“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!”
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேச்சு!
“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில்
ஏற்றுவோம்!” என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன்
பேசினார்.
“இந்திய அரசே! இனக்கொலை இலங்கைக்குத் துணை போவதை நிறுத்து! இலங்கையைக் கூண்டிலேற்றத் தீர்மானம் கொண்டு வா!”
என்ற கோரிக்கையுடன், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், மாசி
21, 2048 – 05.03.2017 மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு
அமைப்புகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், உரிமைத் தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, தந்தை பெரியார் தி.க. தென்சென்னை செயலாளர் தோழர் ச. குமரன், தமிழ்த்தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, மா.இலெ.பொ.க.(சி.பி.எம்.எல்.) மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் தோழர் பாலன், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், சமவுடைமை(சோசலிச) மையம் தோழர் செல்வி முதலான பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்,
பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பங்கேற்று உரையாற்றினார். அவரது
உரையின் எழுத்து வடிவம் :
“இந்திய அரசே! இனப்படுகொலை மேற்கொண்ட இலங்கைக்கு துணை போவதை நிறுத்து – ஐ.நா. மனித உரிமை அவையில்,
இலங்கையைக் குற்றவாளிக் கூண்டிலேற்றும் தீர்மானத்தைக் கொண்டு வா என்ற
கோரிக்கையுடன் நடைபெறுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையைத்
தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டம்,
தற்போது பன்னாட்டு அரங்கில் – ஐ.நா. மனித உரிமை அவையில் தீர்மானங்கள்
முன்மொழிந்து நகர்த்தும்படியான சூழலில், நாம் யாரிடம் கோரிக்கை வைப்பது
என்று நம்மிடையே பல கருத்துகள் இருக்கின்றன. சிங்கள அரசுக்குத் துணை நின்று – தமிழீழ இனப்படுகொலையை மேற்கொண்ட இந்திய அரசிடமே நாம் கோரிக்கை வைக்க வேண்டுமா என்றும் வினா எழுப்பப்படுகின்றது. வைப்பதில் தவறில்லை என்பதே நம் பார்வை!
ஏனெனில் இந்திய அரசிடம்தான் நமது இனத்தின்
இறையாண்மை சிக்கியிருக்கிறது. பன்னாட்டு அரங்கில் நமது குரலை ஒலிக்க
வேண்டிய சட்டக் கடமையும் இந்தியாவுக்கே இருக்கிறது.
தமிழீழ இனப்படுகொலைக்குத் துணை நின்ற
அதே இந்திய அரசின் ஏற்போடுதான், கடந்த 2015ஆம் ஆண்டு இதே ஐ.நா. மனித உரிமை
அவையில் இலங்கையில் நடைபெற்ற “போர்க் குற்றங்கள்” மீது ஒரு குறைந்தபட்ச
பன்னாட்டு உதவியுடனான விசாரணை வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைக்கூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்பதை நாம் பன்னாட்டு அரங்கில்
கூடுதல் வலுவோடு அம்பலப்படுத்த வேண்டும்.
இன்றைக்குத் தமிழ்நாடு, ஒவ்வொரு நாளும்
பல்வேறு திட்டங்கள் வழியாக – பல்வேறு முனைகளில் இந்திய அரசின்
தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அதற்கு நாம் முகம் கொடுத்துப்
போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இருப்பினும், ஈழத்தமிழருக்கு நீதி
பெறுவது நம் கடமை! வேறுவழியில்லை, நாம் போராடித்தான் ஆக வேண்டும்.
இந்த சூழலில் இலங்கை அரசு பன்னாட்டு
அரங்கில் மீண்டும் மீண்டும் கால வாய்ப்பு கேட்டுக் கொண்டு, தமிழீழ
மக்களுக்கான அரசியல் நீதியை மறுத்துக் கொண்டு – மனித உரிமை அவையில் அது
ஏற்றுக் கொண்ட குறைந்த அளவு தீர்மானங்களைக்கூட நிறைவேற்றாமல் இருப்பதை, ஐ.நா. மனித உரிமை ஆணையரே தம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்போது நடைபெறவுள்ள மனித உரிமை அவைக்
கூட்டத் தொடரில், சிங்கள அரசு மீண்டும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு கேட்க
உள்ளது. அதற்கு இந்திய அரசு ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ளது.
இந்தியாவைக் காங்கிரசு ஆண்டாலும், பா.ச.க. ஆண்டாலும் அதன் கொள்கைகள் எதிலும் எந்த மாற்றங்களும் இல்லை.
தமிழ்நாட்டில் நாம் நடத்தும் போராட்டங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக –
ஆள்வோருக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக நாம் சில கோரிக்கைகளையும்,
சில முன்னேற்றங்களையும் வேண்டுமானால் பெறலாம். ஆனால், இந்திய அரசின்
வெளியுறவுத்துறைக் கொள்கையை நம் போராட்டங்கள் மாற்றிவிடும் என்று நாங்கள்
நம்புவதில்லை!
ஏனெனில், ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் நீட்சி! இந்திய அரசின் உள்நாட்டுக் கொள்கை என்பது தமிழினப் பகைக் கொள்கை! அது வெளியுறவுக் கொள்கையிலும் வெளிப்படுகிறது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.
அதுபோல, இலங்கையை எந்தக் கட்சி ஆண்டாலும் அதன் சிங்களப் பேரினவாதக் கொள்கையில் எந்த மாற்றங்களும் இல்லை!
இராசபக்சே அரசும், சிறீசேனா அரசும் சிங்களப் பேரினவாதக் கொள்கையையே
அடிப்படையாகக் கொண்டவை! தமிழீழ மக்களுக்கான நீதியை வழங்க சிங்கள அரசு
எதையும் செய்யவில்லை.
எனவே, நாம் அறத்தின் பக்கம் நிற்கிறோம்
என்ற அற வலிமையோடு ஒற்றுமையுடன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம். நம் போராட்டங்கள் வீணாகப் போவதில்லை. நம்
போராட்டத்திற்குக் கிடைத்த இன்னொரு ஆயுதமாக, தற்போது ஐ.நா. மனித உரிமை
ஆணையர் வழங்கியுள்ள அறிக்கை கிடைத்திருக்கிறது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைக்குப் பிறகும், தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை,
இலங்கை அரசின் நீதித்துறையே சிங்கள இனவாதத்தில் தோய்ந்து கிடக்கிறது
என்பதையெல்லாம் அவர் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற
உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை
செய்யப்பட்டனர். ஊடகவியலாளர் இலசந்த விக்கிரமசிங்கே
கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட வாய்ப்பான நிலை
உள்ளது. தமிழ் மக்கள் அளிக்கும் சான்றுரைஞர்கள் சீர்குலைக்கப்படுகின்றன.
வழக்குகள் திசைமாற்றப்படுகின்றன. சிங்கள நீதிபதிகளே இருப்பதால், தமிழ்
மக்களுக்கு இலங்கை நீதித்துறையில் நீதி கிடைக்க சாத்தியமில்லை என்ற
செய்திகளையெல்லாம் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
ஏற்கெனவே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமர்த்திய தாருசு மான் குழு
அறிக்கையில், இலங்கையில் கட்டமைப்பு வகையில் தமிழர்கள் ஒடுக்கப்படுவது
சுட்டிக்காட்டப்பட்டது. ஐ.நா. அவை அளித்த மூவர் குழு அறிக்கையில்,
இலங்கையில் மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கான
சான்றுகள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்தப் புதிய
அறிக்கையிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், வெளிநாட்டு நீதிபதிகள் தலையீட்டுடன் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட ‘போர்க்குற்றங்கள்’ குறித்த ‘கலப்பு’ உசாவலும்
நடைபெற வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதற்கும் இலங்கை அரசு ஒத்து
வரவில்லை. “கலப்பு உசாவல் பொறியமைவு ஏற்படுத்துவோம்” என்று சொன்ன இலங்கை
அரசு, அதற்காகத் துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.
ஆதிக்க வல்லரசுகள் பின்னணியில்
செயல்படும் நாடுகளின் மீது கூட, மக்கள் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக
விசாரணைகள் நடைபெறுகின்றன. எனவே நாம் இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில்
உறுதியாக ஏற்ற முடியும்! நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்!
காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தர
வேண்டி நடத்தப்படும் போராட்டங்கள், நில உரிமை மீட்புப் போராட்டங்கள் எனத்
தற்போது தமிழீழத்தில் – சிங்களப் பேரினவாத இராணுவத்தின் நிழலில் ஊசலாடிக்
கொண்டுள்ள குறைந்தஅளவு சனநாயக வெளியைப் பயன்படுத்திக் கொண்டு,
தமிழீழ மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புலம் பெயர்ந்த தமிழீழ
மக்கள் அவரவர் நாடுகளில் போராட்டங்களை நடத்துகின்றனர். இவை நம் கோரிக்கைகளை
பன்னாட்டுச் சமூக அரங்கில் மேலும் வலுப்படுத்த உதவுகின்றன. அதுபோல்,
தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் தொடர வேண்டும்.
“தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே” என ஐ.நா. மன்றம் அறிவிக்க வேண்டும்
என்ற நம் முதன்மையான கோரிக்கை! அவ்வாறு அறிவித்தால் அந்த இனப்படுகொலைக்கான
நீதியாகத் தமிழீழத்தைக் கேட்பதையும் அது உள்ளடக்கி இருக்கிறது. எனவே நம்
முதன்மையான கோரிக்கையை நாம் உயர்த்திப் பிடித்துக் கொண்டு, உடனடிக்
கோரிக்கைகளுக்கான போராட்டங்களையும் நடத்த வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையின்
அடிப்படையில் பார்த்தால், இச்சிக்கலை ஐ.நா. பொது அவைக்கு மனித உரிமை மன்றம்
அனுப்பி, ஐ.நா. பாதுகாப்பு அவை வழியாகப் பன்னாட்டுக் குற்றவியல்
நீதிமன்றத்திற்கு அனுப்ப வகை செய்ய வேண்டும். அதைத்தான் இப்போது உடனடிக்
கோரிக்கையாக வலியுறுத்துகிறோம். இக்கோரிக்கையை இந்தியா முன் வைக்க வேண்டும்
என்கிறோம். இதை விரிந்த தளத்தில் கொண்டு சென்றால், நாம் நிச்சயம்
வெல்வோம்! நன்றி! வணக்கம்!”
இவ்வாறு தோழர் கி. வேங்கடராமன் பேசினார்.
போராட்டத்தில், திரளான தமிழின
உணர்வாளர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச்
செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர்
பழ.நல். ஆறுமுகம், தோழர் வெற்றித்தமிழன்(தலைவர், தமிழக இளைஞர் முன்னணி,
சென்னை) தோழர்கள் வடிவேலன், புரட்சி, சத்தியா முதலானோர் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக