ஒரு மாதம் தொடர்ந்து எரிந்த எண்ணெய்-இயற்கை எரிவளிக் கூட்டுக் குழுமக் (ONGC) குழாய்! நெடுவாசல் உண்மைகள்! #கள ஆய்வுக் கட்டுரை
மாலை நேரம். நெடுவாசல்
சிற்றூரை நெருங்கிக் கொண்டிருந்தேன். வடக்காடு சிற்றூரில் தன் வயலில்
குடும்பத்தோடு கடலை பறித்துக் கொண்டிருந்தார் விசயா அக்கா.
“இங்கே என்ன சிக்கல் எனச் சரியாகவே
விளங்கவில்லை தம்பி! இந்தப் பக்கத்தில் ஏற்கெனவே எரிநெய்(பெட்ரோல்)
எடுப்பதாகச் சொல்லிப் பல ஆண்டுகளுக்கு முன்பே குழாயெல்லாம் அமைத்தார்கள்.
இப்பொழுது திடீரென ஏதோ புதிதாக நீர்மக் கரிமத் திட்டம் (Hydro Carbon
project) வருகிறது என்கிறார்கள். அது வந்தால் நீர் இல்லாமல் போய்
விடுமாமே?! அதை விடக்கூடாது தம்பி! நிலத்தடி நீரை நம்பித்தான் இங்கே எல்லாமே.
இதோ, என் மகள் கணினித் தொழிலுக்குப் படித்துவிட்டு என்னுடன்
கொல்லையில்தான் வேலை செய்கிறாள். எங்களுக்கு உழவுதான் எல்லாம். அதை மீறி
வாழ்க்கை இல்லை. இந்த மத்திய அரசு அதைப் புரிந்து கொண்டு இடத்தைக் காலி செய்ய வேண்டும்” என்று உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார்.
விசயா அக்கா மட்டுமில்லை செயந்தி,
திருமாயி, சங்கர், குமார் என்று நாம் பேசிய பெரும்பாலானவர்களும் இதே
கருத்தைத்தான் முன்வைத்தார்கள். இன்று நீரகக் கரிமத் திட்டத்திற்கான
எதிர்ப்பு மனநிலை என்பது தமிழ்நாடு முழுக்கவே பரவியிருக்கிறது. கட்டாயம்
இது சரி… கண்டிப்பாக இது எதிர்க்க வேண்டிய திட்டம்தான். ஆனால், நெடுவாசல்
சிக்கல் என்பது என்ன, அங்குள்ள மக்களின் கோரிக்கை என்ன, என்பவற்றில்
பலவிதக் கருத்துக்கள் பரவி வருகின்றன. அந்தத் தெளிவின்மை பலவிதக்
குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. உண்மையில் நெடுவாசலில் என்னதான் சிக்கல்?
நெடுவாசல் எனத் தமிழ்நாடே தகித்துக் கொண்டிருக்கும் சிக்கல் முதலில் நெடுவாசல் சிக்கல் மட்டுமே அன்று!
கோட்டைக்காடு:
நெடுவாசலிலிருந்து 13 புதுக்கல் (கி.மீ)
தொலைவில் இருக்கிறது கோட்டைக்காடு சிற்றூர். 1991-இல் எரிநெய்-இயற்கை
எரிவளிக் கூட்டுக் குழும (எ.இ.எ.கூ / O.N.G.C.) நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்
இங்குள்ள மக்களிடம் வந்து இங்கு எரிநெய், மண்ணெய் (Kerosene) போன்றவை
இருப்பதாகச் சொல்லி நிலங்களைக் குத்தகைக்குக் கேட்டிருக்கிறார்கள். மத்திய
அரசின் நிறுவனம் கேட்பதால் மறுப்பேதும் தெரிவிக்காமல், அந்தப் பகுதியைச்
சேர்ந்த நான்கு பேர் ஏறக்குறைய 10 காணி(ஏக்கர்) நிலத்தைக் குத்தகைக்கு
விட்டிருக்கிறார்கள். 91-இலிருந்து 94-ஆம் ஆண்டு வரை எ.இ.எ.கூ நிறுவனம் பல
ஆராய்ச்சிகளை அங்கு மேற்கொண்டிருக்கிறது. பின்பு, 94-இல் அங்கிருந்து
கிளம்பி விட்டது. பதிக்கப்பட்ட குழாய் இன்னும் அப்படியே இருக்கிறது.
எ.இ.எ.கூ கடைசியாக அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னர் குழாயின் உச்சியில்
நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்ததாகவும், அது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும்
மேலாகத் தொடர்ந்து எரிந்ததாகவும் கோட்டைக்காடு பகுதி மக்கள்
சொல்கிறார்கள்.
94-இற்குப் பிறகு சில ஆண்டுகளிலேயே
குத்தகைக்கு விடப்பட்டிருந்த சில பகுதிகளில் வேளாண்மை செய்து கொள்ளலாமா
என்று உழவர்கள் கேட்க, அதற்கு எழுத்தளவில் ஒப்புதல் வழங்கியிருக்கிறது
எ.இ.எ.கூ. அதன்படி பார்த்தால், குழாய் இருக்கும் பகுதிக்குச் சாலையில்
இருந்து செல்ல எ.இ.எ.கூ-க்குத் தடம் கிடையாது. பல ஆண்டுகளுக்குப் பின்னர்,
தற்பொழுது அந்த வழி தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்று கேட்டுத் தொல்லை
செய்திருக்கிறது எ.இ.எ.கூ. தங்கள் பகுதியில் உள்ள இந்தக் குழாயைப்
பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும், நெடுவாசலில் புதிதாக நீரகக் கரிமத்
திட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என இப்பொழுது கோட்டைக்காட்டிலேயே பந்தல்
அமைத்துத் தொடர்ந்து போராடி வருகிறார்கள் கோட்டைக்காடு மக்கள்.
வாணக்கன்காடு:
93-இல் நிலத்தைக் கேட்டு எ.இ.எ.கூ., நிறுவனம் வந்தபொழுது, தன் நிலத்தைக் கொடுக்க மறுத்துள்ளார் உரிமையாளர் மாரிமுத்து.
நிலத்தின் மூன்றடிக்குக் கீழே இருக்கும் யாவும் அரசின் உடைமை, இதைத்
தடுக்க முடியாது என்று கூறி மாரிமுத்து மீது வழக்குப் பதிந்திருக்கிறது
எ.இ.எ.கூ. பிறகு, பல போராட்டங்களைத் தொடர்ந்து நிலத்தைக் கையகப்படுத்தியது
நிறுவனம். மூன்றாண்டுக் கால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, 96-இல் பதிக்கப்பட்ட
குழாய்களை மூடிவிட்டுச் சென்றது எ.இ.எ.கூ. இருந்தும், நிலத்திற்கான
குத்தகையைத் தொடர்ந்து அளித்து வருகிறது. நெடுவாசல் பகுதியிலேயே மிகவும்
அச்சுறுத்தலான பகுதியாய் இருக்கிறது வாணக்கன்காடு.
2010-இல் மூடப்பட்ட குழாயிலிருந்து
சிறிதாக எண்ணெய் வடியத் தொடங்கியிருக்கிறது. அது நாளுக்கு நாள் பெருகவே,
நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு முறையிட்டிருக்கிறார் மாரிமுத்து. பின்பு,
2012-இல் நிலத்தை ஆய்வு செய்ய வந்தது எ.இ.எ.கூ. சில நாட்கள் ஆய்வு
செய்துவிட்டுப் போனவர்கள், இன்று வரை அதற்கான தீர்வைக் காணவில்லை. இடையில்
மாரிமுத்துவும் இறந்து விட்டார். தற்பொழுது அவர் தம்பி வீரய்யா இதற்காகத்
தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
திறந்தவெளியில் எண்ணெய் கொப்பளித்து,
நடவு செய்யப்பட்டிருக்கும் வேளாண் நிலத்திற்குள் நுழைகிறது. தொடக்கக்
காலங்களில், அறியாமையில் மக்கள் இந்த எண்ணெயை எடுத்துச் சமையலுக்கு
எரிபொருளாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். சில துளிகளை எடுத்துப் பற்ற
வைத்தாலே, அது நீண்ட நேரம் எரியும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இத்தகைய
அச்சுறுத்தலான நிலையில் இருக்கும் இந்த எண்ணெயை அப்புறப்படுத்த அரசு இதுவரை
எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
வடகாடு சிற்றூர், கல்லிக்கொல்லை:
2003-இல், 7 ஆயிரம் அடியில் இங்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் மாணிக்கவாசகம்
அண்மையில் இறந்து விட்டார். குழாயிலிருந்து வெளியேறும் கழிவுகளைக் கொட்ட
ஒரு தொட்டியும், சூடாகும் குழாயைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும்
குளிர்ந்த நீரைச் சேமிக்க ஒரு தொட்டியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
கருக்காக் குறிச்சி, கருநல்லாண்டார் கொல்லை:
நெடுவாசலுக்கு வெகு அருகிலிருக்கும் சிற்றூர். 2007-இல் இதன் உரிமையாளர் வீரம்மாளிடம்
இருந்து நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். கழிவுகளைக் கொட்டும்
தொட்டி, திறந்த நிலையில் கழிவுகளோடு அப்படியே கிடக்கிறது. தகரக் கொட்டகை
அமைத்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இப்படி இந்த நான்கு சிற்றூர்களைத்
தொடர்ந்து ஐந்தாவதாக நெடுவாசலில் நீர்மக் கரிமத் திட்டத்தைக் கொண்டு வர
முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இந்தப் பகுதிகளில் போராடும் மக்களின் கோரிக்கை இரண்டுதாம்.
- நெடுவாசலைச் சுற்றியிருக்கும் ஊர்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குழாய்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். தேங்கியிருக்கும், வழிந்து கொண்டிருக்கும் கழிவுகளுக்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும்!
- நெடுவாசலில் புதிதாக நீர்மக் கரிமத் திட்டத்தைக் கொண்டு வரக் கூடாது! நெடுவாசலில் மட்டுமில்லை, செழிப்பான வேளாண்மை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தங்கள் மண்ணின் எந்தப் பகுதியிலும், வேளாண்மையைப் பாதிக்கக்கூடிய எந்தத் திட்டமும் கொண்டு வரக்கூடாது!
வாதங்களும், எதிர்வாதங்களும்:
சார்புக் குரல்: நீரகக் கரிமத் திட்டம்
என்பது 90-களில் இருந்தே நெடுவாசல் பகுதிகளில் இருக்கிறது. திடீரென
இப்பொழுது அதை எதிர்க்க வேண்டிய தேவை என்ன?
எதிர்ப்புக் குரல்: உண்மைதான்! அன்றைய
காலக்கட்டத்தில், அறியாமையின் பொருட்டு நிலங்களைக் குத்தகைக்கு விட்டனர்.
ஏன் இன்றும் கூட அந்தக் குழாய்களில் என்ன எடுக்கப்படுகிறது, அங்கு என்ன
நடக்கிறது என்பது குறித்த எதுவும் நில உடைமையாளர்களுக்கே தெரியவில்லை.
வடகாட்டில் எண்ணெய் வழிந்து வேளாண் நிலத்தைப் பாதிக்கிறது. எளிதில் பற்றிக்
கொள்ளக்கூடிய தன்மை வாய்ந்த எண்ணெய் பல ஆண்டுகளாகத் திறந்தவெளியில்
அப்படியே கிடக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்த இன்றைய தலைமுறையினர் தங்கள்
நிலங்களைக் காக்கப் போராடுவதில் தவறில்லையே?
போபால் நச்சுவளிப் பேரிடரில்
அலறியடித்துக் கொண்டு ஓடியவர்கள் எல்லாரும் ஒரு நொடி நின்று ஈரத் துணி
கொண்டு முகத்தை மூடியிருந்தால் உயிர் பிழைத்திருப்பார்கள் என்ற அடிப்படை
அறிவைக் கூட மக்களுக்குப் புகட்டாத இந்த அரசை நம்பி எப்படி எங்கள் வேளாண்
நிலங்களைக் கொடுக்க முடியும்?
சார்புக் குரல்: எண்ணெய், எரிவளி ஆகியவை
இருக்கும் இடத்தில்தானே அவற்றை எடுக்க முடியும்? உழவர்களே கூட இன்று
கன்னெய், நிலநெய் (டீசல்), எரிவளி இல்லாமல் இருக்க முடியாதே! நாட்டிற்காகச்
சிலர் சில ஈகங்களைச் (தியாகங்களை) செய்வதில் தவறில்லையே?
எதிர்ப்புக் குரல்: ஒரு திட்டத்திற்கான
செலவை இரண்டாகப் பிரிக்கலாம். பொருட்செலவு, சுற்றுச்சூழல் செலவு. பல
வளர்ந்த நாடுகளும் சுற்றுசூழல் செலவுகளைக் கணக்கில் கொண்டே திட்டத்தைச்
செயல்படுத்துகின்றன. முத்துப்பேட்டைச் சதுப்புநிலக் காடுகளை சுவிட்சர்லந்து
அரசு தத்தெடுப்பதற்கும், அமெரிக்க நிறுவனங்கள் மேட்டுப்பாளையத்தில்
மரங்களை வளர்த்து கரிம வணிகம் (Carbon Trading) செய்வதற்கும் பின்னணியில்
இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ளுங்கள்! நெடுவாசல் திட்டத்தின் மூலம் 9
ஆயிரம் கோடி உரூபாய்க்கான வருவாய் அரசுக்குக் கிடைக்கும் எனச்
சொல்லப்படுகிறது. அத்தோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வடிப்படையான
வேளாண்மையை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது நீர்மக் கரிமத்தை விட அரிசியும்,
கரும்பும், கடலையும், வாழையுமே முதன்மையாகப் படும்.
மக்கள் விரும்பாவிட்டால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது எனத் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள் பா.ச.க-வினர். மக்கள் இந்தத் திட்டத்தைத் துளியும் விரும்பவில்லை, வானளவு, கடலளவு வெறுக்கிறார்கள்
என்பதைத் தொடரும் 15 நாட்களுக்கும் மேலான போராட்டத்தின் மூலம் அன்றி வேறு
எப்படி பா.ச.க-வினருக்குப் புரிய வைப்பது என்பதுதான் தெரியவில்லை!…
– எழுத்து: இரா.கலைச்செல்வன்
விகடன், பிப்பிரவரி 28, 2017:
விகடன், பிப்பிரவரி 28, 2017:
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக