த்த கண்ணியக் காவலர் விருது’ வழங்கிச்சிறப்பித்தார்.
  யாரையும் ஊக்கப்படுத்திச்சிறப்பிப்பது அவர் பண்பாடு. எனவே, எங்கள் மகன் பொறி.தி.ஈழக்கதிர் அவரது இதழ்த் தொடர்பான பணிகளில் உதவியதாலும் இதுபோல் பிறருக்கும் உதவுவது அறிந்ததாலும் நட்பு, அகரமுதல இதழ்கள் சிறப்பாக வருவதற்குத் தொண்டாற்றியமையாலும் ‘கண்ணிய இதழியல் செம்மல் விருது’ அளித்து ஊக்கப்படுத்தினார். ‘செந்தமிழ்ச்செம்மல் இலக்குவனார்’ என்னும் நூலை மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுப் பேராசிரியர் இலக்குவனார் மீதுள்ள தம் மதிப்பை வெளிப்படுத்தினார். இத்தகைய ஆன்றோர் மறைவு தனிப்பட்டமுறையிலும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
 அகரமுதல இதழ், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவார் இலக்கிய இணையம் ஆகியவற்றின் சார்பில் அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

அகரமுதல

(வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 –  ஆடி 22,  2049 / ஆகத்து 07, 2018)

தி.மு.க.வரலாற்றின்  பெரும்பகுதியாகவும் தமிழக வரலாற்றின் சிறப்புப் பகுதியாகவும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்கும்
 ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி
எண்ணம், சொல், எழுத்திற்கு ஓய்வுகொடுத்ததுடன் இயக்கத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளார்.
 அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும் அன்பர்களுக்கும்
  ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம். 
துயரத்தில் பங்கேற்கும்
அகரமுதல மின்னிதழ்
தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள்
தமிழ்க்காப்புக்கழகம்
 இலக்குவனார் இலக்கிய இணையம்
 இலக்குவனார் இலக்கியப்பேரவை

புதன், 16 அக்டோபர், 2013

மாலை முரசு நிருவாக இயக்குநர் பா.இராமச்சந்திர ஆதித்தன் மரணம்

மாலை முரசு நிருவாக இயக்குநர் பா.இராமச்சந்திர ஆதித்தன் மரணம்
மாலை முரசு நிர்வாக இயக்குனர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்
சென்னை, அக்.16–
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் பா.ராமச்சந்திர ஆதித்தன். மாலைமுரசு நாளிதழின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார்.
சென்னை அடையாறு காந்திநகர் 3–வது தெருவில் வசித்து வந்த அவர் இன்று காலை 9 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.
பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பா.ராமச்சந்திர ஆதித்தனின் இறுதிச்சடங்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதன்பிறகு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் நடைபெறுகிறது.
பா.ராமச்சந்திர ஆதித்தனுக்கு, பங்கஜம் அம்மாள் என்ற மனைவியும், இரா.கண்ணன் ஆதித்தன், இரா.கதிரேச ஆதித்தன் ஆகிய 2 மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர்.

பா.இராமச்சந்திர ஆதித்தன் மரணம்: கருணாநிதி–.வாசன், வைகோ இரங்கல்
பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்: கருணாநிதி–ஜி.கே.வாசன், வைகோ இரங்கல்
சென்னை, அக். 16–
மாலைமுரசு நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:–
சி.பா. ஆதித்தனார் அவர்களின் மூத்த மைந்தர், அருமை நண்பர், பா. ராமச்சந்திர ஆதித்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன். தமிழ், தமிழர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பவற்றில் என்றைக்கும் குறையாத அக்கறையும் ஆர்வமும் கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தன்.
நான் முதல்–அமைச்சராக ஆன போது மிகவும் பெருமைப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்–அமைச்சராக ஆகியிருக்கிறார் என்றெல்லாம் பாராட்டியவர்.
அவர் மறைவு, தமிழ்ச் சமுதாயத்திற்கும், பத்திரிகை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும், அவருடைய அருமைச் செல்வன் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மாலை முரசு இதழில் பணியாற்றும் தொழிலாளத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:–
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் தலைமகன், மாலைமுரசு ஏட்டின் அதிபர் ராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கியது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன். தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலைமுரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார்.
துன்பப்படுகின்றவர்களுக்கு உதவுகின்ற இரக்க சுபாவம் மிக்கவர். அன்னாரது இளவலான சிவந்தி ஆதித்தனார் மறைந்த ஆறு மாத காலத்திற்குள் ராமச்சந்திர ஆதித்தனாரும் மறைந்த துக்கம் பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டது.
அவரது மறைவால் துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மாலைமுரசு ஏட்டின் செய்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் ம.தி.மு.க.வின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய மந்திரி ஜி.கே.வாசன்:–
தந்தை வழியை பின்பற்றி பத்திரிகை துறையில் தனி முத்திரை பதித்தவர். பாமரர்களும் படிக்கும் வகையில் பத்திரிகை நடத்தி வந்தார். மிகவும் எளிமையானவர். அன்பாக பழகக் கூடியவர். அவரது மறைவு பத்திரிகை துறைக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அவரைச் சார்ந்த பத்திரிகை ஊழியர்களுக்கும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:–
மாலை முரசு நாளிதழின் நிறுவனர் பா.ராமச்சந்திர ஆதித்தன் இயற்கை எய்தி விட்டார் என்ற தகவல் அறிந்து மிகவும் துயரமடைந்தேன். அனைத்து கட்சித் தலைவர்களின் பேரன்புக்கும் பாத்திரமானவர். அவரது இழப்பு தமிழக மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் மோகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்

கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்
கவிஞர் சாமி பழனியப்பன் மரணம்: கருணாநிதி இரங்கல்
சென்னை, ஜூலை. 21– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் நெருங்கிய மாணவர்களில் ஒருவரும், தமிழரசு பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற வரும், தம்பி பழனி பாரதியின் அருமைத் தந்தையுமான கவிஞர் சாமி பழனியப்பன் மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
திராவிட இயக்க லட்சியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பாவேந்தர் பாணியில் கவிதைகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டு சாமி பழனியப்பன் எழுதிய கவிதைகள் ஏராளம்.
கழக ஆட்சிக் காலத்தில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதே, முதல்– அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உதவி நிதி அளித்தது என் ஞாபகத்தில் உள்ளது. அவரது மறைவு தமிழ்க் கவிதை உலகிற்கு ஓர் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சனி, 25 மே, 2013

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராசன் மரணம்


பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் மரணம்

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராசன் மரணம்
சென்னை, மே 25-

பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல்நல குறைவு காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 19-ந்தேதி வீடு திரும்பினார். மூச்சுக் கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர்: டி.எம்.எஸ். மறைவுக்கு வைகோ இரங்கல்
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர்: டி.எம்.எஸ். மறைவுக்கு வைகோ இரங்கல்
சென்னை, மே 25-

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அறுபது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் ஒலித்ததும் நாதவெள்ளமாக தமிழக மக்கள் சிந்தையைக் கவர்ந்ததுமான பாடல்களை தன் கானக் குரலால் பாடிய இசைவேந்தர் டி.எம். சவுந்தரராஜன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, அளவற்ற வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

‘உள்ளம் உருகுதய்யா...’ என்பது உள்ளிட்ட அவரது பக்திப் பாடல்கள் கேட்போரை பரவசத்தில் ஆழ்த்தும். நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர்களது குரலுக்கு ஏற்றவாறு அவரது பின்னணிக் குரல் ஒலிக்கும். தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், உணர்ச்சிப் பாடல்கள் அனைத்துமே காலத்தை வென்றவையாகும்.

டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் மறைந்தாலும் அவரது பாடல்கள், அவரது தேனினும் இனிய இசைக்குரல் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும். அவரது மறைவால், துயரத்தில் துடிக்கும் இசை உலகத்திற்கும், திரை உலகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 
தமிழ் த் திரைப்பட த் துறையில் டி.எம்.எசு. இடத்தை எவராலும் நிரப்பமுடியாது: ஜெயலலிதா
  0 
தமிழ் திரைப்பட துறையில் டி.எம்.எஸ். இடத்தை எவராலும் நிரப்பமுடியாது: ஜெயலலிதா
சென்னை, மே 25-

முதலமைச்சர்  செயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களை தனது சிம்மக் குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், ‘டி.எம்.எஸ்.’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவருமான டி.எம். சவுந்தரராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

“ராதே என்னை விட்டு ஓடாதேடி” என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த டி.எம்.சவுந்தரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.  

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின்னணி பாடும்போது எம்.ஜி.ஆர் அவர்களின் குரலுக்கேற்றவாறும், சிவாஜி கணேசன் அவர்களுக்கு பின்னணி பாடும்போது, சிவாஜி கணேசன் அவர்களின் குரல் போலவும், மற்ற நடிகர்களுக்குப் பாடும் போது அவரவரது குரலுக்கு ஏற்றவாறு தன் குரலை வித்தியாசப்படுத்தி பாடுவதிலும் வல்லவர் டி.எம்.எஸ்.  தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு உச்சரித்துப் பாடியவர்.

முருகக் கடவுள் மீது பக்திகொண்ட டி.எம். சவுந்தரராஜன், முருகப் பெருமான் மீதான “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்”, “உள்ளம் உருகுதய்யா முருகா”, “சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா”, “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்” போன்ற பல பாடல்களுக்கு தானே இசையமைத்து உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.  

“நான் ஆணையிட்டால்”, “அச்சம் என்பது மடமையடா”, “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு”, “நாணமோ இன்னும் நாணமோ”,  “வசந்த முல்லை போலே வந்து”, “மலர்ந்தும் மலராத”, “ஆடலுடன் பாடலைக் கேட்டு”, “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப்  பாடி ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

‘அன்பைத் தேடி’  என்ற திரைப்படத்தில் “சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்” என்று துவங்கும் பாடலிலும், ‘சூரியகாந்தி’ என்ற திரைப்படத்தில் “ஓ...மேரி தில் ரூபா”  என்று துவங்கும் பாடலிலும் இவருடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும்.  

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகராக விளங்கிய டி.எம். சவுந்தரராஜன், 1960, 1970-களில் தமிழ்த்  திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர். 

நகைச்சுவையானாலும், சோகரசமானாலும், காதல் உணர்வை வெளிப்படுத்தும் பாடலானாலும் அனைத்து உணர்வுகளையும் முழுமையாக வெளிப்படுத்தி பாடக் கூடியவர். இவரைப் போன்று முழுத் திறமைப் படைத்த பாடகர் ஒருவர் இவருக்கு முன்னரும் இருந்ததில்லை;  இனியும் இருக்கப் போவதில்லை என்று கூறுமளவுக்கு ஈடு இணையற்ற திறமை படைத்த ஒரு பின்னணிப் பாடகர் என்று சொன்னால் அது மிகையல்ல.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகத் திறம்படப் பணியாற்றியவர். எனது 2001 – 2006 ஆட்சிக் காலத்தில் எனது பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கு இவர் சொந்தக்காரர். 

டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ரீங்காரமிட்டு அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.

டி.எம்.சவுந்தரராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராசன் மறைவு : கருணாநிதி இரங்கல்
பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மறைவு : கருணாநிதி இரங்கல்
சென்னை, மே 25-

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

1950ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டரில் ‘மந்திரிகுமாரி’ திரைப்படத்திற்கு நான் திரைக்கதை-வசனம் எழுதிய காலத்திலிருந்து, நண்பர் டி.எம்.எஸ். அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு.

திரை இசை, மக்கள் இசை! அதன் அறுபது ஆண்டு கால வரலாற்றில் வேறு எந்தப் பாடகரும் பெறாத இடத்தை டி.எம்.எஸ். பெற்றிருக்கிறார். தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கியவர்; இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனால் சிறந்த பின்னணிப் பாடகராக உருவாக்கப்பட்டவர்.

அந்தக் காலகட்டத்தில் பாரம்பரிய மணம் குன்றாத பல பாடல்களைப் பாடினார். ‘சிந்தனை செய் மனமே’, ‘நான் பெற்ற செல்வம்’ முதலிய பாடல்கள் மறக்க முடியாதவை.

திரை இசையில் அழகான மெல்லிசைப் பாடல்கள் தலை தூக்கியபோது, அந்தப் படலத்தில் சௌந்தரராஜன், முக்கிய பங்கு வகித்தார். அவருடைய இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, உணர்ச்சி பூர்வமான பாட்டு, நடிகருக்கு ஏற்றாற்போல குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை அவருக்கு மிகப் பெரிய புகழை ஈட்டித் தந்துள்ளன.

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகிய இருவருக்கும் டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்தியதைப்போல் வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தவில்லை.

1974 ஆம் ஆண்டில் இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கியது கழக அரசு; மத்திய அரசு இவருக்கு, ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கிப் பாராட்டியது; இத்தகைய பல்வேறு விருதுகளாலும், பாராட்டுகளாலும் சாதனைகள் படைத்துள்ள டி.எம்.எஸ். அவர்களுக்கு அவர் பிறந்த மதுரையில் பாராட்டு விழா நடத்தவேண்டுமென்று மு.க.அழகிரி ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்று அவரைப் பாராட்டச் செய்தார்.

ஒரு சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டி.எம். சௌந்தரராசன் அவர்கள் இன்று மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
 
 
 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

மறைவுச் செய்தி

மறைவுச் செய்தி


இன்று(சித்திரை 1, ஏப்பிரல் 14)  வைகறையில் உறக்கத்தில்  திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் அவர்கள்  இயற்கை எய்தினார். அவரது பிரிவால் துயருறும், 
அவர் கணவர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் புகழ்பெற்ற இலக்கிய அமைப்பில் ஏறத்தாழ 45 ஆண்டுகளாகச் செயலராகச் செயல்படும்   பொறி.பக்தவத்சலம், அவர்கள் மக்கள், முனைவர் தாமரைக்கண்ணன், திருவாட்டி கல்யாணி சீனிவாசன், திருவாட்டி சுமதி சீனிவாசன்,  உற்றார் உறவினருக்கு இணையத்தமிழன்பர்கள் சார்பில் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.


முகவரி
19,  கோமதிபுரம் முதன்மைச் சாலை,  
(அரசு மேனிலைப் பள்ளி அருகில்) 
திருநின்றவூர்
பேசி : 9962493459 
             9941357869
            044 2634 1857

செவ்வாய், 22 ஜனவரி, 2013

எம்.எசு. உதயமூர்த்தி மறைவு: வைகோ இரங்கல்

எம்.எசு. உதயமூர்த்தி மறைவு: வைகோ இரங்கல்




மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் எம்.எஸ். உதயமூர்த்தியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்:
அமெரிக்காவில் ஆற்றிய பணி, வசதியான வாழ்க்கையைத் துறந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்குத் தன்னால் இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.உன்னால் முடியும் தம்பி என்ற அவரது நூல் 1980-களில் தமிழக இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. உன் திறமைகளை வளர்த்துக் கொள், பொருளாதாரத்தில் முன்னேறு, சமுதாயத்துக்கு தொண்டாற்று என்பதை வலியுறுத்தி இளைஞர்களிடம் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தார்.
எண்ணங்கள், நீதான் தம்பி முதல் அமைச்சர், ஆத்ம தரிசனம் என இவர் எழுதிய 10 நூல்களும் நம்பிக்கை முத்துக்கள். 1988-ல் மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கி நதிநீர் இணைப்பு, கிராம முன்னேற்றம், மதுவிலக்கு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மக்கள் சக்தி இயக்கத்தினருக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வைகோ தெரிவித்துள்ளார்.

திங்கள், 19 நவம்பர், 2012

மருத்துவர் தெய்வநாயகம் மறைவு - வைகோ இரங்கல்

மருத்துவர் தெய்வநாயகம் அவர்களின் மறைவு தமிழ்நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்! வைகோ இரங்கல்

  0/0  

பகுத்தறிவுச் சுடராக, தமிழின உரிமை வேட்கை மிக்கவராக மருத்துவத் துறையில் மனிதநேய சாதனையாளராகத் திகழ்ந்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து, தாங்கமுடியாத துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மருத்துவக் கல்லூரியில் கல்வியில் தங்க விருது பெற்ற தெய்வநாயகம் அவர்களின் பெற்றோரும், அக்குடும்பத்தினரும் தந்தை பெரியார் அவர்களின் எல்லையற்ற அன்புக்குரியவர்கள் ஆவார்கள்; தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் ஆவார்கள்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராகச் சேவை செய்த தெய்வநாயகம் அவர்கள், பின்னர் தாம்பரம் டி.பி. சானடோரியத்தின் தலைமை மருத்துவராக அற்புதமாகப் பணி ஆற்றினார். கூட்டுக் கலவை மருந்து என்ற முறையைக் கொண்டு வந்து எண்ணற்ற நோயாளிகளைக் குணப்படுத்தினார். எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்ததோடு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தக்க சிகிச்சை தந்தார்.
உலகில் எங்கே தமிழர்கள் துன்புற்றாலும் அதைத் தடுக்கப் போராடினார். மலேசியாவில் தமிழர்கள் மரணக் கொட்டடியில் வாடியபோது அவர்களை மீட்க மிகப் பெரிய அறப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் அருமைத் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் மறைந்தபோது வீரவணக்கக் கூட்டம் நடத்த அவரது நிர்வாகத்தில் இருந்த பள்ளிக் கட்டட வளாகத்தில் ஏற்பாடு செய்தார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மருத்துவத் துறையிலும் எண்ணற்றவர்களுக்கு நலவாழ்வு தரவும் தமிழீழ விடியலுக்கு தோள் கொடுக்கவும் ஆற்றலும் தகுதியும் வாய்ந்த மனிதநேயமிக்க இந்தப் பண்பாளர் பிணிவயப்பட்டு மறைந்தது ஆற்றமுடியாத துயரத்தைத் தருகிறது.
அவரை இழந்து வேதனையில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது மறைவால் கலங்கி நிற்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
19.11.2012 மறுமலர்ச்சி தி.மு.க
(பார்வையிட்டவர்கள் 6 பேர்)