சனி, 3 செப்டம்பர், 2011

article about kalaignar stand on mercy petition: எல்லாப் புகழும் உங்களுக்கே!


பதவியில் இருக்கும் பொழுது  இந்தியனாகவும் இல்லாத பொழுது தமிழனாகவும் காட்டிக் கொள்வதால் ஏற்படும் நிலையே இது. எனவே, பதவி நலன்களுக்காகக் காங்கிரசிற்கு அடிமையாகும் பொழுது தமிழ், தமிழன், உரிமை, என்பனவெல்லாம் காற்றில் பறப்பது இயல்புதானே! உயர்நீதிமன்றமே புதிய விண்ணப்பத்தை வாங்கி ஆய்வு செய்ய அறிவுறுத்தியும்  விடுதலைக்குப் பரிந்துரைக்க மறுத்தவரிடம் மனுவை அனுப்புங்கள் என்று சொல்லாதது ஏன் என்பதுதான் பொருந்தாத கேள்வியாக உள்ளது. பிற அனைவரும் அறிந்ததுதான். எனினும் இதைப்படித்துக் கழக உடன் பிறப்புகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!/

எல்லாப் புகழும் உங்களுக்கே!

First Published : 03 Sep 2011 01:38:47 AM IST


11 ஆண்டுகளாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததற்கு திமுகதான் காரணம்' - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களில் நளினிக்கு மட்டும் தண்டனை குறைப்பு செய்து மற்ற மனுக்களை நிராகரிக்கலாம் என்று 2000-ம் ஆண்டில் திமுக அரசுதான் முடிவு எடுத்தது என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு, அந்நாளின் முதல்வர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதில்தான் இது.இந்தப் பதிலை எப்படி எடுத்துக்கொள்வது என்று நமக்குத் தெரியவில்லை. ஏன் இவ்வாறான பதில்களால் முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான கருணாநிதி தன்னைத் தானே ஏளனப் பொருளாக்கிக் கொள்கிறார் என்பது புரியவில்லை.நளினிக்குத் தண்டனை குறைப்பு செய்யப் பரிந்துரைத்த திமுக அரசு, முருகன் சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் தண்டனையைக் குறைத்திருந்தால் இத்தனை சிக்கல்கள் இருந்திருக்காதே என்று ஜெயலலிதா சொன்னால், தான் ஏன் அந்த நேரத்தில் அந்த மூன்று பேரின் மனுக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும், ஏன் நளினிக்கு மட்டும் தண்டனையைக் குறைக்கக் கேட்டுக்கொண்டோம் என்றும் விளக்கம் தர வேண்டிய முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் பதிலை தனக்கான நியாயப்படுத்தலாக மாற்றுதல் அவருக்குப் பெருமை சேர்க்காமல், மேலும் சிக்கலைத்தான் உருவாக்குகிறது. அதுமட்டுமல்ல, இன்று இந்த மூவரின் தூக்குத் தண்டனையும் 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை கிடைக்கக் காரணமும் நான்தான் என்று தனக்கே உரித்தான பாணியில் சொல்லாமல் சொல்கிறார் கருணாநிதி.அவரது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "மத்திய அரசுக்கு அந்தக் கருணை மனுக்களை அனுப்பி வைத்ததன் காரணமாகத்தான் 11 ஆண்டுகளாக அவர்களது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதை இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்தியிருக்கிறார். 11 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை ஒரு காரணமாக நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் எடுத்துக்கூறி, தண்டனையை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்கள்'எல்லாப் புகழும் கருணாநிதிக்கே கிடைக்கட்டும். அதில் யாருக்கும் எந்தவித மனக்காய்ச்சலும் கிடையாது. அவரிடம் இரண்டே கேள்விகள் மட்டும் கேட்கத் தோன்றுகிறது. முதல் கேள்வி: குடியரசுத் தலைவர் போட்டிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு எதிர்ப்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த வேளையில், குடியரசுத் தலைவராகப் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளரை தமிழகத்துக்கு அழைத்து வந்து, சென்னையே அதிரும் வகையில் மாபெரும் பேரணி நடத்தியவர் அன்றைய முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி.குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் பொறுப்பேற்ற பிறகு, கருணை மனுவை ஏற்று தண்டனையைக் குறைக்கும்படி அன்றைய முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் சொல்லியிருந்தாலும் போதுமே! தனக்கு விழா எடுத்த திமுக தலைவர் கருணாநிதிக்குப் பெருமை சேர்க்கவாகிலும் கருணை கொண்டிருப்பாரே குடியரசுத் தலைவர். மிக எளிமையாக முடிந்திருக்க வேண்டிய விவகாரம் அல்லவா? ஏன் இதை அவர் செய்யவில்லை? இந்தப் புகழைப் பெறும் அனைத்து வாய்ப்பும் அதிகாரமும் இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை?இப்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ள, இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் குடியரசுத் தலைவருக்குத்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு அல்ல. ஆகவே, இப்போதாகிலும், விழா எடுத்த நன்றிக்கடனுக்காக கருணை வழங்கும்படி குடியரசுத் தலைவரை கருணாநிதி நேரில் சந்தித்துக் கேட்கலாமே. கேட்பாரா?மத்திய அமைச்சரவையில் தனது குடும்பத்தினர் இடம்பிடிக்க, தங்களுக்கு வேண்டிய இலாகாக்கள் ஒதுக்கித் தரப்பட தள்ளாத வயதிலும் தில்லிக்குச் சென்ற முன்னாள் முதல்வர், இந்த மூன்று பேருக்கும் கருணை கேட்டுச் செல்வாரா?இரண்டாவது கேள்வி: தூக்குத் தண்டனை பெற்ற இடதுசாரித் தோழர்களில் ஒருவரான தியாகு, "தண்டனையைக் குறைக்குமாறு நீதிபதியிடம் விண்ணப்பித்தபோது, தமிழக அரசிடம் ஆளுநர் கருத்து கேட்டார். அப்போது கருணாநிதி அமைச்சரவையைக் கூட்டி தண்டனையைக் குறைக்கப் பரிந்துரைத்தார். அதன்படி எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது' என்று கூறியுள்ளார். தூக்குத் தண்டனை பெற்ற பெண்ணாடம் புலவர் கலியபெருமாள் மகன், தனது தந்தைக்கு தண்டனை குறைப்புக்காக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, ஆளுநருக்கு மனு அனுப்பினார். அந்த மனுவை அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். அது குறித்து அமைச்சரவை விவாதித்து தண்டனையைக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைத்தது.............என்றெல்லாம் இப்போது சொல்கிறீர்களே, நீங்கள் முதல்வராகப் பதவி வகித்த கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறையாகிலும் "இப்படியொரு மனுவை ஆளுநருக்கு அனுப்புங்கள், அவர் எனக்கு அனுப்புவார், நான் பரிந்துரை செய்து தண்டனையைக் குறைக்கிறேன்' என்று ஒரு கோடி காட்டக்கூட இல்லையே, அது ஏன்? அல்லது தன்னிச்சையாக தமிழக அரசேகூட இதைப் பரிந்துரைத்திருக்கலாமே! வேலூர் மத்திய சிறையில், நிலப்பறிப்பு வழக்கில் கைதானவர்களைப் போய்ப் பார்க்கும் திமுக தலைவர்கள் இந்த மூன்று பேரையும் பார்த்துப் பேசியதுண்டா?ஆட்சி அதிகாரமும் வாய்ப்பும் இருந்தபோது இதை நீங்களே செய்திருந்தால் எத்தனை எளிமையாகப் பிரச்னை முடிந்திருக்கும்! "அப்சல் குருவுக்காக இதே தீர்மானத்தை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை போட்டால் சும்மா இருப்பீர்களா?' என்று உமர் அப்துல்லா கேள்வி கேட்கும் நிலைமை உருவாகியிருக்காதே. இந்தியா முழுவதிலும் இது ஒரு பெரிய கெட்ட விவகாரம் போல திசை மாற்றப்படும் அவலம் நேர்ந்திருக்காதே.இன்று நீதிதேவனுக்கும் மயக்கம் தரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கும் நீங்கள்தானே காரணம். நீங்களே தண்டனைக் குறைப்பை செய்திருந்தால் இப்படியெல்லாம் கேள்விகள் எழுமா?எல்லாப் புகழும் உங்களுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக