கொழும்பு, நவ. 14: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டுமென்று இலங்கை அரசிடம் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு "திடீர்' பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் சனிக்கிழமை, இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நினைவு உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்னையில் அனைவருக்கும் நன்மை தரும் வகையில் அரசியல் ரீதியில் தீர்வுகாண வேண்டும். இதில் எந்த ஒரு பிரிவினரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. மத, இன வேறுபாடு எந்த இடத்திலும் தலை தூக்கக் கூடாது.
இலங்கையில் போரில் ராணுவம் வெற்றி பெற்றிருந்தாலும், அரசியல் ரீதியாக பிரச்னைக்கு தீர்வுகாண்பதே மிகப்பெரிய வெற்றியாக அமையும். அரசியல் சாசன சட்டத்தின் கீழ் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வும், சம அந்தஸ்து மற்றும் சம உரிமை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
சட்டம், சமுக நீதி, மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் போன்றவை நிலைநாட்டப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு உள்பட்டு அனைவருக்கும் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.
இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது. வர்த்தக பற்றாக்குறை இடைவெளியும் குறைந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இலங்கையில் விரைவில் நாடாளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ராஜபட்ச இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முப்படைகளின் தளபதி பதவியிலிருந்து விலகியுள்ள சரத் பொன்சேகா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் ராஜபட்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த அக்டோபர் 15-ம் தேதி இந்தியப் படை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது என்று பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு சென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.