வியாழன், 14 ஜூலை, 2011

Dinamani article-thamizh in computer by anto peter: கணினித் தமிழுக்கு உயிர்ப் பிச்சை தேவை

கணினித் தமிழுக்கு உயிர்ப் பிச்சை தேவை

First Published : 14 Jul 2011 03:29:06 AM IST


கணினியில் தமிழ்ப் பயன்பாடு 1980-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகம் நூலகப் பயன்பாட்டுக்காக உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது. சுமார் 32 ஆண்டுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு இருந்தும் பல குழப்பநிலைகளே உள்ளது.கணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, வளர்ச்சித் திட்டமோ, எம்என்சி நிறுவனங்களில் கூட்டுப்பணியோ இல்லை. ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற கணினியிலும் பார்க்க பொதுவான எழுத்துரு தேவைப்பட்டது. இன்றும் பதிப்பு மற்றும் அச்சுப்பணிக்குத் தேவைப்படுகிறது. இணையத்தை அனைவரும் பார்வையிட எழுத்துருவைக் கண்டிப்பாகப் பதிவிறக்கம் செய்யவேண்டிய நிலையுள்ளது. இந்தக் கவலைகளைப் போக்குவதற்கே யுனிகோட் தமிழ் பிறந்துள்ளது.வருங்காலத்தில் "யுனிகோட்' தமிழே நிலைக்கும். யுனிகோட் தமிழின் அருமை அறிந்தும், இவற்றைச் சீர்படுத்த அரசு தவறுகிறது. தமிழக அரசைச் சுட்டிக்காட்டினால் இது தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பென நினைத்துவிடுகிறார்கள். இதில் தமிழ் வளர்ச்சித்துறையின் பங்கும் 50 சதவீதம் உள்ளது. இவ்விரு துறைகளும் கூட்டாகத் தமிழுக்கு முயற்சி எடுக்காததாலேயே நாம் சீரழிவைச் சந்திக்க நேர்கிறது. எல்லோரும் ஆங்கில விசைமுறை சீராகவுள்ளதாகக் கருதுகிறோம். ஆங்கில கீபோர்டு 1878-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, அதுவும் சீரான நிலையை உலக அளவில் பெற்றிட 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. நாமும் இப்பிரச்னையை இந்நவீன காலத்தில் சீருடன் பெற்றிட யுனிகோட் தமிழை வலிமைப்படுத்த வேண்டும்.யுனிகோட் என்றால் என்ன? யுனிகோட் என்பது உலக மொழிகள் அனைத்தின் எழுத்துகளையும், குறியீடுகளையும் ஒரே கணினி குறியீட்டு முறையில் இணைத்து வடிவமைக்கும் ஒரு தொழில்நுட்ப முறையாகும். யுனிகோட் முறைகளின் மூலம் ஜப்பான், சீனம், கொரியா போன்ற பல சிக்கலான வரிவடிவங்களைக்கொண்ட மொழிகளைக்கூட எளிதில் கணினியில் பயன்படுத்த முடிகிறது. நாம் யுனிகோடில் டைப் செய்த பைலை உலகின் எந்தக் கணினியிலும், எந்த நாட்டிலிருந்து திறந்துபார்த்தாலும் படித்து அச்சடிக்க முடியும்.நாம் பயன்படுத்தும் ஒரே கணினியில், ஒரே பக்கத்தில், ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, ஜப்பான், சீனம், கொரியா என அனைத்து மொழிகளையும் செலவின்றிப் பயன்படுத்தலாம். தொழில்நுட்பம் மூலமாக சார்ந்து, எந்த மொழி வளர்கிறதோ அந்த மொழியே அழியாமல் இருக்கும். தமிழை வளப்படுத்த யுனிகோடில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.நாம் யுனிகோடில் டைப் செய்த ஒரு தமிழ்ப் பக்கத்தை அலுவலகக் கணினி, லேப்டாப் கணினி, அச்சு, பதிப்பகம், இணையம் மற்றும் செல்பேசி என அனைத்து தொழில்நுட்பத்திலும் சிக்கலின்றிப் பார்த்துப் படித்துக் கொள்ளலாம். யுனிகோட் எழுத்துருக்கள் அதிக அளவில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. யுனிகோடினால் கணினி மற்றும் இயங்குதளங்களின் செயல்படும் வேகம் அதிகரிக்கிறது. நாம் ஆயிரக்கணக்கான பக்கங்களை சில நொடிகளில் அச்சுப்படி எடுக்கலாம். எந்தக் கணினியிலும் யுனிகோட் எழுத்துருவைப் பதிக்கவோ, பதிவிறக்கம் செய்யவேண்டிய அவசியமோ இல்லை.தமிழக அரசு தமிழில் வர்த்தக எழுத்துருக்களை ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக விலை கொடுத்து வாங்குகிறது. ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக இன்ஸ்டால் செய்ய வேண்டும்.ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனிப் பதிவு எண்களைப் பாதுகாக்க வேண்டும். இணைய பயன்பாட்டுக்காக தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். யுனிகோட் எழுத்துரு உலக மொழிக்கே பொதுவானதால் இச்சிக்கல்கள் இன்றிப் பயன்படுத்தலாம். ஆனால், இதை முழுமையாக இணைய விரும்பிகளே பயன்படுத்துகிறார்கள். அரசுப்பணியில் பயன்பாடு இன்றி அவல நிலையில் உள்ளது.சமீபத்தில் அமெரிக்கா விசா பெறுதற்காக சென்னை அமெரிக்க தூதரகத்துக்குச் சென்றிருந்தேன். அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்கு நேர்காணல் வைத்தே விசா தருவார்கள். இதை அமெரிக்கர்களே நடத்துகிறார்கள். நேர்காணலின்போது எதற்கு, ஏன் அமெரிக்கா செல்கிறீர்கள் என கேட்டார்கள். அப்போது நான் அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழை வளர்க்க அமெரிக்காவில் மாநாடு நடைபெறுகிறது என்று கூறினேன். அமெரிக்காவில் எம்என்சி நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் தமிழின் வளர்ச்சி விவாதங்களும், ஆராய்ச்சிகளும் தமிழகத்துக்கு உதவும் என்று கூறினேன். தமிழகத்தின் அனைத்துக் கணினிகளில் வேலை செய்யும் அனைத்து சாஃப்ட்வேர்களும் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுவதாகக் கூறினேன். புன்முறுவலுடன் தமிழகத்துக்குப் பயனுள்ளதாக உள்ளதா என்று கேட்டார், தலையாட்டினேன். உங்கள் பணி தமிழையும், மின்னணுவையும் இணைக்கிறதென கூறினார். சில நொடிகளில் அவர் புரிந்துகொண்டதை எண்ணிப் பெருமை அடைந்தேன். தமிழும், கணினியும் பல செயலாக்கங்களை வருங்காலத்தில் செய்யவுள்ளது. அவர் புரிந்துகொண்டதை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் புரிந்துகொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.யுனிகோட் சம்பந்தமாகப் பிரச்னைகளைச் சந்தித்தால் தமிழக அரசு உடனடியாகப் பணிக்குழுவை உருவாக்கிப் பிரச்னைகளைச் சமாளிக்கிறது. ஆனால், நிரந்தரத்தீர்வை ஏற்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. இப்போது அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிலும் தமிழக அரசு அதிகாரிகள் கலந்துகொள்ளாதது வருத்தத்தை அளித்தது. தகவல் தொழில்நுட்பத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் இணைந்து தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ தொடங்க வேண்டும். யுனிகோட் கன்சார்ட்டியத்தில் தமிழக அரசு உறுப்பினராக வேண்டும். உறுப்பினராக இருந்தால்தானே பன்னாட்டு அறிஞர்களின் அறிவையும் நம் மொழிக்குப் பெறமுடியும். நம் மொழி சார்ந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்ய முடியும்.தமிழக அரசு 9.75 லட்சம் லேப்டாப்களைத் தேர்தல் அறிக்கைப்படி அளிக்கவுள்ளது. மாணவர்கள் பலன் பெறவுள்ள வரவேற்க வேண்டிய திட்டமாகும். இந்த லேப்டாப்களில் தமிழ் மென்பொருள்கள் அளிக்கப்படுகின்றன. லேப்டாப்பின் அடிப்படை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை தமிழில் அளிக்கச் சிந்தனையில்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. லேப்டாப்பில் உள்ள கீ-க்களையே தமிழில் பொறித்து அளிக்கலாமே, லேப்டாப்பில் உள்ள கீ-க்கள் தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் 20 சதவீதம் தமிழக மாணவர்களாவது தமிழ்த் தட்டச்சு அறிவைப் பெறுவார்கள்.லேப்டாப்பை டெண்டர் அடிப்படையில் விநியோகிக்கும் நிறுவனங்களைத் தமிழக (தமிழ் 99) அரசாணைப்படி விசைமுறைகளைப் பெற்ற விசைகளுடன் லேப்டாப்களைத் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.ஆசிய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த செல்போன்களையும் தரப்படுத்தலாமே. தமிழ் விசைகளோடுதான் செல்போன்களை விற்கவேண்டுமென தரமுறையை உருவாக்கலாமே!தமிழக அரசின் இணைய தளங்கள் தமிழகக் கிராமப்புற மக்களுக்காகத்தான் இயங்குகின்றன. அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமல் அரசு சேவைகளையும், தேவைகளையும் பெறுவதற்கே இணையங்களை தமிழக அரசுத்துறைகள் நிறுவி வருகின்றன. இந்த இணையங்களை ஏன் தமிழில் நிறுவுவதில்லை என்பது தெரியவில்லை. தமிழக அரசின் அனைத்து இணையங்களும் தமிழில் மாற்றம் செய்யவேண்டும்.தமிழ் இணையப் பல்கலைக்கழகம்தான், தமிழக அரசின் தமிழ்க்கணினிப் பணிகளைச் செய்வதாகக் கூறுகிறார்கள். அந்நிறுவனத்தின் தமிழ்க்கணினிப் பணி தொய்வு நிலையிலேயே உள்ளது. கல்விப்பணியை மட்டும் அந்நிறுவனத்துக்கு ஒதுக்கி தமிழக அரசின் தமிழ்க் கணினிப் பணிக்காக தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ தொடங்க வேண்டும்.ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்றால், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் தரச்சான்றிதழ் பெறவேண்டும். அதேபோல் தமிழகத்தில் தயாரிக்கப்படும் அனைத்து மின்னணுவியல் தயாரிப்புகளும் தமிழ்சார் தரக்கட்டுப்பாட்டை அளித்த பின்பே, விற்பனைக்கு வரவேண்டும். மின்னணுவியல் தயாரிப்புகளுடன் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் பயனாளர் கையேடுகள் தமிழில் வெளியிட வலியுறுத்த வேண்டும். நம் மொழியோடு குறைந்த மக்கள்தொகையுள்ள மொழிகள்கூட தத்தம் நாடுகளில் இவ்விதிகளைக் கையாள்கின்றன.தமிழ்க்கணினிப் பயன்பாடுகள் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்குத் தமிழ்க்கணினி சேவைகளையும், கலைச்சொற்களையும் ஊட்டினால் சமுதாய மாற்றத்தைக் காணலாம். மேலும், பல அரசுத் திட்டங்கள் கிடப்பில்தான் உள்ளன.யுனிகோட் தமிழ் மற்றும் பல்வேறு மின்னணுத் தமிழ்ப்பணியாக்கங்களுக்கு மனுக்களும், கோரிக்கைகளும் எங்களைப்போன்ற தொழில்நுட்பவாதிகள் அளித்து களைப்பைத்தான் கண்டுள்ளோம். சிறப்பான நலப்பணிகளைச் செய்துவரும் புதிய அரசு தமிழ்ப்பற்றுடன் கணினித்தமிழ்ப் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழக அரசின் தமிழ்க் கணினி அரசாணையைத்தான் தத்தம் நாடுகளில் அமல்படுத்துகிறார்கள். முதல்வரின் தமிழ்க் கணினிப்பணி உலகத் தமிழ்மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறோம். கட்டுரையாளர்:கணினித் தமிழ்ச் சங்கத் தலைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக