தினத்தந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினத்தந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா? – மறைமலை இலக்குவனார்

அகரமுதல


விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா?

அண்மையில் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தேசிய விருதுகள் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. திரையுலகில் இது பெரிய கவலையை ஏற்படுத்தியது.
 “தேசிய விருதுகளை விடப் படங்களைப் பார்த்தவரெல்லாம் பாராட்டிப் பேசிய சொற்களே விருதுகள்” எனக் கவிஞர் வைரமுத்து ஆறுதல் வழங்கியுள்ளார். விருது என்பது கலைஞர்களுக்குப் பெரிய ஊக்கத்தையும் மனவெழுச்சியையும் வழங்கும் மாமருந்து எனலாம். அந்த விருதுவுடன் வழங்கும் பதக்கமோ, பணமோ, சான்றிதழோ முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை. அந்த விருது வழங்கும்  பாராட்டும் அங்கீகாரமுமே கலைஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பெரிதும் ஊக்கப்படுத்தும் உந்து சக்தியாகும்.
ஒரு துறையில் சமமான திறமை கொண்டவர் பலர் இருக்கலாம். ஆனால் விருது ஒருவருக்குத்தான் கொடுக்கமுடியும். இந்தச் சூழலில் ஒருவர் விருது பெறும்போது விருது பெறாதவர்களின் குமுறலும், கோபமும் அதிகமாக இருக்கும். அவர் எப்படியோ வாங்கிவிட்டார் என்ற குமுறல் வெளிப்படும். எனக்கு ஏன் வழங்கவில்லை என்னும் கோபம் கொந்தளிக்கும். இரவீந்திரநாத்து தாகூர்நோபல் பரிசு வாங்கியபோது பாரதியார் அப்படித்தான் கோபப்பட்டாராம். ‘உடனே கொல்கத்தாவுக்குச் சீட்டு(டிக்கெட்டு) எடு. தாகூர் வாங்கிய விருதைச் சபையில் வைக்கட்டும். எங்கள் இருவர் கவிதையும் கேட்டபின் யாருக்கு அந்த விருது பொருந்தும் எனச் சபை முடிவு செய்யட்டும்’ என்றாராம். எனினும் பாரதியாரின் இந்தக் கோபம் நெடுநேரம் நீடிக்கவில்லை.“ நம்முடைய தாகூர் தானே வாங்கியுள்ளார்”. என அமைதி கொண்டு விட்டாராம். ஆனால் நம்மால் அமைதி கொள்ள முடியவில்லையே! உலகப் பெருங்கவிஞர் எனப் போற்றப்பட வேண்டிய பாரதியாருக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை?
பாரதியாருக்குப் பின்னர் அவர் வழியில் ஏறு நடையிட்ட எழுச்சிப் பாவலர் பாரதிதாசனுக்கு அவர் வாழும் காலத்தில் சாகித்திய அகாடமி விருது வழங்கப்படவில்லை. அவர் மறைவுக்குப் பின் 1969-ம் ஆண்டு தான் வழங்கப்பட்டது. கவிதையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய அந்தப் புரட்சிக் கவிஞர் இறந்த பின்னரும் கவிதைக்கான விருது அவருக்கு வழங்கப் படவில்லை. ‘பிசிராந்தையார்’ என்னும் நாடகத்திற்காகவே பாரதிதாசனுக்கு விருது வழங்கப்பட்டது. நல்ல வேளையாகக் கண்ணதாசன் தாம் இறப்பதற்கு ஓராண்டு முன்னரே (1980) விருது பெற்றார். ஆனால் அவரும் கவிதைக்கான சாகித்திய அகாடமி விருது பெறவில்லை. ‘சேரமான் காதலி’ என்னும் புதினத்திற்காகவே அவர் விருது பெற்றார். இரு பெரும் கவிஞர்களுக்கும் கவிதைக்காக விருதுவழங்கப்படாதது எவ்வளவு பெரிய தவறு? கண்ணதாசன் கவியரசராகக் கோலோச்சிய காலத்தில் 1968-ஆம் ஆண்டு தமிழ்க்கவிதைக்காக அகாடமி விருது பெற்றவர் அ.சீனிவாசன் என்னும் ஆங்கிலப் பேராசிரியர் என்னும்போது அழுவதா? சிரிப்பதா?
முதன் முதலாகத் தமிழ் எழுத்தாளர் அகிலனுக்கு ஞானபீடம் விருது வழங்கிய போது பத்திரிகைகளில் அவருக்கு பாராட்டு குவிந்ததை விட அவருக்கு வழங்கப்பட்டது தவறு என்னும் கண்டனக் கணைகளே மிகுதியாக வெளி வந்தன. சாண்டில்யன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் வெளிப்படுத்திய கோபத்தைப் பார்த்து ஞானபீட அமைப்பே பயந்துபோனது. அதன்பின் பல ஆண்டுகளுக்குத் தமிழ் இலக்கியம் ஞானபீடம் பெறாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். தனக்குக் கிடைக்காத விருது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்னும்நல்லெண்ணம் நிலவுவதால் பல ஆண்டுகளாகப் பல விருதுகள்வழங்கப்படாமலே போவதும் உண்டு.
விருது வாங்குவதற்குத் தகுதி வாய்ந்தவர் யார் தெரியுமா? “எனக்கு இந்த விருது வேண்டாம்; என்னை விடத் தகுதி வாய்ந்தவர் இருக்கிறார்கள்; அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று யார் சொல்கிறார்களோ அவர்கள் தான் விருதுபெறத் தகுதி வாய்ந்தவர்கள். இதனை விளக்குவதை போல ஒரு கதை, நம் ஒளவையாரைமையமாகக் கொண்டு வடமொழியில் வழங்குகிறது.
நாரத முனிவர் ஒளவையாரை நாடி வருகிறாராம் “ஒளவையே! சிறந்த அறிஞர் என்னும் விருது உங்களுக்கு வழங்க எண்ணுகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாராம். ஒளவையார் தயங்காமல் உடனே சொல்கிறார். “நானா சிறந்த அறிவாளி! எங்களைப் போன்ற புலவர்களுக்கெல்லாம் தலைவர் அகத்தியர் இருக்கிறார். அவருக்குத் தான் இந்த விருது பொருந்தும்”. “நாரதர் அகத்தியரைப் போய்ப் பார்த்து ஒளவை கூறியதைச் சொல்கிறார். அகத்தியர் சிரித்துவிட்டு ஒளவையாரை விடவா நான் அறிவாளி?” என்று கூறியவர், “சரி! அவர்கள் ஏற்கவில்லை யென்றால் இந்திரனுக்கு அந்த விருதைக் கொடுத்து விடுங்கள். இப்போதுதான் அவர் ஐந்திரம் என்றொரு நூல் எழுதியுள்ளார். அவருக்கு இந்த விருது மிகவும் பொருந்தும்” என்றாராம். நாரதர் இந்திரனிடம் போய் விருது வாங்கிக்கொள்ளுமாறு வேண்டுகிறார். இந்திரன் விருது வாங்கிக்கொள்ள மறுத்துவிடுகிறார். “கலைமகளின் அருள் இல்லாவிட்டால் இந்த நூலை என்னால் எழுதியிருக்கமுடியுமா? என்று கேட்டு விருதைக் கலைமகளிடம் கொடுக்கச் சொல்கிறார்.” ஆனால் கலைமகளும் விருது பெற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். ‘என்னைப் படைத்து என்னையாளும் தலைவன் பிரம்மன் தான் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்கிறார். பிரம்மன் திருமாலையும், திருமால் இலட்சுமியையும், இலட்சுமி ஈசுவரியையும் பொருத்தமானவர்கள் எனக் கைகாட்டிவிடுகின்றனர். ஈசுவரி எல்லாம் வல்ல பரமசிவனைக் கைகாட்டக் கடைசியில் பரமசிவன் சொல்கிறாராம். “எனக்குப் பிரணவ மந்திரம் கற்றுக்கொடுத்த முருகனுக்கே இந்த விருது பொருந்தும்“ என்கிறார். கடைசியில் முருகனும் விருது வாங்கிக்கொள்ள மறுத்துவிடுகிறார். முருகன் என்ன சொன்னார் தெரியுமா? “எனக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கும் ஒளவையாரே இந்த விருதுக்குத் தகுதியானவர்” எங்கெல்லாமோ சுற்றிய விருது தொடக்கத்தில் அடக்கத்துடன் விருது பெற மறுத்த ஒளவையாருக்கே பொருத்தமாக அமைந்தது. தன்னை விட அறிவாளி இவ்வுலகில் இருக்கிறார் என்று தன்னடக்கம் கொள்பவர்களே தலைசிறந்த அறிவாளிகள் என்னும் கருத்தை இந்தக் கதை அருமையாக உணர்த்துகிறது. எல்லோரும் இதனை உணர்ந்துகொண்டால் விருதுகளுக்காக வீண் சண்டைகள் வராமல் போய்விடும் அல்லவா?.
– மறைமலை இலக்குவனார், முன்னாள் சிறப்பு வருகை பேராசிரியர்,கலிபோர்னியா பல்கலைக்கழகம்.
தினத்தந்தி, 23.08.2019

வெள்ளி, 5 ஜூலை, 2019

தமிழால் இணைவோம்…! – மறைமலை இலக்குவனார்

தமிழால் இணைவோம்…!

தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம்.
உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில் மாணவர்களால் படிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் நார்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து நாடுகளில் பள்ளிப்பிள்ளைகள் ஆர்வத்துடன் தமிழ் பயில்கிறார்கள். சீனப் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருவதுடன் சீன வானொலியில் தமிழ்ப்பிரிவு சிறப்பாக இயங்கிவருகிறது. இவ்வாறு உலகெங்கும் பரவி வளர்ந்துவரும் தமிழுக்கு ஓர் ஊக்க ஊற்றாகவே உலகத் தமிழ் மாநாடு அமைந்துள்ளது எனலாம்.
அரை நூற்றாண்டுக்கு முன், 1966-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வந்த தனிநாயக அடிகளார் உலகெங்கும் வாழும் தமிழர் ஒன்றுகூடித் தமிழ்வளர்ச்சி குறித்த திட்டங்களை இயற்றவும், விவாதிக்கவும் மாநாடு நடத்தவேண்டுமென்று கனவு கண்டார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலேசிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மாநாடு வெற்றியுடன் நடத்திச் சாதித்துக்காட்டினார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் புறநானூற்றுப் பாடல் அடியை மாநாட்டின் குறிக்கோள் வாசகமாக்கினார். தமிழர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து தமிழால் ஒன்றுபட வேண்டும் என்பதே அவர் கண்ட கனவாகும்.
1966-ஆம் ஆண்டு நடந்த அம்மாநாட்டுக்குப் பின்னர் 1968-ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்றது. அப்போது முதல்-அமைச்சராக விளங்கிய அறிஞர் அண்ணா அம்மாநாடு சிறப்பாக நடைபெற எல்லா வகையிலும் ஈடுபட்டு உழைத்தார். அப்போதுதான் சென்னைக் கடற்கரையில் தமிழ்ச்சான்றோர்களின் சிலைகள் நிறுவப்பெற்றன. தமிழ்நாட்டின் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் அமைக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு நடத்தப்பட வேண்டுமென்னும் நடைமுறை வகுக்கப்பட்டு 1970-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பாரீசு நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாட்டிலிருந்து, அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், ஒரு குழு சென்று கலந்துகொண்டது. இந்த வரலாறு நீண்டு கொண்டே செல்லும். எனினும் 1981-ஆம் ஆண்டு மதுரையில் அப்போதிருந்த முதல்-அமைச்சர் எம்ஞ்சியாரின் ஈடுபாட்டால் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு அப்போதிருந்த முதல்-அமைச்சர் செயலலிதாவால் நடத்தப்பட்டது.
இப்போது பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் இன்று (சூலை 4) தொடங்க உள்ளது. நூற்றுக்கணக்கான அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கோணங்களில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்க உள்ளார்கள். தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் எனத் தமிழின் தொன்மையான நூல்களைப் புதிய கோணங்களில் ஆராய்ச்சி செய்யும் கட்டுரைகள் வழங்கப்படவுள்ளன. இத்துடன் நில்லாமல் தமிழரின் தொன்மையைக் கண்டறிய உதவும் கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் புதிய உண்மைகள் உலகுக்கு வழங்கப்படும் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
கணினித்துறையில் ஏற்பட்டுள்ள கண்டுபிடிப்புகளைக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஆவன செய்தற்குரிய திட்டங்கள், கீழடியில் அண்மையில் கண்டறியப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் அறியலாகும் தமிழர் வரலாறு போன்ற பயனுள்ள ஆய்வுகளை இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் காணும்போது மனம் மகிழ்கிறது.
தமிழறிஞர்களின் ஒருமித்த முயற்சியால் தமிழ் பல புதிய ஆக்கங்களை இம்மாநாட்டின் மூலம் அடையும் எனவும், தமிழருக்குப் புதிய அறிவுத்துறைகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் எனவும் நம்புகிறோம்.
பத்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் தமிழறிஞர்களையும் உலகெங்குமிருந்து இம்மாநாட்டுக்கு வரும் அறிஞர்களையும் வாழ்த்துவோம். தமிழால் இணைவோம். வெல்க தமிழ்.
முனைவர் மறைமலை இலக்குவனார்,
சிறப்பு வருகைப் பேராசிரியர்,
கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.
–தினத்தந்தி நாள் சூலை 4, 2019

சனி, 8 ஜூன், 2019

செம்மொழி என்னும் போதினிலே …! – முனைவர் ஒளவை நடராசன்



(சூன் 6 –  தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட  நாள்)
“ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டுப் பேராசிரியராகிய நான் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். இலத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும். இந்தியா பெருமை மிக்க நாடு, இந்து சமயம் உலகச் சமயங்களில் சிறந்த ஒன்று என்று புதிதாக வாதாடுவதைப் போலத்தான் தமிழ் செம்மொழிதான் என்று உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையை நிலை நிறுத்துவதாகும்.”
இவ்வாறு அறிஞர் சியார்சு ஆர்ட்டு (George Hurt)எழுதியது வரலாற்றில் நிற்கும் வைரச் சொற்களாகும்.
தொன்மைச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் வகையில் 1500 முதல் 2000 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமிதம் கொண்டதாகவும், காலப்பழமையும், இலக்கண முழுமையும், இலக்கியச் செழுமையும் ஒரு மொழி கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்திய அரசு வரையறுத்துச் செம்மொழி தகுதியை வழங்கியது. அந்த வகையில் இன்றைய நிலையில் தமிழ், சமக்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒரியா முதலிய ஆறு மொழிகளையும் செம்மொழிகளாக உலகிலேயே இந்திய நாடுதான் அறிவித்துள்ளது.
2004-ஆம் ஆண்டு அட்டோபர் மாதம் 12-ஆம் நாள் தமிழுக்குச் செம்மொழி தகைமை வழங்கும் ஆணையை மத்திய அரசு வழங்கியது. இன்றைய நன்னாளில்தான் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 6-6-2004 அன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர் முனைவர் ஏ.பி.செ.அப்துல்கலாம், “தமிழ் செம்மொழியாக இனிப் பொன்னொளியோடு மின்னி மிளிரும்” என்று அறிவித்தார். இந்த புகழ் மொழி தமிழறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களையும், தமிழக அரசு தொடங்கி, தமிழர் வாழும் அரசுகளையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக மைசூரில் செயற்பட்ட செம்மொழி தமிழாய்வுப் பிரிவு, தமிழ்நாட்டில் சென்னை மாநகரிலேயே அமைந்தது.
இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம் என்பது இந்திய நாட்டின் இரண்டொரு மாநிலங்களில் தலைநகரங்களில் தலைமை நிலையத்தைக் கொண்டிருந்தது. தென்னக மொழிகளை ஆய்வு செய்யும் மொழிகள் நிறுவனமாக மைசூர் நடுவண் நிறுவனம் அமைந்து இருந்தது.
மொழியியல் சார்ந்த தலைப்புகளில் அறிஞர்களைக் கொண்டு ஆய்வுப்பணிகளை ஆற்றியது. தமிழார்வம், தமிழ் இலக்கியச் செறிவு முதலியன இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசோ, செம்மொழி என்ற முழக்கத்தின் அடிப்படையே விளங்காமல் கண் தெரியாதவனுக்குத் துதிக்கை உலக்கையாக தெரிந்தது போல மைசூர் நிறுவனத்தில் தமிழ் மொழிப்பிரிவில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். மைசூர் நிறுவனத்தின் கிளைக்குச் செம்மொழிக்கென வழங்கப்பட்ட தொகை திகைப்பைத் தந்தது. இது முதற்கோணலாயிற்று.
நான்கு கூட்டங்கள் போலத், தமிழகச் செம்மொழி நிறுவனத்தின் சார்பில் மைசூரிலேயே நடந்தன. தமிழகத்தின் தலைநகரில் அல்லவா இந்த நிறுவனம் அமைய வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி வலியுறுத்தியதால், மைசூரில் இருந்த ஒரு பிரிவைச் சென்னைக்கு அனுப்பி நிறுவனத்தைத் தொடங்கச் சொன்னார்கள்.
இந்தக் கோட்பாட்டுப்  பின்னணியில் ஏற்பட்ட குழப்பத்தால் செம்மொழி நடுவண் நிறுவனத்தில் மொழியியலாளர்களே இடம் பெற்று ஆராய்ச்சிகளைச் சென்னையிலும் தொடங்கினார்கள். தமிழக அரசு இந்த நோக்கையும், போக்கையும் மாற்ற முனைந்தது. தமிழக அரசுக்கே முழுப்பொறுப்பையும் வழங்குவதற்கு மத்திய அரசு தடையாக நின்றது.
செம்மொழி பெருமிதத்துக்காகவே 500 கோடி உரூபாய் செலவில் ஐந்து நாள் மாநாடு கோவையில் உலகத்தமிழ் மாநாடு ஒத்தநிலையில் மாபெரும் மாநாடாக நடந்தது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி தாமே தம் கடின உழைப்பையும், உறுதியையும், கரைகாணாத் தமிழ்க்காதலையும் காட்டிய மாநாடாகத் திகழ்ந்தது. இந்தியக் குடியரசுத் தலைவரே நேரில் வந்து நெஞ்சுருகப் பாராட்டி வாழ்த்தினார். கருணாநிதி தாம் பெற்ற தமிழ் வெற்றியாக தன் செலவில் ஒரு கோடி உரூபாய் தமிழறிஞர் விருதளிப்புக்கென வழங்கியதையும் நினைவு கூரலாம். அந்தக் கோப்பு தில்லிக்கும், சென்னைக்குமாக மிதிபட்டுத் தேக்கமுற்றது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ் மக்கள் எதிர்பார்த்து ஏங்கிப்பெற்ற ஆய்வு நிறுவனமாகும். அறிஞர்கள் கண்ட கனவுகள் பல. ஆய்வுக்களங்களோ எண்ணற்றவை. அந்த நாளிலேயே வாழிய செந்தமிழ் என்று பாரதியார் தம் மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும், இனப்பற்றையும் ஒன்றாக இணைத்துச் செம்மொழி நிறுவனத்துக்கு அடிகோலினார். நாளும் முயன்ற நல்லறிஞர்களையும், அரசையும் கட்சிக் கண்ணோட்டத்திலேயே காணும் போக்கும் படர்ந்தது.
தாயில்லாத சவலைப் பிள்ளையாக நாளும் ஒரு கவலையும், பொழுதும் ஓர் அவலமும் கொண்டு அழும் குரல் எல்லை தாண்டித் தில்லியின் காதில் எட்டுவதில்லை. மாநிலத் தலைநகரில் உள்ள வேறு எந்த நடுவண் நிறுவனமும் இத்தகைய புறக்கணிப்பால் தவிக்கவில்லை.
ஒரு பல்கலைக்கழகத்தை கட்டிக்காத்த துணைவேந்தரும், புகழ் வாய்ந்த கல்லூரியின் முதல்வரும், நல்லறிஞரும் துணைத்தலைவராக இருந்தும் தினையளவும் சிக்கல் தீரவில்லை. துணைத்தலைவருக்கு அடையாறு இ.தொ.நி.(ஐ.ஐ.டி.) தலைவரைப் போன்ற அதிகாரங்களை வழங்கியிருக்க வேண்டாவா? நாடாளும் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக இன்று பதவியேற்று இருக்கும் இரமேசு பொக்ரியால் நாடு புகழும் கவியரசராவார். உத்தரகாண்டு மாநிலம் ஆண்ட முதல்- அமைச்சருமாக இருந்தவர். கவியரசர்களுக்குத்தான் மொழியின் அருமையும், பெருமையும் நன்றாக தெரியும் என்று நம்புகிறார்கள். அந்த வாய்ப்பை வலியுறுத்தும் கடமை தமிழக அரசையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சாரும்.
செம்மொழி நிறுவனம் செழித்தோங்கும் நிறுவனமாக மலர வேண்டும். நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் போல உருப்பெறுவதற்கு இடமும் வழங்கப்பட்டு வளமனைகள் வளர்ந்து வருகின்றன. செம்மொழி நிறுவனத்திற்காகத், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக சென்னை, பெரும்பாக்கத்தில் 17 காணி நிலம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. “செம்மொழி என்னும் போதினிலே சிந்தும் அழுகுரல் விழுகுது காதினிலே” என்று சொல்லும் நிலைமை துடைக்கப்பட வேண்டும். பொங்கும் மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடும் நன்னாளாக செம்மொழி நாள் அமைய வேண்டும்.
– முனைவர் ஒளவை நடராசன்,
முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தினத்தந்தி 06.06.2019

வியாழன், 6 ஜூன், 2019

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்

அகரமுதல


புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும்

இந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.
 ‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.
 இந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவின் கல்விக்கொள்கையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்களைக் கண்டறிந்து ஒரு புதிய கல்விக்கொள்கையை வகுத்து முன்மொழிந்துள்ளது.
 இந்தப் புதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழித் திட்டம் கட்டாயமாக்கப் பட்டதும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்பட்டதும் உணர்வுக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பன்முகப்பாங்கான இந்திய நாட்டின் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளை மனதில் கொள்ளாது ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை வலிந்து திணிக்கும் முயற்சி மாநிலங்களுக்கு உள்ள உரிமையில் வரம்பு மீறித் தலையிடுவதாக உள்ளது.
 கல்வி, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான ஒருங்கிணைந்த பட்டியலில் விளங்கி வருவதனை மெல்ல மெல்ல நீக்கிவிடும் முயற்சியில் மோடி அரசு செய்துவருகிறது என்னும் வருத்தம் மூத்த கல்வியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வுமுறை கட்டாயமாக்கப்பட்ட போதே கல்வி, மாநிலங்களின் பட்டியலில்இருந்து அறிவிப்புச் செய்யாமல் அகற்றப்பட்டுவிட்டதே என்னும் கொந்தளிப்பும், மாநில உரிமைகள் பறிபோகின்றனவே என்னும் ஏமாற்றமும் ஏற்பட்டன அல்லவா?
 இந்தப் புதிய கல்விக்கொள்கை, இந்தியைக் கட்டாயமாக்குவதுடன், மாநில உரிமைகளிலும் தலையிடுவதாக உள்ளது. விரிவான அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்குக் குழிபறிப்பதாக இந்தக் கொள்கை திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது.
 கல்வியில் தாய்மொழியின் முதன்மையையும், தேவையையும் சில பகுதிகளில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆங்கில அறிவு அறிவியல் வளர்ச்சிக்குத் தேவை எனவும் இந்த அறிக்கையிலே வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழைக் குறிப்பிடும்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பாலி, பெருசியன் என்னும் பட்டியலை விரிக்கும் இந்த அறிக்கையாளர்கள் சமசுகிருதத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் விரிவாக அதன் பெருமைகளை விளக்கிச் செல்கிறார்கள். காளிதாசன், பாசன் என்றெல்லாம் சமசுகிருதப் புலவர்களின் பெயர் சொல்லிப் பாராட்டும் அறிக்கையாளர்களுக்கு ஓரிடத்திலாவது தொல்காப்பியர், திருவள்ளுவர் என்று கூற வேண்டுமெனத் தோன்றவில்லையே? இடமில்லையா? மனமில்லையா?
விண்வெளியியல் ஆய்வாளரைக் கொண்டு கல்வித்திட்டம் வகுப்பதே பொருத்தமானதாகத் தெரியவில்லையே? இவ்வளவு பெரிய நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா? அறிக்கை உருவாக்கியவர்கள் பட்டியலைக் கவனித்தால் ஒருவர் கூடத் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெறவில்லை என்னும் குறை உறுத்துகிறதே? கல்வியின் தாயகம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் ஒருவரையாவது குழுவில் இணைத்திருக்கலாமே?
கல்வித்துறையில் 217 பேரைச் சீர்சால் பெருந்தகைகள் என்று பட்டியலிட்டுள்ளார்கள். இப்பட்டியலிலும் இரண்டே பேர் தான் தமிழ்நாடு.
மொத்தத்தில் பாரபட்சம் மிக்க இந்தக் கல்வி கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். அந்தந்த மாநிலங்களுக்குரிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநிலச் சூழல்களுக்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் வகுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் கடமையுணர்வு மிக்க கல்வியாளர்களை ஒருங்கிணைத்துக் கல்விக் கொள்கை வகுத்துக் கொள்ளவேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் சார்பாளர்கள் கொண்ட குழுவை அமைத்துப் பொதுவான சில திட்டங்களை உருவாக்கி மாநில அரசுகளின் இசைவோடு அந்தந்த மாநிலக் கல்வித் திட்டங்களில் இணைத்துக் கொள்ளவேண்டும். அணுவளவும் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.
தாய் மொழியின் முதன்மையுணர்ந்து தாய்மொழி வழிக் கொள்கை உருவாக்கினால் நாடு முன்னேறும். காந்தி, தாகூர் போன்ற சான்றோர்கள் கண்ட கனவாகிய ‘தாய்மொழிவழிக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிய சிந்தனையும், புதிய கண்டுபிடிப்புகளும் பெருகும். இந்தியா வல்லரசாக உலகில் உயர்ந்தோங்கும்.
முனைவர் மறைமலை இலக்குவனார்
(சிறப்புவருகைப் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா)
– தினத்தந்தி 05.06.2019

திங்கள், 5 நவம்பர், 2018

அரசியலில் நல்லிணக்கம்—உடனடித் தேவை! – மறைமலை இலக்குவனார்

அகரமுதல

அரசியலில் நல்லிணக்கம்—உடனடித் தேவை!

‘உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு’ என்னும் பெருமையைப் பெற்றது நம் நாடு. இங்கே பல்வேறு கட்சிகள் இயங்கிவருகின்றன. புதிது புதிதாக உருவாகியும் வருகின்றன. மக்கள்நலன் என்னும் குறிக்கோளை அடைவதற்கு அவை திட்டமிடுகின்றன. அவை மேற்கொள்ளும் வழிகள்தான் வேறுபட்டவை.
மக்கள் நலனுக்காக உழைக்கப் பாடுபடும் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கவேண்டிய தேவை இல்லை. கருத்து மாறுபடலாம்; ஆனால் பகைமை கொள்ளக் காரணமே இல்லை.
புதுதில்லியில் ஏதேனும் ஒரு விழா என்றால் அனைத்துக் கட்சியினரைய்ம் ஒன்றாகக் காணலாம். விடுதலை நாள் விழாவைத் தொலைக்காட்சியில் பார்க்கிறோம். நாடாளுமன்றத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் அன்புடன் புன்னகை தவழும் முகத்துடன் அளவளாவி அருகருகே அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நம் தமிழ்நாட்டில் தலைவர்கள் எப்போதுமே எதிர் எதிர் துருவங்களாக விளங்குவதனைக் காணும்போது வருத்தமாகத்தான் உள்ளது.
திருமணம் போன்ற பொதுவான நிகழ்ச்சிகளில் கூட இவர் வரும்போது அவர் இருப்பதில்லை, அவர் வரும்போது இவர் இருப்பதில்லை என்னும் நிலையைத்தான் நாம் பார்த்துவருகிறோம்.
மக்களாட்சியும் மனிதநேயமும் உடலும் உயிரும் போன்றவை. சமுதாய நல்லிணக்கத்திற்குக் கருத்துவேறுபாட்டை மதிக்கும் பெருந்தன்மை மிகவும் தேவை.
பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் மூதறிஞர் இராசாசியும் எதிரெதிர் துருவங்களாகவே பொதுவாழ்வில் இயங்கிவந்தார்கள். ஆனால் நட்பும் நல்லிணக்கமும் பேணுவதில் அவர்கள் ஈடு இணையற்றவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பது வரலாற்றுண்மை.
இராசாசி மறைந்தபொழுது மிகவும் வருந்திய பெரியார் சுடுகாட்டை விட்டு வெளியே வரவே மறுத்துவிட்டார். அங்கே தகனம் நடந்தவேளையில் அவர் குலுங்கிக்குலுங்கி அழுததைப் பார்த்த அனைவரும் நட்பின் ஆழத்தை உணர்ந்தார்கள்.அவர்களுக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு அவர்கள் நட்புக்குத் தடையாக விளங்கவிலை.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சியும் காங்கிரசுக்கட்சியும்மும்முரமாகப் போட்டி போட்டுத் தேர்தலில் நின்றகாலம்; நீதிக் கட்சிப் பிரமுகர் ஆர்க்காடு இராமசாமி(முதலியாரும்) காங்கிரசுக் கட்சிப் பிரமுகர் சத்தியமூர்த்தியும் தமது பயணத்துக்கிடையே நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டது.
“எப்படி இருக்கிறது தேர்தல் வாய்ப்புகள் எல்லாம்?” என்று கேட்கிறார் காங்கிரசுத் தலைவர் சத்தியமூர்த்தி.
“அதற்கென்ன?பிரகாசமாகத்தான் இருக்கிறது.” – நீதிக்கட்சி ஆர்க்காடு இராமசாமி (முதலியார்).
“யாருக்கு?” எனக் கேட்கிறார் சத்தியமூர்த்தி.
“உங்களுக்குத் தான்” என்கிறார் ஆர்க்காடு இராமசாமி(முதலியார்).
அதற்குப் பிறகு அங்கு இருந்த அனைவரும் குலுங்கக் குலுங்கச் சிரித்து ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றனர்.
இந்த நிகழ்ச்சியை அறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இவ்வாறு நட்புடன் பழகவேண்டும் என அறிவுறுத்தினார்.
இன்று நம் நாட்டில் அரசியல் உலகில் வெறுப்புணர்வு அளவுக்கு மீறித் தலைதூக்குகிறது. அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பே. ஆனால் வேறுபாடு வெறுப்புணர்வுக்கு வழிவகுக்கக்கூடாது.
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி வாக்குச்சீட்டுக்கே உள்ளது. வாக்காளர்களின் நன்மதிப்பைப் பெறுவதில் கட்சிகளிடையே போட்டி இருக்கலாம். ஆனால் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவதில் போட்டி இருக்கக்கூடாது. தனிமனித அவதூறுகளும் தாக்குதல்களும் வாக்காளரிடையே மக்களாட்சியின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும்.இதன் விளைவாகவே நோட்டாவுக்கு ஆதரவு பெருகிவருகிறது.
1967 தேர்தலில் பெருந்தலைவர் காமராசர் விருதுநகர் தொகுதியில் போட்டிட்டு ஒரு கல்லூரிமாணவனிடம் தோற்றார்.நாடே அதிர்ந்தது.அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர் கருத்து கேட்கிறார்.
“இது சனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்று போடுங்கள்”என்கிறார் பெருந்தலைவர்.
“இத்தனை ஆண்டுக்காலமாக அரசியலில் ஈடுபட்டு இவ்வளவு பதவிகளையும் பெற்ற என்னை ஒரு சாதாரணக் கல்லூரி மாணவர் தேர்தலில் நின்று தோற்கடிக்க முடிகிறதென்றால் அதுதான் இந்திய சனநாயகத்தின் வெற்றி..வேறெந்த நாட்டிலும் காணமுடியாத சனநாயகத்தை இந்தியாவில் பார்க்கிறீங்களல்லவா? இதைப் பெருமையாக எழுதுங்கள்” என்று அந்த மாபெருந்தலைவர் சொன்னவை வைரவரிகளல்லவா? தம் தோல்வியை ஒரு பொருட்டாகக் கருதாமல் அதற்காகச் சற்றும் வருந்தாமல், ஆளும் கட்சியின் அகில இந்தியத் தலைவரை எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் அரசியல் புதுமுகம் வெல்வது சிறப்பானது என்று சொல்ல எவ்வளவு பெருந்தன்மையும் தீர்க்கதரிசனமும் தேவை?
அண்ணாவிடம் கேட்டார்கள்.”தலைவர் காமராசர் தோல்வியடைவார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. ஓர் இளைஞரை அவருக்கு எதிராக நிறுத்தியதும் காமராசர் வெற்றியடையவேண்டும் என்ற கருத்திலேதான். முன்னணித் தலைவர்கள் நாங்கள் யாருமே அவரை எதிர்த்துப் பரப்புரை  செய்ய வரவில்லை. அவரின் தோல்வி அதிர்ச்சியளிக்கும் தோல்வி. ஒவ்வொரு தமிழனின் தோல்வி. தமிழ்நாட்டை எல்லாத்துறைகளிலும் முன்னிறுத்திய அவரைப் புறக்கணிக்க வாக்காளர்களுக்கு எப்படி மனம் வந்தது?” என வேதனையுடன் பேசினார் அண்ணா.
பெருந்தன்மையுடன் பழகுவதில் இவர்களை முன்மாதிரிகளாகக் கொண்டாலே போதும். அரசியல் அனைவரும் விரும்பும் களமாக மாறிவிடும். அரசியலில் மனிதநேயம் பேணுவதற்குப் பழிவாங்கும் உணர்ச்சியும் விரோத மனப்பான்மையும் முற்றிலும் நீக்கப்படவேண்டும்.மாற்றுக்கட்சியினரை “அரசியல் சகா’ என்று கருத்வேண்டும்.’அரசியல் எதிரி’எனக் கருதும் மனப்பான்மையைத் தவிர்க்கவேண்டும்.
ஒருமுறை தேர்தலின் போது அறிஞர் அண்ணா அவர்களை மிகவும் இழிவாக வசைபாடி ஒரு விளம்பரத்தட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனைக் கேள்விப்பட்ட அண்ணா சிரித்தவாறே “அந்தத் தட்டியை இரவில் படிக்கமுடியாமல் போய்விடுமே. எனவே இரவிலும் படிக்கும்வகையில் ஒரு வலைவிளக்கு(பெட்ரோமாக்சு)  அதன் அருகில் வைத்துவிடுங்கள்.”உபயம் அண்ணாதுரை” என்று எழுதிவையுங்கள்” என்று கூறினாராம்.விளக்கு வைக்கப்பட்டது.சற்றுநேரத்தில் அந்த அவதூறு பரப்பும் தட்டியும் காணாமல் போய்விட்டது.
இராசாசி முதலமைச்சராக இருந்தபொழுது அவருக்கெதிராக ஒரு கருப்புக்கொடிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமக்கு எதிரான கருப்புக்கொடிப் போராட்டத்தைக் கேள்விப்பட்ட இராசாசி கோபப்படவில்லை; போராட்டத்திற்குத் தடையும் விதிக்கவில்லை. போராட்டநாளன்று இராசாசி  திரும்பிய திசையெங்கும் கருப்புக்கொடி அணிவகுப்பு. ஒரு நாற்சந்திப்பில் முதலமைச்சர் இராசாசி தம் வண்டியை விட்டு இறங்கினார். போராட்டக்காரர்களை நோக்கி “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்” எனக் கேட்டார். “நாங்கள் உங்களுக்கு எதிராகக் கருப்புக்கொடிப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார்களாம். அதற்கு இராசாசி “நான் கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறேன். நீங்கள் வெள்ளைக்கொடி காட்டினாலும் அது எனக்குக் கருப்புக்கொடியாகத்தான் தெரியும். எனவே நீங்கள் வெள்ளைக்கொடி காட்டியதாகவே நினைத்துக்கொள்கிறேன். நான் எங்கே போனாலும் வெள்ளைக்கொடி காட்டி வரவேற்பு அளித்தமைக்கு நன்றி.” எனப் புன்னகை பூத்தவாறே கூறினாராம். வெறுப்பிலே தொடங்கிய போராட்டம் முதலமைச்சரின் சிரிப்பிலே சுமுகமாக முடிந்துவிட்டது.
எதிர்க்கட்சிகள் போராடும் மக்களாட்சி வழங்கியுள்ள உரிமைப் போராட்டத்தைப் பகைமையுணர்வோடு பார்க்காமல் இணக்கமான அணுகுமுறையுடன் தீர்வு காண முயல்வது அரசின் கடமை. போராட்டத்தில் வன்முறை கலந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. அவரவர் எல்லைக்கோடு அறிந்து நடந்துகொண்டால் நாட்டுக்கும் நன்மை;மக்களுக்கும் நிம்மதி.
இன்றைய அரசியல் உலகில் சூடான பேச்சுகள் மிகுந்துவருகின்றன. ஒருவருக்கொருவர் பழி கூறுவதும் அறைகூவல் விடுவதும் வாடிக்கையாகிவருகின்றன. தலைவர்கள் கடுமையாகத் தாக்கிக் கொண்டால் தொண்டர்களுக்கிடையேயும் பூசலும் பிணக்கும் மிகுந்துவிடும்.நாட்டின் பொது அமைதி குலைந்துவிடும். மெல்ல மெல்லச் சட்டமும் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிடும்.
மக்களாட்சியின் மாண்பு காக்க மனிதநேயமும் நட்புணர்வும் உடனடித் தேவை. அரசியல் மேடைகள் பேச்சு மேடைகளாக இல்லாமல் ஏச்சு மேடைகளாக மாறிவிடக்கூடாது.
பொறுமையும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் வரவரக் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. பெருந்தன்மை என்பதை அகராதியில்தான் பார்க்கமுடிகிறது.
இந்த நிலை மாறுமா? வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த நாடு. மாபெரும் தலைவர்கள் தியாகம், பெருந்தன்மை, மனிதநேயம் ஆகியவற்றைத் தம் வாழ்வின் மூலம் விளக்கிய பூமி இது.
காணாமல் போய்க்கொண்டிருக்கும் மனிதநேயம் மீண்டும் துளிர்க்குமா? நட்பும் நல்லிணக்கமும் நேயமும் அரசியல் உலகில் மீண்டும் செழிக்குமா?

பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
தினத்தந்தி 11.2018

திங்கள், 29 அக்டோபர், 2018

சமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

அகரமுதல

சமூகப் புரட்சியாளர் பெரியார்

பெரியார் சிறந்த சிந்தனையாளராக, சமூகப் புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனை களைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். ஐ.நா. சபையின் உறுப்பாகிய ‘யுனெசுகோ’ நிறுவனம் ‘புத்துலகத் தொலைநோக்காளர்; தென் கிழக் காசியாவின் சாக்ரடிசு; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்குகள்,  மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் எதிர்வாதங்களால் ஆராய்ந்து பார்த்துத் தன் அறிவுக்குச் சரியென்று பட்டதையே ஏற்றுக் கொள்ளும் அறிவு முதிர்ச்சி பிஞ்சுப் பருவத்திலேயே பெரியாருக்கு வாய்த்திருந்தது. அவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் கடைவைத்திருந்த ஒரு கடைக்காரர் ‘எது நடந்தாலும் எல்லாம் தலைவிதிப்படியே நடக்கிறது’ என ஓயாமல் சொல்வதைப் பிள்ளை வயதிலிருந்த இராமசாமி ஏற்றுக்கொள்ள மறுத்துக் கடைக்காரரிடம் வாதங்கள் புரிந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடைக்காரர் ‘எல்லாம் விதிப்படித்தான் நடக்கும்’ என்றாராம். சுட்டிப்பிள்ளையாய் இருந்த இராமசாமி அந்தக் கடையில் சாத்திவைத்திருந்த தட்டியைக் கீழே தட்டி விட்டு அப்படியானால் ‘இதுவும் விதிப்படி தான் நடந்தது’ என்று கூறிவிட்டு ஓடிவிட்டாராம். கடைக்காரர் விதியை நோவாரா? இராமசாமியைத் திட்டுவாரா? அவரது சேட்டைகளைப் பொறுக்கமாட்டாமல் அவரது தந்தையார் வெங்கடப்பர் கடையில் அமர்ந்து வணிகம் பார்க்குமாறு கூறிவிட்டார்.
தமது பொதுவாழ்வின் தொடக்கத்தில் காங்கிரசு கட்சியில் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அப்போது அவர் நிகழ்த்திய கள்ளுக்கடை மறியல், பங்கு பெற்றுப் போராடிய வைக்கம் போராட்டம் ஆகியன வரலாற்றுப் புகழ்மிக்கவை. காங்கிரசில் இருந்து விலகித் தனியே சமூக நீதியை நிலைநாட்ட 1925-ஆம் ஆண்டு இறுதியில் தன்மதிபபு(சுயமரியாதை) இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற கொள்கையை அடி நாதமாக்கினார். 1928-இல் வகுப்புவாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட முனைவர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா(முதலியார்) மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார். அதன்படி, அரசு ஆணை அன்றிருந்த சமூகநீதி அரசால் நடை முறைப்படுத்தப்பட்டது. 1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை சமத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்சாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச்சியைத் தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த தலைமையமைச்சர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951இல் நிறைவேற்றினர். அதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்துகாப்பாற்றப்பட்டது. பெரியாரின் பேருழைப்பினால் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பினர் அரசியலிலும் அரசுப் பணிகளிலும் பெற்ற எழுச்சி இந்தியா எங்கும் பரவியது. மிதியூர்தி(ஆட்டோ)ஓட்டும் தொழிலாளி மகன் பொறியாளர் ஆவதும், கல்லுடைக்கும் தொழிலாளி மகள் ஆட்சியர்(கலெக்டர்) ஆவதும் பெரியார் விதைத்த சமூகப் புரட்சியின் விளைவேயாகும். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் முழங்கி, பெண்கள் தம் அடிமைத்தளையை உடைத்தெறிந்து எல்லா நிலைகளிலும் ஆணுக்குச் சமமாக முன்னேற வேண்டும் என அறிவுறுத்திய முன்னோடித் தலைவர் பெரியாரே. அவருடைய ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்னும் நூல் பெண்ணுரிமை இயக்கத்தின் வழிகாட்டியாய் விளங்குகிறது. தமது வாழ்க்கையிலும் துணைவியார் நாகம்மையார், அவருக்குப் பின் துணைவியாய் அமைந்த மணியம்மையார், தங்கை கண்ணம்மை எனத் தம் இல்லப் பெண்களுக்கும் தலைமையும் முதன்மையும் வழங்கிப் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு முன்எடுத்துக்காட்டாய் விளங்கியவர் பெரியார். அவருக்குப் பின்னர் மணியம்மையார் திராவிடர் கழகத்தைப் பல சோதனைகளைக் கடந்து திறமையாக நிலைநிறுத்தியது பெரியார் கொடுத்த பயிற்சியாலேயே எனலாம். அக்காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கூறும் மரியாதைச் சொல் அவர்களுடைய சமயப் பிரிவால் வேறுபட்டிருந்தன. பெரியார் ‘வணக்கம்’ என்று சொல்வதை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று கூறினால் நீங்கள் சுயமரியாதைக்காரரா என்று கேட்பார்கள். காலப்போக்கில் வணக்கமே செல்வாக்கு பெற்றது. ‘வணக்கம்’ என்னும் ஒற்றைச்சொல் சமயம், சாதிப் பிரிவுகளைச் சுக்குநூறாக்கியது. எனவே தமிழின் பயன்பாடு தன்மதிப்பை(சுயமரியாதையை)க் காத்து மனிதர்களை ஒன்றுபடுத்தும் வல்லமை வாய்ந்தது என்பதைப் பெரியார் நிறுவிக்காட்டினார். பெரியாரின் இயக்கம் கல்லூரி மாணவர்களை, படித்தவர்களை, கலைஞர்களை, சமூகப் பொறுப்பில் உள்ள பலரைத் தன்பால் ஈர்த்தது. இவர்களுள் அறிஞர் அண்ணாவும் கலைஞர் மு.கருணாநிதியும் திரைப்பட உரையாடலால் மக்கள் கவனத்தைக் கவர்ந்தனர். பொருந்தாக் கற்பனை மிகுந்த புராணப்படங்கள் மறைந்தன. சமூக ஏற்றத்தாழ்வுகளை எண்ணிப் பார்த்துச் சமநீதியும், சமூகநீதியும் மேலோங்குதற்குரிய கருத்துகளைப் பரப்பும் திரைப்படங்கள் வெளிவந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டின.
பல நடிகர்கள் பெரியாரின் முற்போக்குக் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் பரப்பினர். ‘சிவாசி கண்ட இந்து இராச்சியம்’ என்ற நாடகத்தில் பேரரசர் சிவாசியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாசி கணேசன்’ என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்தப் பெயரே நிலைத்தது. கலைவாணர் என்.எசு.கே. புரட்சி வாய்ந்த கருத்துகளை மக்களிடையே தம் நாடகங்கள் மூலமும் திரைப்படம் வாயிலாகவும் பரப்பிவந்ததனைப் பெரியார் பாராட்டினார். ‘கொள்கை வேறு; நட்பு வேறு’ என்பது பெரியா ருடைய வாழ்வியல் நெறி. ஒளவை டி.கே.சண்முகம் பெரியாரைக் காண வரும்போது அவருடைய நெற்றியில் வழக்கமாகக் காணப்படும் திருநீறு காணப்படவில்லை. “என்ன சண்முகம்? என்ன ஆயிற்று? நெற்றி வெறுமனே இருக்கிறதே?” எனப் பெரியார் கேட்டாராம். “இல்லை ஐயா கருஞ்சட்டைக்காரர்கள் நிறைய வலம்வரும் இந்த இடத்தில் நான் நெற்றி நிறைய நீறு பூசிவந்து உங்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை” என்றாராம் ஒளவை டி.கே.சண்முகம். “கொள்கை வேறு; நட்பு வேறு; நன்றாக நீறு பூசி வாருங்கள். எனக்காக நீங்கள் உங்கள் பழகத்தை விட்டுவருவதுதான் எனக்குச் சங்கடமாயிருக்கிறது” என்றார். இப்படிப் பெருந்தன்மையின் இலக்கணமாகத் திகழ்ந்த பெரியாரின் மாண்புமிக்க மனிதநேயம் நம் அனைவருக்கும் வழிகாட்டியாய் விளங்குகிறது. அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கி யிருந்த தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து எழுச்சி கொள்ளச் செய்ததில் பெரியாரின் பேருழைப்பு பெரும்பங்களித் துள்ளது. நுழைவுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப் பட்டால் கிராமத்து மாணவர்கள் தம் கல்விவாய்ப்பை இழந்துவிடுவார்கள் என எச்சரித்துத் தமது காலத்தில் அறிமுகமாக இருந்த நுழைவுத்தேர்வு முறையைத் தவிர்த்தவர் பெரியார்.
அவர் வழியில் மத்திய அரசும், மாநில அரசும் ‘நீட்’ முதலான நுழைவுத்தேர்வுமுறைகளை ஒழித்துக் கட்டி சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்வோரும் கல்விவாய்ப்புப் பெற உழைக்கவேண்டும். இத்தகைய ஆக்கவழிகளில் நாம் முனைந்து செயல்புரியத் தொடங்கினால அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும்.
  • பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
நன்றி: ‘தினத்தந்தி’ 17.9.2018 (பெரியார் பிறந்த நாள்)
விடுதலை 17.09.2018