அகரமுதல
அரசியலில் நல்லிணக்கம்—உடனடித் தேவை!
‘உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு’ என்னும் பெருமையைப் பெற்றது நம் நாடு. இங்கே பல்வேறு கட்சிகள் இயங்கிவருகின்றன. புதிது புதிதாக உருவாகியும் வருகின்றன. மக்கள்நலன் என்னும் குறிக்கோளை அடைவதற்கு அவை திட்டமிடுகின்றன. அவை மேற்கொள்ளும் வழிகள்தான் வேறுபட்டவை.
மக்கள் நலனுக்காக உழைக்கப் பாடுபடும் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கவேண்டிய தேவை இல்லை. கருத்து மாறுபடலாம்; ஆனால் பகைமை கொள்ளக் காரணமே இல்லை.
புதுதில்லியில் ஏதேனும் ஒரு விழா என்றால் அனைத்துக் கட்சியினரைய்ம் ஒன்றாகக் காணலாம். விடுதலை நாள் விழாவைத் தொலைக்காட்சியில் பார்க்கிறோம். நாடாளுமன்றத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் அன்புடன் புன்னகை தவழும் முகத்துடன் அளவளாவி அருகருகே அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நம் தமிழ்நாட்டில் தலைவர்கள் எப்போதுமே எதிர் எதிர் துருவங்களாக விளங்குவதனைக் காணும்போது வருத்தமாகத்தான் உள்ளது.
திருமணம் போன்ற பொதுவான நிகழ்ச்சிகளில் கூட இவர் வரும்போது அவர் இருப்பதில்லை, அவர் வரும்போது இவர் இருப்பதில்லை என்னும் நிலையைத்தான் நாம் பார்த்துவருகிறோம்.
மக்களாட்சியும் மனிதநேயமும் உடலும் உயிரும் போன்றவை. சமுதாய நல்லிணக்கத்திற்குக் கருத்துவேறுபாட்டை மதிக்கும் பெருந்தன்மை மிகவும் தேவை.
பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் மூதறிஞர் இராசாசியும் எதிரெதிர் துருவங்களாகவே பொதுவாழ்வில் இயங்கிவந்தார்கள். ஆனால் நட்பும் நல்லிணக்கமும் பேணுவதில் அவர்கள் ஈடு இணையற்றவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பது வரலாற்றுண்மை.
இராசாசி மறைந்தபொழுது மிகவும் வருந்திய பெரியார் சுடுகாட்டை விட்டு வெளியே வரவே மறுத்துவிட்டார். அங்கே தகனம் நடந்தவேளையில் அவர் குலுங்கிக்குலுங்கி அழுததைப் பார்த்த அனைவரும் நட்பின் ஆழத்தை உணர்ந்தார்கள்.அவர்களுக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு அவர்கள் நட்புக்குத் தடையாக விளங்கவிலை.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சியும் காங்கிரசுக்கட்சியும்மும்முரமாகப் போட்டி போட்டுத் தேர்தலில் நின்றகாலம்; நீதிக் கட்சிப் பிரமுகர் ஆர்க்காடு இராமசாமி(முதலியாரும்) காங்கிரசுக் கட்சிப் பிரமுகர் சத்தியமூர்த்தியும் தமது பயணத்துக்கிடையே நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டது.
“எப்படி இருக்கிறது தேர்தல் வாய்ப்புகள் எல்லாம்?” என்று கேட்கிறார் காங்கிரசுத் தலைவர் சத்தியமூர்த்தி.
“அதற்கென்ன?பிரகாசமாகத்தான் இருக்கிறது.” – நீதிக்கட்சி ஆர்க்காடு இராமசாமி (முதலியார்).
“யாருக்கு?” எனக் கேட்கிறார் சத்தியமூர்த்தி.
“உங்களுக்குத் தான்” என்கிறார் ஆர்க்காடு இராமசாமி(முதலியார்).
அதற்குப் பிறகு அங்கு இருந்த அனைவரும் குலுங்கக் குலுங்கச் சிரித்து ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றனர்.
“அதற்கென்ன?பிரகாசமாகத்தான் இருக்கிறது.” – நீதிக்கட்சி ஆர்க்காடு இராமசாமி (முதலியார்).
“யாருக்கு?” எனக் கேட்கிறார் சத்தியமூர்த்தி.
“உங்களுக்குத் தான்” என்கிறார் ஆர்க்காடு இராமசாமி(முதலியார்).
அதற்குப் பிறகு அங்கு இருந்த அனைவரும் குலுங்கக் குலுங்கச் சிரித்து ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றனர்.
இந்த நிகழ்ச்சியை அறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இவ்வாறு நட்புடன் பழகவேண்டும் என அறிவுறுத்தினார்.
இன்று நம் நாட்டில் அரசியல் உலகில் வெறுப்புணர்வு அளவுக்கு மீறித் தலைதூக்குகிறது. அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பே. ஆனால் வேறுபாடு வெறுப்புணர்வுக்கு வழிவகுக்கக்கூடாது.
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி வாக்குச்சீட்டுக்கே உள்ளது. வாக்காளர்களின் நன்மதிப்பைப் பெறுவதில் கட்சிகளிடையே போட்டி இருக்கலாம். ஆனால் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவதில் போட்டி இருக்கக்கூடாது. தனிமனித அவதூறுகளும் தாக்குதல்களும் வாக்காளரிடையே மக்களாட்சியின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும்.இதன் விளைவாகவே நோட்டாவுக்கு ஆதரவு பெருகிவருகிறது.
1967 தேர்தலில் பெருந்தலைவர் காமராசர் விருதுநகர் தொகுதியில் போட்டிட்டு ஒரு கல்லூரிமாணவனிடம் தோற்றார்.நாடே அதிர்ந்தது.அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர் கருத்து கேட்கிறார்.
“இது சனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்று போடுங்கள்”என்கிறார் பெருந்தலைவர்.
“இத்தனை ஆண்டுக்காலமாக அரசியலில் ஈடுபட்டு இவ்வளவு பதவிகளையும் பெற்ற என்னை ஒரு சாதாரணக் கல்லூரி மாணவர் தேர்தலில் நின்று தோற்கடிக்க முடிகிறதென்றால் அதுதான் இந்திய சனநாயகத்தின் வெற்றி..வேறெந்த நாட்டிலும் காணமுடியாத சனநாயகத்தை இந்தியாவில் பார்க்கிறீங்களல்லவா? இதைப் பெருமையாக எழுதுங்கள்” என்று அந்த மாபெருந்தலைவர் சொன்னவை வைரவரிகளல்லவா? தம் தோல்வியை ஒரு பொருட்டாகக் கருதாமல் அதற்காகச் சற்றும் வருந்தாமல், ஆளும் கட்சியின் அகில இந்தியத் தலைவரை எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் அரசியல் புதுமுகம் வெல்வது சிறப்பானது என்று சொல்ல எவ்வளவு பெருந்தன்மையும் தீர்க்கதரிசனமும் தேவை?
“இது சனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்று போடுங்கள்”என்கிறார் பெருந்தலைவர்.
“இத்தனை ஆண்டுக்காலமாக அரசியலில் ஈடுபட்டு இவ்வளவு பதவிகளையும் பெற்ற என்னை ஒரு சாதாரணக் கல்லூரி மாணவர் தேர்தலில் நின்று தோற்கடிக்க முடிகிறதென்றால் அதுதான் இந்திய சனநாயகத்தின் வெற்றி..வேறெந்த நாட்டிலும் காணமுடியாத சனநாயகத்தை இந்தியாவில் பார்க்கிறீங்களல்லவா? இதைப் பெருமையாக எழுதுங்கள்” என்று அந்த மாபெருந்தலைவர் சொன்னவை வைரவரிகளல்லவா? தம் தோல்வியை ஒரு பொருட்டாகக் கருதாமல் அதற்காகச் சற்றும் வருந்தாமல், ஆளும் கட்சியின் அகில இந்தியத் தலைவரை எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் அரசியல் புதுமுகம் வெல்வது சிறப்பானது என்று சொல்ல எவ்வளவு பெருந்தன்மையும் தீர்க்கதரிசனமும் தேவை?
அண்ணாவிடம் கேட்டார்கள்.”தலைவர் காமராசர் தோல்வியடைவார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. ஓர் இளைஞரை அவருக்கு எதிராக நிறுத்தியதும் காமராசர் வெற்றியடையவேண்டும் என்ற கருத்திலேதான். முன்னணித் தலைவர்கள் நாங்கள் யாருமே அவரை எதிர்த்துப் பரப்புரை செய்ய வரவில்லை. அவரின் தோல்வி அதிர்ச்சியளிக்கும் தோல்வி. ஒவ்வொரு தமிழனின் தோல்வி. தமிழ்நாட்டை எல்லாத்துறைகளிலும் முன்னிறுத்திய அவரைப் புறக்கணிக்க வாக்காளர்களுக்கு எப்படி மனம் வந்தது?” என வேதனையுடன் பேசினார் அண்ணா.
பெருந்தன்மையுடன் பழகுவதில் இவர்களை முன்மாதிரிகளாகக் கொண்டாலே போதும். அரசியல் அனைவரும் விரும்பும் களமாக மாறிவிடும். அரசியலில் மனிதநேயம் பேணுவதற்குப் பழிவாங்கும் உணர்ச்சியும் விரோத மனப்பான்மையும் முற்றிலும் நீக்கப்படவேண்டும்.மாற்றுக்கட்சியினரை “அரசியல் சகா’ என்று கருத்வேண்டும்.’அரசியல் எதிரி’எனக் கருதும் மனப்பான்மையைத் தவிர்க்கவேண்டும்.
ஒருமுறை தேர்தலின் போது அறிஞர் அண்ணா அவர்களை மிகவும் இழிவாக வசைபாடி ஒரு விளம்பரத்தட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனைக் கேள்விப்பட்ட அண்ணா சிரித்தவாறே “அந்தத் தட்டியை இரவில் படிக்கமுடியாமல் போய்விடுமே. எனவே இரவிலும் படிக்கும்வகையில் ஒரு வலைவிளக்கு(பெட்ரோமாக்சு) அதன் அருகில் வைத்துவிடுங்கள்.”உபயம் அண்ணாதுரை” என்று எழுதிவையுங்கள்” என்று கூறினாராம்.விளக்கு வைக்கப்பட்டது.சற்றுநேரத்தில் அந்த அவதூறு பரப்பும் தட்டியும் காணாமல் போய்விட்டது.
இராசாசி முதலமைச்சராக இருந்தபொழுது அவருக்கெதிராக ஒரு கருப்புக்கொடிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமக்கு எதிரான கருப்புக்கொடிப் போராட்டத்தைக் கேள்விப்பட்ட இராசாசி கோபப்படவில்லை; போராட்டத்திற்குத் தடையும் விதிக்கவில்லை. போராட்டநாளன்று இராசாசி திரும்பிய திசையெங்கும் கருப்புக்கொடி அணிவகுப்பு. ஒரு நாற்சந்திப்பில் முதலமைச்சர் இராசாசி தம் வண்டியை விட்டு இறங்கினார். போராட்டக்காரர்களை நோக்கி “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்” எனக் கேட்டார். “நாங்கள் உங்களுக்கு எதிராகக் கருப்புக்கொடிப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார்களாம். அதற்கு இராசாசி “நான் கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறேன். நீங்கள் வெள்ளைக்கொடி காட்டினாலும் அது எனக்குக் கருப்புக்கொடியாகத்தான் தெரியும். எனவே நீங்கள் வெள்ளைக்கொடி காட்டியதாகவே நினைத்துக்கொள்கிறேன். நான் எங்கே போனாலும் வெள்ளைக்கொடி காட்டி வரவேற்பு அளித்தமைக்கு நன்றி.” எனப் புன்னகை பூத்தவாறே கூறினாராம். வெறுப்பிலே தொடங்கிய போராட்டம் முதலமைச்சரின் சிரிப்பிலே சுமுகமாக முடிந்துவிட்டது.
எதிர்க்கட்சிகள் போராடும் மக்களாட்சி வழங்கியுள்ள உரிமைப் போராட்டத்தைப் பகைமையுணர்வோடு பார்க்காமல் இணக்கமான அணுகுமுறையுடன் தீர்வு காண முயல்வது அரசின் கடமை. போராட்டத்தில் வன்முறை கலந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. அவரவர் எல்லைக்கோடு அறிந்து நடந்துகொண்டால் நாட்டுக்கும் நன்மை;மக்களுக்கும் நிம்மதி.
இன்றைய அரசியல் உலகில் சூடான பேச்சுகள் மிகுந்துவருகின்றன. ஒருவருக்கொருவர் பழி கூறுவதும் அறைகூவல் விடுவதும் வாடிக்கையாகிவருகின்றன. தலைவர்கள் கடுமையாகத் தாக்கிக் கொண்டால் தொண்டர்களுக்கிடையேயும் பூசலும் பிணக்கும் மிகுந்துவிடும்.நாட்டின் பொது அமைதி குலைந்துவிடும். மெல்ல மெல்லச் சட்டமும் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிடும்.
மக்களாட்சியின் மாண்பு காக்க மனிதநேயமும் நட்புணர்வும் உடனடித் தேவை. அரசியல் மேடைகள் பேச்சு மேடைகளாக இல்லாமல் ஏச்சு மேடைகளாக மாறிவிடக்கூடாது.
பொறுமையும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் வரவரக் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. பெருந்தன்மை என்பதை அகராதியில்தான் பார்க்கமுடிகிறது.
இந்த நிலை மாறுமா? வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த நாடு. மாபெரும் தலைவர்கள் தியாகம், பெருந்தன்மை, மனிதநேயம் ஆகியவற்றைத் தம் வாழ்வின் மூலம் விளக்கிய பூமி இது.
காணாமல் போய்க்கொண்டிருக்கும் மனிதநேயம் மீண்டும் துளிர்க்குமா? நட்பும் நல்லிணக்கமும் நேயமும் அரசியல் உலகில் மீண்டும் செழிக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக