(சூன் 6 –  தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட  நாள்)
“ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டுப் பேராசிரியராகிய நான் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். இலத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும். இந்தியா பெருமை மிக்க நாடு, இந்து சமயம் உலகச் சமயங்களில் சிறந்த ஒன்று என்று புதிதாக வாதாடுவதைப் போலத்தான் தமிழ் செம்மொழிதான் என்று உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையை நிலை நிறுத்துவதாகும்.”
இவ்வாறு அறிஞர் சியார்சு ஆர்ட்டு (George Hurt)எழுதியது வரலாற்றில் நிற்கும் வைரச் சொற்களாகும்.
தொன்மைச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் வகையில் 1500 முதல் 2000 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமிதம் கொண்டதாகவும், காலப்பழமையும், இலக்கண முழுமையும், இலக்கியச் செழுமையும் ஒரு மொழி கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்திய அரசு வரையறுத்துச் செம்மொழி தகுதியை வழங்கியது. அந்த வகையில் இன்றைய நிலையில் தமிழ், சமக்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒரியா முதலிய ஆறு மொழிகளையும் செம்மொழிகளாக உலகிலேயே இந்திய நாடுதான் அறிவித்துள்ளது.
2004-ஆம் ஆண்டு அட்டோபர் மாதம் 12-ஆம் நாள் தமிழுக்குச் செம்மொழி தகைமை வழங்கும் ஆணையை மத்திய அரசு வழங்கியது. இன்றைய நன்னாளில்தான் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 6-6-2004 அன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர் முனைவர் ஏ.பி.செ.அப்துல்கலாம், “தமிழ் செம்மொழியாக இனிப் பொன்னொளியோடு மின்னி மிளிரும்” என்று அறிவித்தார். இந்த புகழ் மொழி தமிழறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களையும், தமிழக அரசு தொடங்கி, தமிழர் வாழும் அரசுகளையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக மைசூரில் செயற்பட்ட செம்மொழி தமிழாய்வுப் பிரிவு, தமிழ்நாட்டில் சென்னை மாநகரிலேயே அமைந்தது.
இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம் என்பது இந்திய நாட்டின் இரண்டொரு மாநிலங்களில் தலைநகரங்களில் தலைமை நிலையத்தைக் கொண்டிருந்தது. தென்னக மொழிகளை ஆய்வு செய்யும் மொழிகள் நிறுவனமாக மைசூர் நடுவண் நிறுவனம் அமைந்து இருந்தது.
மொழியியல் சார்ந்த தலைப்புகளில் அறிஞர்களைக் கொண்டு ஆய்வுப்பணிகளை ஆற்றியது. தமிழார்வம், தமிழ் இலக்கியச் செறிவு முதலியன இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசோ, செம்மொழி என்ற முழக்கத்தின் அடிப்படையே விளங்காமல் கண் தெரியாதவனுக்குத் துதிக்கை உலக்கையாக தெரிந்தது போல மைசூர் நிறுவனத்தில் தமிழ் மொழிப்பிரிவில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். மைசூர் நிறுவனத்தின் கிளைக்குச் செம்மொழிக்கென வழங்கப்பட்ட தொகை திகைப்பைத் தந்தது. இது முதற்கோணலாயிற்று.
நான்கு கூட்டங்கள் போலத், தமிழகச் செம்மொழி நிறுவனத்தின் சார்பில் மைசூரிலேயே நடந்தன. தமிழகத்தின் தலைநகரில் அல்லவா இந்த நிறுவனம் அமைய வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி வலியுறுத்தியதால், மைசூரில் இருந்த ஒரு பிரிவைச் சென்னைக்கு அனுப்பி நிறுவனத்தைத் தொடங்கச் சொன்னார்கள்.
இந்தக் கோட்பாட்டுப்  பின்னணியில் ஏற்பட்ட குழப்பத்தால் செம்மொழி நடுவண் நிறுவனத்தில் மொழியியலாளர்களே இடம் பெற்று ஆராய்ச்சிகளைச் சென்னையிலும் தொடங்கினார்கள். தமிழக அரசு இந்த நோக்கையும், போக்கையும் மாற்ற முனைந்தது. தமிழக அரசுக்கே முழுப்பொறுப்பையும் வழங்குவதற்கு மத்திய அரசு தடையாக நின்றது.
செம்மொழி பெருமிதத்துக்காகவே 500 கோடி உரூபாய் செலவில் ஐந்து நாள் மாநாடு கோவையில் உலகத்தமிழ் மாநாடு ஒத்தநிலையில் மாபெரும் மாநாடாக நடந்தது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி தாமே தம் கடின உழைப்பையும், உறுதியையும், கரைகாணாத் தமிழ்க்காதலையும் காட்டிய மாநாடாகத் திகழ்ந்தது. இந்தியக் குடியரசுத் தலைவரே நேரில் வந்து நெஞ்சுருகப் பாராட்டி வாழ்த்தினார். கருணாநிதி தாம் பெற்ற தமிழ் வெற்றியாக தன் செலவில் ஒரு கோடி உரூபாய் தமிழறிஞர் விருதளிப்புக்கென வழங்கியதையும் நினைவு கூரலாம். அந்தக் கோப்பு தில்லிக்கும், சென்னைக்குமாக மிதிபட்டுத் தேக்கமுற்றது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ் மக்கள் எதிர்பார்த்து ஏங்கிப்பெற்ற ஆய்வு நிறுவனமாகும். அறிஞர்கள் கண்ட கனவுகள் பல. ஆய்வுக்களங்களோ எண்ணற்றவை. அந்த நாளிலேயே வாழிய செந்தமிழ் என்று பாரதியார் தம் மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும், இனப்பற்றையும் ஒன்றாக இணைத்துச் செம்மொழி நிறுவனத்துக்கு அடிகோலினார். நாளும் முயன்ற நல்லறிஞர்களையும், அரசையும் கட்சிக் கண்ணோட்டத்திலேயே காணும் போக்கும் படர்ந்தது.
தாயில்லாத சவலைப் பிள்ளையாக நாளும் ஒரு கவலையும், பொழுதும் ஓர் அவலமும் கொண்டு அழும் குரல் எல்லை தாண்டித் தில்லியின் காதில் எட்டுவதில்லை. மாநிலத் தலைநகரில் உள்ள வேறு எந்த நடுவண் நிறுவனமும் இத்தகைய புறக்கணிப்பால் தவிக்கவில்லை.
ஒரு பல்கலைக்கழகத்தை கட்டிக்காத்த துணைவேந்தரும், புகழ் வாய்ந்த கல்லூரியின் முதல்வரும், நல்லறிஞரும் துணைத்தலைவராக இருந்தும் தினையளவும் சிக்கல் தீரவில்லை. துணைத்தலைவருக்கு அடையாறு இ.தொ.நி.(ஐ.ஐ.டி.) தலைவரைப் போன்ற அதிகாரங்களை வழங்கியிருக்க வேண்டாவா? நாடாளும் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக இன்று பதவியேற்று இருக்கும் இரமேசு பொக்ரியால் நாடு புகழும் கவியரசராவார். உத்தரகாண்டு மாநிலம் ஆண்ட முதல்- அமைச்சருமாக இருந்தவர். கவியரசர்களுக்குத்தான் மொழியின் அருமையும், பெருமையும் நன்றாக தெரியும் என்று நம்புகிறார்கள். அந்த வாய்ப்பை வலியுறுத்தும் கடமை தமிழக அரசையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சாரும்.
செம்மொழி நிறுவனம் செழித்தோங்கும் நிறுவனமாக மலர வேண்டும். நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் போல உருப்பெறுவதற்கு இடமும் வழங்கப்பட்டு வளமனைகள் வளர்ந்து வருகின்றன. செம்மொழி நிறுவனத்திற்காகத், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக சென்னை, பெரும்பாக்கத்தில் 17 காணி நிலம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. “செம்மொழி என்னும் போதினிலே சிந்தும் அழுகுரல் விழுகுது காதினிலே” என்று சொல்லும் நிலைமை துடைக்கப்பட வேண்டும். பொங்கும் மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடும் நன்னாளாக செம்மொழி நாள் அமைய வேண்டும்.
– முனைவர் ஒளவை நடராசன்,
முன்னாள் துணைவேந்தர்தமிழ்ப்பல்கலைக்கழகம்தஞ்சாவூர்.
தினத்தந்தி 06.06.2019