வெள்ளி, 10 மார்ச், 2017

அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை – இ.பு.ஞானப்பிரகாசன்




அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை

   மூன்றாம் பாலின அல்லது இருபாலினத் தோழர்களைக் குறிக்கும் ‘அலி’ என்னும் பழைய சொல் இக்காலத்தில் தவறாக ஆளப்படுகிறது. ‘அல்’ என்றால் இல்லை எனப் பொருள். எனவே ஆண், பெண் ஆகிய இரு பால் தன்மைகளும் ‘அல்லாதவர்’ எனும் பொருளிலேயே ‘அலி’ எனும் சொல் பண்டைக் காலத்தில் உருவாக்கப்பட்டது. எனினும் இதுவே பிற்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரைக் கிண்டலுக்கும் பகடிக்கும் ஆளாக்கப் பயன்படுத்தப்பட்டதால் ‘திருநங்கை’ எனும் அழகுத் தமிழ்ப் புதுச் சொல்லால் இன்று அழைக்கிறோம்.
  எழுத்தாளர்கள், இதழாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள், ஊடகர்கள் என எல்லாத் தரப்பினருமே இருபாலினத்தாரைக் குறிக்க இன்று இந்தச் சொல்லைத்தான் ஆள்கிறார்கள். அரசு அறிக்கைகளிலும் இந்தச் சொல்லே! ஆனால், எந்த அகராதியிலும் திருநங்கை என்னும் சொல் காணவில்லை. எனவே, இதன் வேரை அறியும் ஆவலால், செய்தியாளர்களிடம் இது குறித்து வினவினேன். நண்பர் ஒருவர், “ முதன் முதலில் இவ்வாறு இவர்களைத் ‘திருநங்கை’ என மதிப்பாக அழைத்தவர், இந்தச் சொல்லைத் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தந்தவர் யார் தெரியுமா? அவர்தாம் ஆட்சித்தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்!” என்றார்.
  மேலும், அவர் பின்வருமாறு தெரிவித்தார்:
  “திருவள்ளுவனார் மதுரையில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராகவும் மாவட்டக் கலைமன்றச் செயலராகவும் இருந்தபொழுது தமிழ் வளர்ச்சியிலும் கலை வளர்ச்சியிலும் பெரிதும் கவனம் செலுத்திப் பாடுபட்டார். அப்பொழுது மதுரையில் தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து ஒரு வாரத்திற்கு ’முத்தமிழ்க் கலைவிழா’ ஒன்றைச் சிறப்பாக நடத்தினார். தமிழ்க்கலைகள் பற்றிய – குறிப்பாக, நாட்டுப்புறக் கலைகள்பற்றிய – விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திக் கலைஞர்களுக்கு ஊக்கமும் அளித்த இவ்விழா நடைபெறுவதற்கு முன்னர் தான் பெண் வேடமிட்டுப் பரதம் ஆடும் ஆண் என்றும் நர்த்தகிப் பட்டம் பெற்றவர் என்றும் கூறி ஒருவர் வாய்ப்புக் கேட்டு வந்தார். அவர் தன்னை ஆண் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் மூன்றாம் பாலினத்தவரே என்பதைத் திருவள்ளுவனார் அறிந்தார். வேறு வகையில் கவனம் செலுத்தாமல் நாட்டியத் துறையில் ஈடுபட்டுள்ளவராயிற்றே என்று எண்ணி வாய்ப்புத் தந்து ஊக்கப்படுத்த விரும்பினார். ஆனால் பிற கலைஞர்கள், அவர் முகத்தில் முதுமை வந்து விட்டதால் அவருக்கு யாரும் வாய்ப்புத் தருவதில்லை என்றும் இளம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என்றும் கூறி வாய்ப்புத் தர வேண்டா என்று தடுத்தனர். பால் ஊனம் உற்றவருக்கு வாய்ப்புத் தந்து உயர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் பாரதியார், பாரதிதாசன், காசி ஆனந்தன் முதலான பலரின் தமிழ்ப்பாடல்களைத் தொகுத்துத் ‘தமிழமுதம்’ எனத் தலைப்பும் தந்து அத்தமிழ்ப்பாடல்களுக்கு நாட்டியம் ஆடினால் வாய்ப்பு தருவதாகவும்  பெயரின் முன்னால் ‘திருநங்கை’ எனக் குறிப்பதாகவும் சொல்லி வாய்ப்புத் தந்தார். வேண்டா விருப்பாகத் ‘திருநங்கை’ என்று குறிக்க அவர் ஒப்புக் கொண்டாலும் தமிழுணர்வுப் பாடல்களுக்குச் சிறப்பான முறையில் அவர் ஆடிய நாட்டியம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
  அப்பொழுது நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த அன்றைய தமிழ் வளர்ச்சிச் செயலர் திரு.வை.பழனிச்சாமி இ.ஆ.ப., அவர்களிடம் மேற்படி நாட்டியக் கலைஞரைத் திருவள்ளுவனார் பரிந்துரைக்க, அவர் மூலம் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்ட விழாக்களிலும் ‘திருநங்கை’ எனக் குறிக்கப் பெற்றே ஆடும் வாய்ப்புப் பெற்றார் அந்தக் கலைஞர். இதனால் ‘திருநங்கை’ எனும் சொல் தமிழ்நாடு முழுதும் பரவியது. மேலும், அந்தக் கலைஞருக்குக் கடவுச் சீட்டு (Passport) வழங்க மறுக்கப்பட்டபொழுது மதுரை மண்டல உதவி இயக்குர் திரு.சுலைமான் அவர்களிடம் சான்றிதழ் கொடுக்கச் சொல்லி, திருச்சி மண்டலக் கடவுச் சீட்டு அலுவலர் திரு.அசோகனிடம் வலியுறுத்திப் பரிந்துரைத்து, அவரும் முதலில் தயங்க, பின்னர் முழு மூச்சாக முயன்று கடவுச் சீட்டு கிடைக்கச் செய்தார் திருவள்ளுவனார்.
  அடுத்து, பால்நிலையைக் காரணம் காட்டி இப்படிப்பட்ட நல்ல கலைஞர்களைப் புறக்கணிக்கக்கூடாது, மாறாக விருது அளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று இயல்-இசை-நாடக மன்றச் செயலர் திரு.இளையபாரதியிடம் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் எடுத்துரைக்க, கலைஞருக்கு உயரிய விருதும் கிடைத்தது.
 இவற்றை எல்லாம் அறிந்திருந்த செய்தியாள நண்பர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்னர், மேற்கண்ட நாட்டியக் கலைஞரிடம் செவ்வி காணச் சென்றார். நண்பரிடம் மூத்த  இதழாளர் மணா, ‘திருநங்கை’ எனும் பெயரடைச் சொல்லை இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்தாம் அந்தக் கலைஞருக்குச் சூட்டினார் என்பதைக் குறிப்பிட்டே செவ்வி காண அனுப்பியிருந்தார். நண்பர் அவரிடம் “திருநங்கை என்று உங்களை முதலில் அழைத்தவர் யார்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தக் கலைஞர், “நானே சிந்தித்து இந்தப் பெயரை உருவாக்கி எனக்குச் சூட்டிக் கொண்டேன்” என்றாராம். உடனே அவர்  திருவள்ளுவனாரைச் சந்தித்து மறுப்பு தருமாறு கேட்க, அதற்கு அவர் “தன்னைத் ‘திருநங்கை’ என அழைப்பதையே விரும்பாதிருந்த ஒருவர், இன்றைக்குத் தான்தான் அந்தச் சொல்லை முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியதாகக் கூறுகிறாரே, அதுவே வெற்றிதான்! யார் முதலில் சொன்னார் என்கிற வரலாறு எதற்கு? ‘அரவானி’ என்று சொல்லாமல் மதிப்பாகத் ‘திருநங்கை’ எனச் சொல்லும் பழக்கம் பெருகியுள்ளதே! அது போதும்” என்றாராம்.
  இவ்வாறுவிரிவாக அவர் விளக்கினார். வெண்ணெய்க்கிண்ணத்தை அருகில் வைத்துக்கொண்டே நெய்க்காக அலைந்து இருக்கின்றேனே என வருத்தப்பட்டேன்.
  இதைக் கேள்விப்பட்ட நான், இது குறித்து எழுதவிரும்பி, இப்பொழுது ‘அகரமுதல’ மின்னிதழின் ஆசிரியராக இருக்கும் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களிடம்  “அலி என்ற சொல்லாட்சி தவறா” எனக் கேட்டேன்.  அவர், பின்வருமாறு விளக்கம் அளித்தார்.
  “அலி என்பது நல்ல தமிழ்ச்சொல்லே! ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் உள்ள நிலையை அலி என்றனர். பெண்தன்மை மிகுந்த அலி பேடி என்றும் ஆண்தன்மை மிகுந்த அலி பேடன் என்றும் அழைக்கப்பெற்றனர்.
 ஆணலி,  சண்டன், சிகண்டி, பண்டகன்,  பெட்டையன், பெண்டகன், பெண்ணலி, பெண்ணைவாயன், பேடு, மகண்மா, வண்டரன், வருடவரன்,  பெண்டகை, அல்லி முதலான பல்வேறு பெயர்களாலும் அலி என்போர் அழைக்கப்பெற்றுள்ளனர்.
   இவ்வாறு அவர் விளக்கியதும்,  “நீங்கள்தான் திருநங்கை என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியதாகக் கூறுகிறார்கள். அலி நல்ல தமிழ்ச்சொல்லாக இருக்கும் பொழுது அதனை ஏன் மாற்ற வேண்டும்” என்று கேட்டேன்.
அலி என்பது பாலினப்பெயர். திருநங்கை என்பது அவர்களை மதிப்புடன் குறிப்பிடும் அடையாளச் சொல். அலி என்றும் ஒன்பது என்றும் தாழ்த்தும்  தொனியில் குறிப்பதால் திருநங்கை என மதிப்பாகக் குறிப்பிடுவது  தாழ்ச்சியைப்போக்கும்.
  ஆண்களைத் திருவாளர் எனவும், பெண்களைத் திருவாட்டி (திருமதி) எனவும் குறிப்பிடுவது போல் இருபாலினரைத் ‘திருநங்கை’ எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். திரு என்பது சிறப்பைக் குறிக்கிறது; வேறு வகையில், திரு + நங்கை என்பன இரு பால் என்பதை மதிப்பாகக் குறிப்பதாகவும் கொள்ளலாம். தவிர, ‘அரவானி’ என்பது அறிவிற்கும் அறிவியலுக்கும் பொருந்தாப் புராணக் கதை என்பதுடன் ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்ததாக உள்ளதால் பிறர் ஏற்க மாட்டார்கள். திருநங்கைகள் எல்லாச் சமயங்களிலும், உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கான பால்பெயரும் அனைவருக்கும் பொதுவானதாகச், சமயம் போன்ற சார்புத்தன்மைகள் ஏதும் இல்லாததாக இருத்தல் வேண்டும். ‘திருநங்கை’ என்பது அப்படி ஒரு பொதுவான, பொருத்தமான சொல். 25 ஆண்டுகளுக்கு முன் ‘திருநங்கை’ என்று குறிக்கத் தொடங்கியது, இன்று அரசே ஏற்று ஆணை பிறப்பிக்கும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்கிறது. இத்தகையோரைத் தாழ்வாக எண்ணாமல் மதிப்புடன் நோக்க இச்சொல் உதவுகிறது”
இவ்வாறு விளக்கியதுடன், பின்வருமாறும் அவர் தெரிவித்தார்.
  “மூன்றாம் பாலினருக்கான அலுவல்சார் பால்நிலைச் சொல்லாக (official gender name) ‘திருநங்கை’ எனும் சொல்லை அறிவிக்க  வேண்டும் என்று அரசிற்கு மடல் அனுப்பியிருந்தேன். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபொழுது  இது குறித்து அரசாணையும் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏப்பிரல் 15, 2008 ஆம் ஆண்டு திருநங்கையருக்கெனத் தனி நல வாரியம் அமைத்து அவ்வாறு அறிவித்த ஏப்பிரல் 15 ஆம்  நாளைத் திருநங்கையர் நாள்எனவும் மார்ச்சு11,2011 இல் அறிவித்தார் அவர்.
 “நாட்டியக் கலைஞர் ஒருவர் தான்தான் திருநங்கை என்ற சொல்லைச் சிந்தித்துக் கையாண்டதாகக் கூறுகிறாரே” என்று செய்திக்கு வந்தேன். (எடுத்தவுடன் கேட்டிருந்தால் சொல்விளக்கங்கள் கிடைத்திராதே)
 “நல்ல குழந்தைக்குச் சொந்தம் கொண்டாடப் பலர் வருவார்கள்.  கலைத்துறையினருக்கு உண்மை தெரியும்.எனவே,  நன்றி மறந்தவர் செய்தியை வாதப்பொருளாக்க வேண்டா.”
  “குறிப்பிட்ட அந்த நாட்டியக் கலைஞர் என்னை மட்டுமில்லாமல் அவருக்கு மறுவாழ்வு வாய்ப்புகள் அளித்த  திரு.வை.பழனிச்சாமி இ.ஆ.ப., மண்டல உதவி இயக்குநர்கள் நா.சுலைமான், இரா.குணசேகரன் எனப் பலரையும் மறந்தவர்தாம். இருப்பினும் நான், பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபொழுது அயலக நண்பர்கள் கேட்டதற்கு இவருக்கு வாய்ப்பளிக்குமாறு கூற, அவர்களும் அயல்நாடுகளுக்கு அவரை அழைத்துள்ளனர். அவர் திறமையான கலைஞர்! எனவே, இது பற்றி ஒன்றும் பெரிதுபடுத்த வேண்டா” என்றார் பெருந்தன்மையுடன். மேலும் அவர், “ஆட்சித்துறையில் இருக்கும் பொழுதும் இப்பொழுதும் பல சொல்லாக்கங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி வரும் என்னைப் போன்றவர்கள் இது குறித்தெல்லாம் பொருட்படுத்துவதில்லை. எனினும்  புதுப்புனைவாய் அமையும் சில சொற்கள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது” என்றார்.
“திருநங்கை எனும் புதுச் சொல்லைத் தமிழுக்குத் தந்தவர் யார் தெரியுமா?” என்னும் தலைப்பில் சிறு கட்டுரை எழுதட்டுமா?” என்றேன்.
  “திருநங்கை என்னும் சொல்லறிமுகம் குறித்து எழுதுமாறு தம்பி அம்பலவாணனும் நண்பர்கள் பலரும் பல முறை என்னிடம் வேண்டியுள்ளனர். நான்தான் தவிர்த்து வந்தேன். நீங்களே எழுதுங்கள்! ஆனால், ‘அறிந்த சொல், அறியாத செய்தி’  என்னும் தலைப்பில் எழுதுங்கள். நான் அகரமுதல மின்னிதழில் வெளியிடுகின்றேன்” என்று அகரமுதல இதழில் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
  ஆயிரக்கணக்கான சொற்களை உருவாக்கும் நம் கலைச்சொல்லாக்க அறிஞருக்கு இஃது எளிய செயலாக இருக்கலாம். நமக்கு அறிய வேண்டிய  அரிய செய்தி அன்றோ?
– இ.பு.ஞானப்பிரகாசன்
இலக்குவனார் திருவள்ளுவன்+இ.பு.ஞானப்பிரகாசன் 
(இலக்குவனார் திருவள்ளுவன் +இ.பு.ஞானப்பிரகாசன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக