பெருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 செப்டம்பர், 2013

தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் மரச்சிற்பக்கலை!

தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் மரச்சிற்பக்கலை!

Comment (1)   ·   print   ·   T+  
தமிழர்கள் தங்களின் அறிவால் விளைந்த கலைப்பொருள்களை அவர்களின் வாரிசுகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே அறிமுகம் செய்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கலைப்பொருள்தான் குழந்தைகளுக்கு விளையாடக்கொடுக்கும் மரப்பாச்சி பொம்மை. மரப்பாச்சி தமிழர்களின் மரச்சிற்பக்கலைக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு.
மரச்சிற்பங்கள் தமிழர்களின் வீடுகளில் நுழையும்போதே சூரிய பலகையாக வரவேற்பதை இன்றைக்கும் நாம் காணலாம். மற்ற கலைகளோடு ஒப்பிடுகையில் மரச்சிற்பக் கலை அழிந்து விடாமல் வாழும் கலையாக உள்ளது. அதற்கு சூரிய பலகை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். கோயில்களிலும் கடவுள்களின் வாகன்ங்கள் மரச்சிற்பங்களாக செய்யப்படும் வழக்கம் இன்றும் உள்ளது.மரச்சிற்பக்கலைஞர்கள் பல மாவட்டங்களில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகையில் செய்யப்படும் மரச்சிற்பங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கோயில்களையும் வீடுகளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன என்பது தமிழர்களுக்கு பெருமைசேர்க்கும் செய்தி.
கோயில்களுக்கான தேர்கள், திருவிழாக்காலங்களில் தெரு உலாச் செல்லும் கடவுளர்களுக்கான ஊர்திகள்,சூரியப்பலகைகள் என அனைத்துவகையான மரச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர் திருவதிகைச்சிற்பிகள். மரபுவழியாகவே இக்கலைத்திறமை இவர்களின் இரத்தத்தோடு கலந்திருக்கிறது. இக்கலைப்பணி ஆறாவது தலைமுறையாகத் தொடர்கிறது.
1947-ம் ஆண்டு திருவதிகை குப்பாசாரியும் அவர் உடன்பிறந்தவர்களான சுப்ரமணிய ஆச்சாரி,பொன்னுசாமி ஆசாரி ஆகியோரும் சேர்ந்துதான் திருப்பதிகோயில் தேரைச் செய்திருக்கின்றனர். இந்த உடன்பிறப்புகளின் வாரிசுகளான ராசாமணி ஆச்சாரி, புருசோத்தமாச்சாரி,ராசாராம் ஆச்சாரி,ராதாகிருட்டிண ஆச்சாரி,தேவா ஆகியோர் இக்கலைப்பணியை இன்றும் தொடர்கின்றனர்.
கோயில்களுக்கான தேர் செய்வதற்கென்று இலக்கணம் உண்டு அவ்விலக்கணப்படி தேரைவடிவமைத்து உருவாக்குகின்றனர். கோயிலின் மூல இடத்தில் அளவைப்பொறுத்தே தேரின் அளவை அமைக்கவேண்டும் என்றவிதிமுறைக்கேற்ப தேருக்கான நீள அகலத்தை முடிவு செய்கின்றனர்.
தேரில் பத்து வகையுண்டு. ஸ்ரீகரம், த்வஜம்காந்தம், ரேஷிகேசம், நிகேதுனம், ஸ்ரிபாத்ரம், விசாலஞ்சம், பத்மக்கம், பத்ரம், சிவம் என்று குறிப்பிடப்படும் இவற்றில் கோயிலுக்கேற்ற தேரை வடிவமைப்பது என்பது முக்கியமானது. இவற்றை உணர்ந்துதான் தேரை வடிவமைப்போம் என்று இராசாமணி ஆச்சாரி கூறினார். இவர் திருவண்ணாமலை, செவ்வாய்பேட்டை, புதுச்சேரி, திருக்கோயிலூர் ஆகிய ஊர்களின் கோயால்களுக்குத்தேர் செய்துள்ளார்.
தேரின் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு மரத்தால் செய்கின்றனர். தேர்ச்சக்கரம் இலுப்பை மரத்தாலும் அடிப்பாகம் காட்டுவாகை மரத்தாலும் மேல் பாகம் தேக்கு, வேங்கை மரங்களாலும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இவர்கள் செய்த தேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காசி, ஹைதராபாத், விஜயவாடா போன்ற நகரங்களுக்குச்சென்று தேரும் மரச்சிற்பங்களும் செய்துள்ளனர். சமணக்கோயில்களிலும் சிற்பங்கள் செய்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.
தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருநீரு மலையில் 45 பாகை சாய்வான பாதையில் புதிதாகச்செய்த தேரை ஏற்றுவதற்குப் பொறியாளர்கள் திணரிய போது இராசாராம் ஆச்சாரி அம்மலையில் தேரைப் பத்திரமாக ஏற்றி நிலைநிறுத்தியது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
வழுவூர் ராமையாவின் ஆலோசனையோடு ராதாகிருஷ்ணன் ஆச்சாரி உருவாக்கிய நடராஜர் சிற்பம் திருவள்ளூரில் இன்றும் உள்ளது. புருஷோத்தம ஆச்சாரி கடவுளர்களின் வாகனங்கள் பற்றிக் கூறும்போது, சிங்கம், காளை, கருடன், அன்னம், பாம்பு என பல்வேறு விலங்குகளின் உருவங்களைச் செய்துள்ளதாகவும் கூறினார்.
வாகனங்கள் செய்வதற்கு விலங்குகளின் அடிப்படை வடிவத்தை அத்தி மரக்கட்டைகளில் செதுக்கி வடிவமைக்கின்றனர். அத்திமரம் எடைக்குறைவு என்பதனால் அம்மரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு வஜ்ரம்,மரத்தூள், பிலாஸ்டர் ஆஃப் பாரிஸ் ஆகியவற்றைக்கலந்து கூழ் உருவாக்கி வடிவங்களை மெருகேற்றுகின்றனர். அதன் பிறகு உப்புத்தாள் கொண்டு வழுவழுப்பாக்கி வண்ணம்பூசுகின்றனர்.வண்ணம்பூசப்பட்ட வாகனங்கள் மரச்சிற்பந்தானா? எனக் காண்போரை ஐயமுறச்செய்கின்றன. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து நாள்தோறும் கடவுளர்களின் வாகனங்கள் புதுப்பிப்பதற்காக திருவதிகை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
தேர், வாகனங்கள் இவற்றைவிடவும் அதிக அளவு சூரியப்பலகைகள் செய்வது இவர்களின் அன்றாட பணியாகும். சூரியப்பலகையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, பண்பாடு, மொழி,சமய வேறுபாடுகளுக்கேற்ப அவர்கள் விரும்பும் சிற்பங்களை உருவாக்குகின்றனர். இதற்கு பெரும்பாலும் பர்மாதேக்கு மரங்களைப் பயன்றடுத்துகின்றனர்.செதுக்கவேணடிய உருவத்தைத் தாளில் வரைந்து அதனைப் பலகையில் ஒட்டி சிறு உளிகொண்டு செதுக்குகி சிற்பத்தை உருவாக்குகின்றனர்.
இக்கலைப்பணியைத் தொன்றுதொட்டு செய்து வரும் இவர்கள் அடுத்த தலைமுறைக் கலைஞர்களாக தங்கள் வாரிசுகளை உருவாக்கி வருவதோடு இப்பணியில் ஆர்வம் செலுத்துபவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கின்றனர்.
கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது இது வரை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழர்களின் தொன்மக்கலையில் சிறந்துவிளங்கும் இவர்களைத் தமிழக அரசு பெருமைப்படுத்த வேண்டும்.
- தமிழ் இந்து

வெள்ளி, 25 ஜனவரி, 2013

தமிழ் வழியில் படித்து அருந்திறல் - மாணவி பெருமிதம்



""பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,'' என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் மகாலட்சுமி, 27, பிரேமா, 25, மகன் தன்ராஜ், 23. மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய கொள்ளியூரில் விவசாய கூலிவேலை செய்து வந்த ஜெயக்குமார், போதிய வருவாய் கிடைக்காததால், தன் மைத்துனர் குப்புசாமி என்பவர் ஆதரவுடன், 1990ம் ஆண்டு, மும்பைக்கு பிழைப்பு தேடி சென்றார்.
துணி நெசவு செய்யும் ஆலையில் பணிபுரிந்தார். அதிலும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால், ஆட்டோ ஓட்டுனரானார். அதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு, சொந்தமாக ஆட்டோ வாங்கி, தன் குழந்தைகளை படிக்க வைத்தார்.
இத்தனை சிரமமான சூழலுக்கு இடையே படித்த, இவரது இரண்டாவது மகள் பிரேமா, "சார்ட்டட் அக்கவுன்டன்ட்' தேர்வில், 800க்கு, 607 மதிப்பெண்கள் எடுத்து, அகில இந்திய அளவில், முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து, பிரேமா கூறியதாவது:என் வெற்றியை பெற்றோரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லை என்றால், என்னால், இச்சாதனையை பெற்று இருக்க முடியாது. வறுமையான சூழலிலும், எங்களை படிக்க வைக்க வேண்டும், என்று பல தியாகங்களை செய்தனர்.ஒன்று முதல், 7ம் வகுப்பு வரை, மலாடு நகராட்சி பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆங்கில பாடத்தை தவிர்த்து, மற்ற அனைத்து பாடங்களையும், தமிழில் தான் கற்றேன்.
அதன்பின், மலாடு செகன்டரி பள்ளியில், 8 முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களை, ஆங்கில மீடியத்தில் படித்தேன். என்.எல்., காலேஜில், பிளஸ் 2 முடித்து, நாகின்தாஸ் கண்டவாலி கல்லூரியில், பி.காம்., முடித்தேன். அதன்பின் மும்பை பல்கலையில் எம்.காம்., பட்டம் பெற்றேன்.எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்தபோது, அக்கவுன்டன்ட் படிப்பில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற, என் விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அதை மறுக்காமல், அதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.
என் தம்பி தன்ராஜும், பி.காம்., முடித்து, சி.ஏ., தேர்வை எழுத விரும்பியதால், இருவரும் சேர்ந்தே படித்தோம். மலாட் பகுதியில் வாடகை குடியிருப்பில் உள்ள எங்கள் வீடு சிறியது. அதில் நாங்கள் இருவரும், இரவில் கண் விழித்து படிக்க தேவையான வசதிகளை, என் தாய் ஏற்படுத்தி தந்தார். "டிவி' இணைப்பை துண்டித்து, படிப்பிற்கு உதவி செய்தனர்.
எங்களின் முயற்சிக்கு ஆசிரியர்களும் பல உதவிகளை செய்தனர். சி.ஏ., படிப்பில் இந்திய அளவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் எனக்குள் இருந்தது. இதில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றது, என் பெற்றோரின் தியாகத்திற்கும், என் விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். தன்ராஜூம் சி.ஏ., படிப்பில் தேர்ச்சியடைந்தது, இரட்டிப்பு மகிழ்ச்சி.மிகுந்த ஏழ்மையான நிலையில், மும்பைக்கு பிழைப்பு தேடி வந்தபோது, ஆதரவு அளித்த என் தாய்மாமன்கள் குப்புசாமி, பெருமாள் இவர்களின் உதவியை மறக்க முடியாது.தமிழ் மீடியத்தில் படித்த நான், சி.ஏ., படிப்பில் சாதனை படைத்ததை பெருமையாக கருதுகிறேன். தாய் மொழியான தமிழும், சொந்த ஊரும் என் அடையாளங்கள் என்பதை மறக்க மாட்டேன். சூழ்நிலை எப்படி இருந்தாலும், சரியான வகையில் முயன்றால் வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டேன்.நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, விரைவில் என் தந்தைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். படிக்க ஆர்வம் இருந்தும், பணமின்றி கஷ்டப்படும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உதவி செய்ய விரும்புகிறேன். சி.ஏ., படிப்பில் சாதிப்பதற்கான முறைகளை, இப்படிப்பை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு கூறி, வழிகாட்ட தயாராக இருக்கிறேன்.இவ்வாறு, சாதனையாளர் பிரேமா நெகிழ்ச்சியுடன் கூறினார்.


படிப்பில் சுட்டி

பிரேமா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 79 சதவீதம் மதிப்பெண் எடுத்தார். பிளஸ் 2 தேர்வில், 80 சதவீதமும், பி.காம்., படிப்பில், 90 சதவீதமும், எம்.காம்., படிப்பில், 80 சதவீதமும் மதிப்பெண் எடுத்து, தொடர்ந்து படிப்பில் சிறந்து விளங்கி வந்துள்ளார். விடாமுயற்சியுடன் படித்ததால் மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் , சி.ஏ., படிப்பிலும், 75.87 சதவீதம் எடுத்து சாதித்துள்ளார்.

மாணவிக்கு ரூ.10 லட்சம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:அனைவராலும் வெற்றி பெறுவதே கடினம் என கூறும், சார்ட்டட் அக்கவுண்டன்ட் இறுதித் தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, நிதித்துறையில் உயரிய கல்வியாக கூறப்படும், சி.ஏ., தேர்வில், முதலிடம் பெற்ற பிரேமாவிற்கு பாராட்டுக்கள்.பிரேமாவிற்கு, தமிழக அரசின் சார்பில், 10 லட்சம் ரூபாய், ஊக்கத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

- தினமலர் செய்தியாளர்

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

''தமிழின் பெருமைகளை அறிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்''

''தமிழின் பெருமைகளை அறிந்தால்
 தன்னம்பிக்கை அதிகரிக்கும்''
 
  தினமணி
First Published : 30 Sep 2012 02:13:58 AM IST

Last Updated : 30 Sep 2012 02:36:58 AM IST

நிகழ்ச்சியில் பேசுகிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். உடன், பத்மா சேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர் மற்றும் டீன் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி.
சென்னை, செப். 29: தமிழின் பெருமைகளை மாணவர்கள் அறிந்து கொண்டால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.கல்வியின் விழுமியங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியது: கல்வி ஒருவருடைய சுய மரியாதையை வளர்க்கிறது. வாழ்வில் முன்னேற்றத்தையும் ஒழுக்கத்தையும் வழங்குகிறது. கற்பித்தல் என்பது கடவுளை வழிபடுவது போன்றது. இதனை ஆசிரியர்கள் சேவையாக செய்ய வேண்டும்.ஒரு முழுமையான மனிதனை உருவாக்கும் புனிதமான இடம் பள்ளியும் கல்லூரியும்தான். வெறும் தகவல்களை மட்டும் மாணவர்களுக்கு வழங்காமல், அவர்களின் திறமைகளை வளர்க்க வேண்டும். புத்தகத்தில் இருப்பதை தவிர பல விஷயங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி: ஜப்பானிய மொழியில் தமிழ் சொற்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இதேபோல, தென் அமெரிக்க நாடான பெருவுக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் சென்றுள்ளனர் என்பது போன்ற தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.இதனால் மாணவர்களுக்கு மொழியின் மீதான மதிப்பு அதிகரிக்கும். மொழியின் மீதான மதிப்பு அதிகரித்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன்மூலம், அவர்கள் சொந்த காலில் நிற்கமுடியும் என்றார் அவர். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பதாலேயே வன்முறை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. வன்முறை என்பது பிறப்பில் இருந்து வருவது இல்லை என்றார்.