மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்!
வாய்ப்புக்
கிடைக்கிறபொழுதெல்லாம் “விரைவில் தி.மு.க., ஆட்சி” என அச்சுறுத்தியபடியே
இருக்கிறார் மு.க.தாலின். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரை,
கோபிநாத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்ட பன்னீர்செல்வம் – சசிகலாவின் ‘நீயா நானா’ வுக்கு இடையே ஒலித்த தனி இசை – தாலினின் குரல்தான்! 8 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற வளாகம் குருதிச் சேறாக்கப்பட்ட பிப்பிரவரி 19 நெருங்குகிற நிலையில் தாலின் இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்கும்பொழுதே குலை நடுங்குகிறது.
செவ்வாய்க்கிழமை வெளியான உச்சநீதிமன்றத்
தீர்ப்பின் மீதே அனைவரது கவனமும் பதிந்திருக்கும் நிலையில், ஓர்
உயர்நீதிமன்றத்துக்கே நீதி மறுக்கப்படுவதைக் குறித்து எழுத வேண்டிய கடமை
எனக்கிருப்பதை உணர்ந்தே இதை எழுதுகிறேன்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கிய கறுப்பு நாள், 19.02.2009.
தாக்குதல் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை அரசுப் பொது
மருத்துவமனையில் காயம்பட்ட வழக்கறிஞர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல,
உடன்பிறப்பு வெள்ளையனுடன் போயிருந்ததை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.
காவலர் தாக்குதலில் காயமடைந்திருந்த
வழக்கறிஞர்கள் சேர்க்கப்பட்டிருந்த பிரிவுக்குள் நாங்கள் நுழைந்தபொழுதே,
எங்கள் நாசித்துளைகளைத் தாக்கியது குருதி வாடை. அந்த இடம் முழுக்க அடிபட்ட
வழக்கறிஞர்கள். கட்டில்கள் மீது, தரையில் என்று ஒவ்வொரு மூலையிலும்
அவர்கள்… அவர்கள்… அவர்கள் மட்டுமே! வலி தாங்காமல் அவர்கள் எழுப்பிய வேதனை
ஒலியால், போர் முடிந்த நொடியிலான போர்க்களம் போலவே இருந்தது அந்த இடம்.
உறவினர்கள் யாரும் வந்து சேராத நிலையில்,
மிகுதியாகக் காயமடைந்த வழக்கறிஞர்களுக்கு உறவினர்களாகவே மாறி உதவிக்
கொண்டிருந்தார்கள், கொஞ்சமாய்க் காயமடைந்திருந்த வழக்கறிஞர்கள். தொழில்
அளவிலான நட்பு, அவர்கள் ஒருவரையொருவர் தாங்கிக் கொள்கிற அளவுக்கு வலுவானதாக
இருந்தது. ஏறத்தாழ அவர்கள் அனைவரது வெள்ளை உடைகளிலும் குருதிக் கறை! பலரது உடைகள் கிழிந்திருந்தன.
தங்கை அங்கயற்கண்ணி, வடிவாம்பாள்
உள்ளிட்டோரைத் தேடுவதற்குள் வலி தாங்காமல் துடித்துக் கொண்டிருந்த
நண்பர்கள் பலருக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது. அவர்களில் பலரும், ஈழத்தில் நடந்து கொண்டிருந்த இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டவர்கள். சனவரி 29 முதல் 31 வரை முத்துக்குமார்
என்கிற அணையா நெருப்பை அடைகாப்பதில் துணை நின்றவர்கள். அந்தக் கறுப்பு
நெருப்பின் உடலை எடுத்துச் சென்றபொழுது உணர்ச்சி கொந்தளிக்கும்
முழக்கங்களுடன் அணிவகுத்தவர்கள்.
2008 – 2009இல் திட்டமிட்ட தமிழின அழிப்பில் ஈடுபட்டது இலங்கை. அதற்கு நேரடியாக உதவியது, காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு. கள்ளத்தனமாகத் துணை நின்றது தமிழகத்தை ஆண்ட தி.மு.கழகம். இனமானக் காவலர்கள் என்கிற முகமூடியைக் கழற்றாமலேயே, கடைந்தெடுத்த இன இரண்டகர்களைப் போலக் கூடவே இருந்து குழி பறித்தார்கள் அவர்கள்.
இனப்படுகொலையையும் இனப்பகைவர்களையும் இன
இரண்டகர்களையும் எதிர்த்து, சாதி – சமய – அரசியல் எல்லைகளையெல்லாம்
ஒதுக்கிவிட்டு ஒன்றுபட்டு நின்று ‘முதல் குரல்’ எழுப்பியவர்கள்
வழக்கறிஞர்கள்தாம்! தமிழகமெங்கும் நீதிமன்றங்களின் முன்னிருக்கும்
வீதிகளில் நின்று போராடினார்கள் அவர்கள். இனப்படுகொலை மேலும்
தீவிரமடைந்தபொழுது வழக்கறிஞர்களின் போராட்டமும் தீவிரமடைந்தது. சாலை
மறியல், தொடரி மறியல் என்று விரிவடைந்தது.
சென்னை வழக்கறிஞர்களைக் குறித்துத்
தனியாகக் குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை. இந்தச் சிக்கலில் அவர்களுக்குத்
தனிச் சான்றிதழ் எதுவும் தேவையில்லை. தமிழினத்துக்கான போராட்டங்களில் எப்பொழுதும் முன்நிற்கிற அவர்கள், அப்பொழுதும் முன்நின்றனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராசு தலைமையில், இந்தியப் படையின் அலுவலகத்தையே முற்றுகையிடக் கூட அவர்கள் தயங்கவில்லை.
வழக்கறிஞர்கள் போராட்டம் ஒரு நாளில்
முடிந்து விடும், ஒரு கிழமையில் முடிந்து விடும் என்ற கணிப்புகளெல்லாம்
பொய்த்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் போராட்டம், வெவ்வேறு
வடிவங்களில் தொடர்ந்தபடியே இருந்தது. நாளாக நாளாக வலுவடைந்தும் வந்தது.
இனப்படுகொலை நிற்கும் வரை வழக்கறிஞர்கள்
போராட்டம் ஓயாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்ட பிறகே, அவர்களை
அடக்கி ஒடுக்குவது என்கிற முடிவை அப்பொழுதிருந்த தி.மு.க., அரசு
எடுத்திருக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்
என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும். (‘எடுத்திருக்க வேண்டும்’
‘வந்திருக்க வேண்டும்’ – எனச் சொல்வது ‘தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மை’.
‘தமிழக அரசு அப்படியொரு முடிவுக்கு வந்தது’ – எனச் சொல்வதுதான் சரி.) அந்த
முடிவுக்குச் செயல் வடிவம் கொடுக்கப்பட்ட நாள்தான் – 19.02.2009.
அந்தச் சமயத்தில், முதல்வர் கருணாநிதி இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தார் என்பதையும், அவருக்கு அறுவைப் பண்டுவம்(சிகிச்சை) நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில், அந்த
பிப்பிரவரி 19ஆம் நாள், ஆழமான வடுவாக மாறப் போகிறது என்பதற்கான அறிகுறிகள்
முன்கூட்டியே தெரிந்தன. நடத்தப் போகும் தாக்குதலுக்குக் கட்டியம் கூறுவதைப்
போல, விரைவுச் செயல் படையினரும் (RAPID ACTION FORCE) கலவர
க்கட்டுப்பாட்டுப் படையினரும் (RIOT CONTROL POLICE) நீதிமன்ற வளாகத்தில்
குவிக்கப்பட்டனர். ஆயுதம் தாங்கிய காவல் படையுடன் உயர் அலுவலர்களும்
இருந்தனர். தாக்குதலுக்கு அவர்கள் ஆயத்தமானது இப்படித்தான்!
அறவழிப் போராட்டங்களைச் சீர்குலைக்க,
இப்படியெல்லாம் மிகையான காவல்துறையினரைக் கொண்டு வந்து குவிப்பதும், அதன்
மூலம் போராடுபவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதும், வெள்ளையர்
காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிற மிக மிகப் பழமையான காவல்துறை
வழிமுறைகள். விடுதலை பெற்ற பிறகும் அது தொடர்ந்தது, தொடர்கிறது. சென்னை
உயர்நீதிமன்றத்திலும் அதுதான் நடந்தது.
அளவுக்கு மிஞ்சிய காவல் துறையினர்
ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டதும், போராட்டம் நடத்துபவர்களிடம் ஒரு கலக்கம்
ஏற்படுவது வழக்கம். பாதிப் பேராவது கலைந்து விடுவார்கள் அல்லது காணாது
போய்விடுவார்கள். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அப்படியெல்லாம் அஞ்சி
நடுங்கிக் கலைந்து விடவில்லை. அவர்களது அந்த அஞ்சாமை கண்டு எரிச்சலடைந்ததோ
என்னவோ, அவர்களுக்குப் பாடம் கற்பிக்கிற நேரடி நடவடிக்கையில் இறங்கியது
காவல்துறை.
அறவழியில் போராடியவர்களை அடித்துத்
துவைப்பதற்கு ஏதாவதொரு காரணம் காட்டியாக வேண்டுமே! அப்படியொரு காரணமும்
கிடைத்தது காவல்துறைக்கு! சுப்பிரமணிய சுவாமி மீது முட்டை வீசிய
வழக்கறிஞர்களைக் கைது செய்கிற நடவடிக்கை என்ற போர்வையில் தாக்குதல்
தொடங்கப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே வெறி கொண்டவர்களைப் போலக் காவல்துறையினர் தாக்கத் தொடங்க, திகைப்பில் ஆழ்ந்தார்கள் வழக்கறிஞர்கள். அப்படியொரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே மேற்கொள்ளப்படுமென்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
ஆயுதமற்றவர்களாக இருந்த வழக்கறிஞர்கள்,
ஆயுதம் தாங்கிய காவல்துறையினராலும் மற்ற காவலர்களாலும் விரட்டி விரட்டித்
தாக்கப்பட்டார்கள். ஓடிய வேகத்தில் ஒருவர் மீதொருவர் விழுந்து
சீட்டுக்கட்டு மாதிரிச் சரிந்து விழுந்த வழக்கறிஞர்களை, கீழே வீழ்ந்திருந்த
நிலையிலேயே காவலர்களின் தடிகள் பதம் பார்த்தன.
அஃது ஈவிரக்கமில்லாத ஒரு
தாக்குதல். “போராடுவாயா? ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுப்பாயா?” என்று
கேட்டுக் கேட்டே அடிப்பதைப் போன்றிருந்தது.
அந்த வெறித்தனமான தாக்குதல் ஏறக்குறைய 4
மணி நேரம் நீடித்தது. தாக்குதலை நிறுத்தும்படி காவல்துறை அலுவலர்களைக்
கேட்டுக் கொள்வதற்காக வெளியே வந்த நீதியரசர் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனைக் கூடக் காவல்துறையினர் விட்டு வைக்கவில்லை.
அவரது தலையிலிருந்து குருதி சிந்த, அவர் மேற்கொண்டு தாக்கப்பட்டு விடாதபடி
வழக்கறிஞர்கள் அரணாக நின்று பாதுகாத்தார்கள். வழக்கறிஞர்களின்
பேராண்மையைப் பறைசாற்றிய நிகழ்வு அது!
காவல்துறைத் தாக்குதலில் காயமடைந்த
வழக்கறிஞர்களில் 125 பேருக்கும் மேல் தலையில் காயமடைந்தவர்கள் என்று
வழக்கறிஞர் சங்கம் பின்னர் அறிவித்தது. அது போதாதென்று, நீதிமன்ற
வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் ஊர்திகளையும் காவல்துறையினர் வெறி பிடித்தவர்களைப் போல அடித்து உடைத்தனர்.
காவல்துறையினரின் அந்தத் தாக்குதல், மிக
மிகத் தெளிவான – திட்டமிட்ட தாக்குதலாக இருந்தது. அது, அந்தத் தறுவாயில்
எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தெரியவில்லை.
நடந்தது என்ன என்பதை மூத்த வழக்கறிஞர் வைகை அம்பலப்படுத்தியது இப்பொழுதும் நினைவிருக்கிறது.
“அந்தத் தாக்குதல்,
அப்பொழுதைய சூழ்நிலையில் திடீரென முடிவெடுத்து மேற்கொள்ளப்பட்டதில்லை.
ஆயுதக் காவல்துறை, விரைவுச் செயல் படை போன்றவை அரசின் முன் ஆணையில்லாமல்
குவிக்கப்பட்டிருக்க முடியாது. அதிரடிப்படையினரை(commando force)
நடவடிக்கையில் ஈடுபடுத்தக் காவல்துறைத் தலைவரின் முன் ஒப்புதல் தேவை.
சிறப்புப் படையினரை ஈடுபடுத்தக் காவல்துறை ஆணையரின் இசைவு தேவை. கண்டிப்பாக
இது திட்டமிட்ட ஒரு தாக்குதல்” என்பது வைகையின் குற்றச்சாட்டு.
இப்படித் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொன்னார் வைகை.
“இலங்கைத்
தமிழர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர்களின் தொடர் போராட்டங்களுக்கு ஊடகங்கள்
முதன்மை தருவதை மத்திய – மாநில அரசுகள் விரும்பவில்லை. இந்தப் போராட்டத்தை
எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது அவர்களது எண்ணம்.
அதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது” என்றார் அவர்.
நீதிமன்றத் தாக்குதல் நடந்த சமயத்தில்,
முதல்வர் கருணாநிதி இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தார். அன்றைய
நிலையில், ஆட்சி ஆளுமைக் கடிவாளம் யார் கையில் இருந்தது என்பது
தி.மு.க-வின் கடைசி உடன்பிறப்புக்குக்கூடத் தெரியும். தாலின் அப்பொழுது
துணை முதல்வராக ஆக்கப்படாவிட்டாலும் கூடக் கடிவாளம் அவர் கையில்தான்
இருந்திருக்க வேண்டும். இளவரசர் கையில் இல்லாமல், வேறெவர் கையில் அஃது
இருந்திருக்கும்!
இனப்படுகொலை தொடர்பாகத் தமிழக ஊடகங்களும்
கள்ள அமைதி காத்தன. அது தொடர்பான செய்திகளையும், அதற்கு எதிரான
நிகழ்வுகளையும் இருட்டடிப்புச் செய்தன. பல்லாயிரம் இளைஞர்களை ஒன்று
திரட்டிய முத்துக்குமாரின் உயிர் ஈகம் குறித்த செய்திகள் கூடத் திட்டமிட்டு
மறைக்கப்பட்டன. நூறாயிரம்(ஒரு இலட்சம்) பேருக்கு மேல் அணிவகுத்த
முத்துக்குமாரின் இறுதிப் பயணம், மக்கள் பார்வையிலேயே படாதபடி மாற்றுப்
பாதையில் திருப்பி விடப்பட்டதை எந்த ஊடகமும் கண்டிக்கவில்லை.
மருத்துவமனையிலிருந்த கலைஞர்
இவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஆளும் கடிவாளத்தைக் கையில்
வைத்திருந்த தாலின்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். இஃது என்னுடைய கணிப்பு மட்டுமில்லை…
திட்டவட்டமான குற்றச்சாட்டு! இனப்படுகொலை தொடர்பாக தாலின் மீது
முன்வைக்கிற குற்றச்சாட்டுகளில், உயர்நீதிமன்ற விவகாரத்தையும் சேர்த்தாக
வேண்டும்!
அரசு நெருக்கடி கொடுத்தும் கூட,
ஊடகங்களால் வழக்கறிஞர்கள் போராட்டத்தை மூடி மறைக்க முடியவில்லை. அந்தப்
போராட்டம் காட்டுத் தீப் போல் பரவியது. அது தொடர்ந்தால், தமிழகம் முழுக்கப்
போராட்டத் தீ பரவும் என்பது மத்திய உளவுத் துறைக்குக் கண்டிப்பாகத்
தெரிந்திருக்கும். ஒட்டுமொத்தத் தமிழகமும் களத்தில் இறங்கி விட்டால்,
இனப்படுகொலையை நிறுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்படும் என்பதையும்,
அதன் மூலம் சோனியா காந்தியின் ‘கனவுத் திட்டம்’ நிறைவேறாது போய்விடும்
என்பதையும் அவர்கள் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள்.
அந்த அடிப்படையில்தான், தாலின்
கட்டுப்பாட்டில் இருந்த மாநில அரசை மத்திய அரசு வற்புறுத்தியிருக்க
வேண்டும். ‘எப்படியாவது அந்தப் போராட்டத்தை நசுக்குங்கள்’ என்று
கூறியிருக்க வேண்டும். மத்தியில் ஆண்டவர்களின் ஆணையை நிறைவேற்றியே
ஆக வேண்டிய நிலையில் தி.மு.க., இருந்திருக்க வேண்டும். காங்கிரசின்
துணையால்தான் அது பதவி நாற்காலியில் குந்திக் கொண்டிருந்தது என்பது
அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
நான் சொல்வது உண்மையா இல்லையா?
ஈழ உறவுகளுக்காகப் போராடிய
வழக்கறிஞர்களால், இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று விடும்
என்கிற அச்சத்தாலன்றி, வேறெதற்காகப் பேராண்மை பொருந்திய எங்கள்
வழக்கறிஞர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்? சுப்பிரமணியன் சுவாமிக்காகவா?
இனப்படுகொலையில் தி.மு.க., மீதும் கலைஞர்
மீதும் தாலின் மீதும் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவது முறையா என்று எனக்கு
மின்னஞ்சல் அனுப்புகிற நண்பர்களிடம் நான் கேட்க நினைப்பது இதைத்தான்!
“வழக்கறிஞர்களுக்குத் தக்க பாடம்
புகட்டுங்கள்” என்ற ஆணை தாலினிடமிருந்து வந்திருக்குமா?
மருத்துவமனையிலிருந்த கலைஞர் கருணாநிதியிடமிருந்து வந்திருக்குமா? அல்லது,
தி.மு.க-வுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதலை ஏற்படுத்த வேண்டும்
என்பதற்காகக் காவல்துறையே அப்படிச் செய்ததா?
இனப்படுகொலைக்கு எதிரான வழக்கறிஞர்களின் குரலை ஒடுக்கியதன் மூலம், நடந்து கொண்டிருந்த இனப்படுகொலை தடங்கலின்றித் தொடர வழிவகுத்தவர் தாலின் இல்லையெனில் வேறு யார்? தி.மு.க-வில் அவ்வளவு வலிமை பொருந்திய இன்னொருவர் இருந்தாரா என்ன!
வெறுங்கையுடன் இருந்த வழக்கறிஞர்கள்
அடித்து நொறுக்கப்பட்டதற்காக, ‘அடித்து நொறுக்குங்கள்’ என்று
கட்டளையிட்டவர்கள் மீதும், அந்தக் கட்டளையை நடைமுறைப்படுத்தியவர்கள் மீதும்
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத வேதனையுடன்தான் இதை எழுதுகிறேன். யார்,
எதற்காக, ஏன் – என்கிற எந்தக் கேள்விக்கும் நேரடியாக விடையளிக்காமல்
தொடர்புடையவர்கள் கள்ள அமைதி காப்பதால், இது பற்றி விரிவாகப் பேச வேண்டிய
தேவை ஏற்பட்டு விட்டது.
(தொடரும்)
– தமிழ்ப் போராளி புகழேந்தி தங்கராசு
தமிழக அரசியல் இதழ்
நாள்: 18.02.2017 பக்கங்கள் 08-11
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக