காவல் கோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவல் கோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஜனவரி, 2012

மார்க்சியம் கற்றவர்கள் அனைத்தும் கற்றவர்கள்: பழ. கருப்பையா

First Published : 05 Jan 2012 02:15:27 AM IST


சென்னை, ஜன. 4: மார்க்ஸியத்தை ஆழ்ந்து கற்றவர்கள் அனைத்தையும் கற்றவர்கள் என எழுத்தாளரும், அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா கூறினார்.  'காவல் கோட்டம்' நூலுக்காக சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள எழுத்தாளர் சு. வெங்கடேசனுக்கு சென்னையில் புதன்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பழ. கருப்பையா பேசியது:  'காவல் கோட்டம்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததைக் காட்டிலும், வசந்த பாலன் போன்றவர்கள் திரைப்படத்துக்கான கதையை இந்த நாவலிலிருந்து தேர்வு செய்திருப்பதுதான் படைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.  திராவிட இயக்கத்தினருக்கு மட்டும்தான் தமிழ் உரியது என்ற நிலையை சு. வெங்கடேசன் மாற்றிருக்கிறார். ஏனெனில் மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர்கள், அனைத்தையும் கற்றவர்கள் என்றார் பழ. கருப்பையா.  ராஜேந்திர சோழன்: சாகித்ய அகாதெமி விருது என்பது ஒரு வசீகரமிக்க இளம் பெண் போன்றது. இந்த இளம் பெண் தகுதியில்லாதவர்களுடன் செல்லும்போது சிறிய வருத்தம் ஏற்படும். நமது பக்கத்தில் வரும்போது ஒரு வேகம், பரவசம், மகிழ்ச்சி ஏற்படும்.  ஏனென்றால், ஒவ்வொரு முறை இந்த விருது வழங்குகின்றபோதும் பெரிய சர்ச்சை ஏற்படுவது வழக்கம். கடந்த முறை எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்ட போதும், இப்போது சு. வெங்கடேசன் பெற்றுள்ளபோதும் பெரிய சர்ச்சைகள் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து தனது 38-வது வயதில் முதல் நூலாக வெளியிட்டு, 41-வது வயதில் அதற்காக சகித்ய அகாதெமி விருதுக்கு சு. வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. தமிழ்ச் சூழலிலே மதுரை மாநகரை மையப்படுத்தி அந்தக் கால மக்களின் 600 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை நவீனமாக்கியிருக்கிறது இந்த நூல் என்றார் ராஜேந்திர சோழன்.  தமிழ்ச்செல்வன்: வரலாறு என்பதே சார்புடையதுதான். கல்கி, சாண்டீபன் உள்ளிட்ட சரித்திர நாவல்கள், ஏற்கெனவே எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சரித்திரத்தை கதையாக்கின.  ஆனால், "காவல் கோட்டம்ட எழுதப்படாத வரலாற்றை, சொல்லப்பட்ட வரலாற்றின் சில குறியீடுகள் வழியாக சொல்கிறது. அந்தக் கால மதுரைப் பெண்களின் வீரம், ஆதித் தாயை நினைவுபடுத்தும் வகையிலும், கோட்டைகள் இடிக்கப்பட்டு மதுரை எப்படி விரிவுபடுத்தப்பட்டது என்பது குறித்தும் புதிய வரலாற்றுச் செய்தியை இந்த நாவல் தந்திருக்கிறது.  சு. வேணுகோபால்: "காவல் கோட்டம்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது குறித்து சிறு சர்ச்சை எழுந்துள்ளது. படைப்பாளியைவிட, அவர் படைத்துள்ள படைப்பையும், அவருடைய 10 ஆண்டு கால உழைப்பையும்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபோன்று சர்ச்சைகளை எழுப்புவர்கள், தாங்கள் கூறும் நூலுடன் இந்த நாவலை ஒப்பிட்டு ஆரோக்கியமான விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். அவ்வாறு விவாதத்துக்கு வருபவர் வெற்றி பெற்றுவிட்டால், இந்த விருது மூலம் சு. வெங்கடேசனுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் உடனடியாக அவரிடமிருந்து பெற்றுத் தரப்படும் என்றார்.  நாஞ்சில் நாடன்: ஒரு பரிசு அறிவிக்கப்படுகின்றபோது ஆதரவாகவும், எதிராகவும் எழும் குரல்கள் அந்த விருதின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்கின்றன. நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் ஆங்கே பொசியும். நமது மொழியில் உள்ள துர்பாக்கியம் என்னவெனில், அது பெரும்பாலும் புல்லுக்கு மட்டுமே பொசிந்தது என்பதுதான். இந்தச் சூழலில் சு. வெங்கடேசனுக்கு கிடைத்த பரிசு முக்கியத்துவம் பெறுகிறது.  விஜயநகர சாம்ராஜ்ய உச்சமாக கிருஷ்ணதேவ ராயரின் தலைநகரான ஹம்பியைக் காணாதவர்கள் நாயக்கர் கால வரலாறு அறியாதவர்கள். அவர்களால் காவல் கோட்டத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்றார் நாஞ்சில் நாடன்.

செவ்வாய், 3 ஜனவரி, 2012

Sahithya academy awardee venkatesan said. . . .நல்லதங்காளின் பேருரு தான் முல்லைப் பெரியாறு!'

சொல்கிறார்கள்

"காவல் கோட்டம்' நாவலுக்காக, சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன்: என் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள ஹார்விப்பட்டி. கல்லூரி படிப்பை முடிச்சதும், மா.கம்யூ., கட்சியில முழு நேர ஊழியனாயிட்டேன். உலகின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை; 2,500 ஆண்டுகள் பழமையான நகரம். இன்னமும் உயிர்ப்போடு இயங்குகிறது. நகரின் ஒவ்வொரு தெருவிலும், 2,500 ஆண்டுகள் பழமை அப்பி கிடக்கின்றன. வரலாற்றின் வசீகரங்கள் நிறைந்த நிலப்பரப்பு என்று மதுரையைச் சொல்லலாம். 600 ஆண்டு கால மதுரையின் வாழ்க்கையை எழுத எழுத, பல ரகசியங்களைத் தன்னுள் ஒளித்திருக்கும் மாயக் கம்பளம் போல, வரலாறு என் முன் விரிந்தது. அதை படைப்பாக மாற்றியபோது உருவானது தான், "காவல் கோட்டம்' நாவல். என் வாழ்நாளிலேயே அதிகபட்சம், காவல் கோட்டம் போல மூன்று நாவல்கள் தான் எழுத முடியும். காவல் கோட்டத்தை எழுதி முடிக்க, எனக்கு பத்து ஆண்டுகள் பிடித்தன. அப்படிப் பார்த்தால், சுந்தரராமசாமி தன் வாழ்நாளிலேயே மூன்றே மூன்று நாவல்கள் தான் எழுதி இருந்தார். நாவலுக்கு உள்ளிருந்து தான் விமர்சனம் வைக்கப்பட வேண்டுமே தவிர, ஒருவர் எத்தனை நாவல் எழுதி இருக்கிறார் என்பதை விமர்சிக்கக் கூடாது. ரசனை மிகுந்த வாசகர்களின் தீர்ப்பு தான் இறுதியானது. இந்த நாவலில் முல்லைப் பெரியாறு பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். வரலாற்று உணர்வுடன் அணுகும்போது, முல்லைப் பெரியாறு அணை உருவான காரணத்தையும், அதற்குப் பின்னணியில் இருந்த துயரங்களையும் புரிந்து கொள்ள முடியும். தன் மக்களை மீண்டும் சாகக் கொடுக்காமல், ஓடும் நதியை மறித்து மதுரைக்குத் திருப்பிவிடும் நல்லதங்காளின் பேருரு தான் முல்லைப் பெரியாறு அணை. வீட்டையும், குடும்பத்தையும் சுற்றிச் சுற்றி வந்த தமிழ் நாவல்கள், அதைத் தாண்டி வரலாற்றைப் பதிவு செய்பவையாகவும், தத்துவ விவாதங்களின் களனாகவும் மாறியுள்ளன. ஆனால், இன்னொரு பக்கம் நாம் கொண்டாடும் அளவுக்கு தமிழ் வாசிப்பு வளர்ந்திருக்கிறதா என்பதும் ஆராயப்பட வேண்டிய விஷயம்.

வியாழன், 22 டிசம்பர், 2011

Sahithya awart to su.venkatesan

சு.வெங்கடேசனுக்கு இந்த ஆண்டுக்கான 
சாகித்ய அகாதமி விருது

First Published : 21 Dec 2011 03:47:51 PM IST

Last Updated : 21 Dec 2011 09:44:04 PM IST

சென்னை, டிச.21: எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.இரு வேறு உலகங்கள் சந்திக்கும் சித்திரம் உள்ள நாவல் இது. பெருந்திரளான எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கரும், சிறிய எண்ணிக்கையில் உள்ள கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம்செய்து கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை காவல்கோட்டம் எடுத்துக்காட்டுகிறது.
கருத்துகள்

ஊடங்கங்களின் தாக்கத்தால் புத்தகம் படிப்பதே குறைந்து போன காலகட்டத்தில் துணிச்சலுடன் மிக பெரும் நாவல் எழுதி சாகித்ய அகாதமி விருதுபெரும் தோழர் சு வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்!
By ந RAMIAH
12/21/2011 5:47:00 PM
எப்படி ஒரே ஒரு நாவல் எழுதியவருக்கு சாகித்திய அகதமி விருது? என்ன அளவு கோல்?
By Tamilian
12/21/2011 5:39:00 PM
சாகித்ய அகாடமி விருது பெற்ற தோழர் வெங்கடேசன் அவர்களுக்கு, பாராட்டுக்கள்.
By கம்பம் பி.டி.முருகன்
12/21/2011 4:45:00 PM
we should proud to get this award by Mr.Su.Venkatesan
By Kotteeswaran.K
12/21/2011 3:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *