இ.திருவள்ளுவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இ.திருவள்ளுவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஜூன், 2019

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

அகரமுதல

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

  1. திருமாவளவன் விளக்கம் சரிதானே!

தீவிரவாதத்திற்கும் பயங்கர வாதத்திற்குமான விளக்கத்தை முனைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதற்காக அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. நான் அரசிலறிவியலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்துள்ளேன்.அப்பொழுதிருந்தே தீவிரவாதியையும் பயங்கரவாதிகயையும் ஒன்றுபோல் கூறும் பழக்கம் தவறு என்ற கருத்து உடையவன். சில இடங்களில் இது குறித்துப் பேசியும் எழுதியும் உள்ளேன். இப்பொழுது வி.சி.க.தலைவர் இந்த விளக்கத்தைக் கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. தீ பரவுவதுபோல் தான் கொண்ட கொள்கையை முனைப்புடன் வாதிட்டுப் பரப்புவது தீவிர வாதம். ஒரு வேளை அந்தக் கொள்கை தவறாக இருந்தாலும் அது தீவிரவாதம்தான்.  அதே நேரம் தான் கொண்டுள்ள கருத்தை அல்லது கொள்கையைச் செயல்படுத்துவதற்காக வன் முறையில் இறங்குபவன் பயங்கரவாதி. பயங்கரவாதி என நாம் கூறினாலும் கொடுங்கோலன் என்றும் இதற்குப் பொருளுண்டு.பேராயக்(காங்.)கட்சியில் சில தலைவர்களைத் தீவிரவாதிகளாகக் குறிப்பிட்டுள்ள வரலாறு உண்டு. பிறரை இதனால் மிதவாதிகள் என்றனர். நாம் தவறாகப் புரிந்து கொண்டதை மாற்றி, முனைப்பான வாதமே தீவிரவாதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தீவிர நிலையில் இருந்து மாறித் தன் கொள்கைக்காக ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்று சொல்பவனே பயங்கரவாதி என்றும் அவ்வாறு ஆயுதத்தைக் கையில் எடுப்பவனே வன்முறையாளன் அல்லது கொடுங்கோலன் என்பதைப் புரிந்து கொள்ள  வேண்டும். 
வழக்கில் வாதிடுபவரை வாதி என்றும் எதிர் வழக்காளரை எதிர்வாதி என்றும் கூறுகின்றோம். தீவிரவாதி என்பது தவறென்றால் இதுவும் தவறுதான். எந்த அகராதியை எடுத்துப் பார்த்தாலும் வாதி என்பது தவறாகக் குறிக்கப்பெறவில்லை. எனவே தீவிர வாத விளக்கத்தை வன்முறைச் செயலாகக் கருதுவது வன்முறையாகும் என்பதை உணர வேண்டும். இத்தகைய சொல் விளக்கத்தைக் கருத்து விளக்கத்தால் மறுக்க வாய்ப்பிருந்தால் மறுக்கலாம். மாறாக வழக்கு தொடுப்பது என்பது வன்முறைச் செயலாகும்.
 13.தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?
 ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் அனைவரும் ஒரே கட்சியினராகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு கட்சியினராக இருப்பதும் இயற்கைதான். பேராயக்(காங்.)கட்சித் தலைவரான குமரி அனந்தன் மகள் தமிழிசை பா.ச.க.கட்சியில் இருப்பதுபோல் அவரது மகன் சுகநாதன் அன்னைக்கு எதிரான கருத்து கொண்டிருந்தால் அஃது இயற்கையே!
கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் பா.ச.க தலைவர் தமிழிசை செளந்தரராசன், செய்தியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது, பா.ச.க. தொண்டர்கள் பலரும் இருந்துள்ளனர். அதுபொழுது, அவரது மகன் மருத்துவர் சுகநாதன் பா.ச.க.விற்கு எதிராக / பா.ச.க. ஒழிக என – முழக்கமிட்டதாகவும் அவரைப் பா.ச.க. தொண்டர்கள் அப்புறப்படுத்தியதாகவும் செய்தி வந்தது.
இது குறித்து ஊடகங்கள் எழுதியதற்காகத் தமிழிசை, குடும்ப நிகழ்வை அரசியலாக்குவதாகக் குறிப்பிட்டு வேதனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசைக்கு எதிரில் பா.ச.க.விற்கு எதிரான முழக்கமிட்ட    ஆராய்ச்சி மாணவி சோபியாவின் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்பொழுது வாளாவிருப்பது ஏன் என்பது பலரும் தொடுக்கும் வினா. இதனால் தன் கட்சிப்பதவிக்கு ஏதும் இடர் வருமோ எனத் தமிழிசைக்குக் கவலை. கட்சியினரிடம், முதலில் குறிப்பிட்டதுபோல் மாறுபட்ட அரசியல் கருத்து என்பது இயல்பானது என்றுதான் அவர் விளக்க வேண்டும். மாறாகப் பிறரைக் கண்டித்துப் பயனில்லை.
இதனைக் குடும்ப நிகழ்வாகக் கூறுகிறார். நான்கு சுவர்களுக்குள் நடந்திருந்தால் குடும்ப நிகழ்வாகக் கருதலாம். ஆனால், மக்கள் கூடும் பொதுவெளியில் நிகழ்ந்துள்ளது. மேலும் அவரது மகன் சிறுவனும் அல்லன், பாமரனும் அல்லன்; மருத்துவர். சிறுபிள்ளைத் தனமாக அவர் சினந்து கத்தினார் என்பது ஏற்பதற்கில்லை. மாணவி சோபியா மீது நடவடிக்கை எடுத்த இவர் மருத்துவ மகன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்பது இயல்புதான். இக்கருத்தினைக் கண்டுங் காணாமல் ஒதுக்கியிருக்க வேண்டும். மாறாகச் சப்பைக்கட்டுக் கட்டிக் கண்டனம் தெரிவிக்கக் கூடாது.
குடும்பத்திற்கு வெளியே நடக்கும் எந்நிகழ்வும் குடும்ப நிகழ்வாகாது என்பதைத் தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

எங்களுக்காக உழைப்பார் உண்டோ!? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

எங்களுக்காக உழைப்பார்உண்டோ!?
உழைத்தோம்
உழுதோம்
உணவின்றி
வாடுகிறோம்

உழைத்தோம்
நெய்தோம்
துணியின்றி
ஏங்குகிறோம்

உழைத்தோம்
கட்டினோம்
வீடுஇன்றி
அலைகிறோம்

உழைத்தோம்
பிறருண்ண
பிறருடுக்க
பிறர்வசிக்க

எங்களுக்கு
எல்லாம்
கிடைக்க
உழைப்பார்
உண்டோ!?
இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தேர்தல் கட்டுரைகள் ஐந்து - இலக்குவனார் திருவள்ளுவன்




தேர்தல் கட்டுரைகள் ஐந்து 
- இலக்குவனார் திருவள்ளுவன்





வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்



 இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்


.தி.மு.. ஆட்சியைக் கலைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்


தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல்இலக்குவனார் திருவள்ளுவன்


தேர்தல் கணக்குகள் சரியே! விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்






ஞாயிறு, 31 டிசம்பர், 2017

நடைமுறைப் புத்தாண்டில் நனிசிறந்து வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்


எல்லா நாளும் ஒரு நாளே!
இன்பமும் துன்பமும் வரு நாளே!
இன்பம் வந்தால் மயங்கா தீர்!
துன்பம் கண்டால் துவளா தீர்!
பிறர் துன்பம் நீங்க உதவிடு வீர்!
அவர்இன்பம் காண முயன்றிடு வீர்!
மொழிச் சிதைப்பரை ஒதுக்கிடு வீர்!
இனக்கொலைஞரை ஒழித்திடு வீர்!
சாதிக் கொலைகள் இல்லாத
சமயச் சண்டை மறைந்திட்ட
ஏழ்மை எங்கும் காணாத
நன்னாள்தானே எந்நாளும்!
நாளும் மாறும் நாளில் இல்லை,
உயர்வும் புகழும் வாழும் முறையும்!
அல்லன நீக்கி நல்லன எண்ணில்
ஒவ்வொரு நாளும் புது நாளே!
இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய், 21 நவம்பர், 2017

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

     19 நவம்பர் 2017      கருத்திற்காக..


இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3

எழுத்து நெறி :
  மொழியின் வாழ்வு எழுத்தில்தான் உள்ளது. எழுத்தைச் சிதைக்கும் பொழுது அம்மொழியும் அம்மொழி இலக்கியங்களும் சிதைந்து அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது என்பதை ஓயாமல் உணர்த்தியவர் பேராசிரியர் இலக்குவனார். “ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்தியமொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்படவேண்டும் என விதிக்கும் நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும் தடுக்கவேண்டும்” என எழுதியும் பேசியும் வந்தார். இன்றைக்கு  அயல்மொழி எழுத்துக் கலப்பும்  அதை விரைவு படுத்தும் கிரந்தத்திணிப்பும  மிகுதியாக நடைபெறுகின்றன. எனவே, நாம் நம் எழுத்தைக் காத்து, மொழியைக்காத்து, இனத்தைக் காப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
பயன்பாட்டு நெறி :
 கல்வி மொழியாகவும் கலை மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இறை மொழியாகவும் அனைத்துநிலை மொழியாகவும் தமிழ்  பயன்படுமொழியாக அமைந்தால்தான் இவ்விலக்கை நாம் அடைய முடியும் என்பதையும் பேராசிரியர் இலக்குவனார் வலியுறுத்தத் தவறவில்லை. இவற்றை நிறைவேற்றவே தமிழ்  உரிமைப் பெருநடைப் பயணத்தை அமைத்து அதனால் பாதுகாப்புச் சட்டப்படிச் சிறை சென்றது மூலம் தம் சொல்லும் செயலம் தமிழ்நலம் சார்ந்தனவே  என்பதை மெய்ப்பித்தவர் பேராசிரியர் இலக்குவனார். ஊடக மொழியாகவும் பிற பயன்பாட்டு மொழியாகவும் தமிழே இருக்க  வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனார் காட்டும் பயன்பாட்டு நெறியாகும்.
உரிமை நெறி :
  தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமையும் முதன்மையும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் மத்திய ஆட்சியிலும் சமநிலை உரிமை பெற்ற மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனாரின் பெருவிழைவு. ஆட்சிமொழி, பணித்தேர்வு மொழி, நாடாளுமன்ற மொழி, உச்ச நீதிமன்ற மொழி, அறிவியல் துறைகளின் மொழி என இந்தியும் ஆங்கிலமும் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் தமிழும் முழு உரிமையுடன் வீற்றிருக்க வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனாரது முழக்கம்.
நூல் நெறி :
 வாழ்வியல் நூலாம் தொல்காப்பியத்தையும், வாழ்க்கைநெறி நூலாம் திருக்குறளையும் கண்களாகக் கொண்டு போற்றி முழுமையாய்ப் படித்துப் பின்பற்றி வாழவேண்டும்; சங்கஇலக்கியக் காலம் நம்பொற்காலம். சங்கஇலக்கியங்களை மக்களிடையே பரப்பவேண்டும் என்பனவும் பேராசிரியரின் பேரவா. தமிழக வரலாறு எழுதுவோர் தமிழர் கருவூலமாக அமைந்துள்ள தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும் என்பதைப் பேராசிரியர் இலக்குவனார் நமக்கு இட்ட கட்டளையாகக் கொண்டு வரலாற்றுப் பாடத்திட்டங்களில் தொல்காப்பியத்தையும் பிற சங்கஇலக்கிய வரலாற்றுச் செய்திகளையும்   சேர்க்க வேண்டும்.
 புதுக்கவிதை என்ற பெயரிலும் குறும்பாக்கள் (ஐக்கூ) என்ற முறையிலும் உண்மைச் சிறப்பை உணர்த்தாத, தவறான தகவல்கள் நிறைந்த  மரபு மீறிய தமிழ் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பாடல்கள் பெருகுகின்றன. பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது.  நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும் என்னும் பேராசிரியர் இலக்குவனார் கூறும் நூல் நெறியைப் பின்பற்றினால் பண்பாட்டைச் சிதைக்காக அறிவு வளம் நிறைந்த இலக்கியங்கள் பெருகும்.
போராட்ட நெறி :
  இன்றைக்கு அரச வன்முறை என்பதே எல்லா  நாடுகளிலும் பெருகி வருகின்றது. வன்முறையை  ஒடுக்குவதாகக் கூறி, மக்களின் உரிமைகளுக்குக்  குரல் கொடுப்போரை  அழிப்பதற்கு அரசுகளே கொடுங்கோல் முறையில் ஈடுபடுகின்றன. மக்களாட்சியில் கிளர்ச்சி என்பது நோய்க்கு மருந்து போன்றதாகும். ஆட்சியாளரின் பொறுப்பை உணர்வதற்குக் கிளர்ச்சிகள்தாம் கை கண்ட மருந்தாய் உலகம் முழுவதும் காணப்பெறுகின்றன. எனவே, கிளர்ச்சிகளுக்கு எதிராக அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தக்கூடாது. கிளர்ச்சிகளுக்குக் காரணமானவற்றை நீக்கவேண்டும். அவ்வாறு நீக்க முன்வந்தால் கிளர்ச்சியாளர்கள் அரசின் உறுதிமொழிகளை  ஏற்றுப் போராட்டங்களைக் கைவிடவேண்டும் என்ற பேராசிரியரின் அறிவுரையை அரசுகள் பின்பற்றினால், ஆட்சியில் குறைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடக்குமுறையின்றி நீக்கும் நல்லரசுகள் அல்லவா எங்கும் கோலோச்சும்.
கல்வி நெறி:
  தமிழ்நாட்டில் தமிழ்மட்டுமே எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்திப் போராடியவர் பேராசிரியர் இலக்குவனார்.  பாடவழிக்குத் தெரிவே இல்லாமல் தமிழ் மட்டுமே பாடமொழியாக இருக்க வேண்டும் என வழி கூறியவர் பேராசிரியர் இலக்குவனார். ”தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், – இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் -தோன்றும் நிலை ஏற்படவில்லை.  தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.  ஆதலின் ஆங்கிலம் அகன்றால்  அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும்.  பிற நாடுகளைப் போன்றே நம் நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும்.  அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும் என்பதை நாம் உணர்ந்து தமிழையே என்றும் எங்கும் பயன்படுத்தினால்தான் நாம் உலக அளவில் முன்னணியில் இருப்போம்” என்னும் பேராசிரியர் இலக்குவனாரின் கல்வி நெறியைப் பின்பற்றினால் நாம் உலகின் முன்னரங்கில் இருப்போம் அல்லவா?
காப்பு நெறி :
  பிற மொழித்திணிப்புகளில் இருந்து தமிழைக்காக்கத்  தம் வாழ்வையே போர்க்களமாக ஆக்கியவர்  பேராசிரியர் இலக்குவனார். இந்தியைத் திணிக்கவில்லை எனக்  கூறிக்கொண்டே இந்தியையும் அதன் வழி சமசுகிருதத்தையும் மத்திய அரசு திணித்துக் கொண்டுள்ளது.  இந்தித் திணிப்பிற்கு எதிரான போர்த்தளபதியாக விளங்கிய  பேராசிரியர் இலக்குவனார், ”எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்; மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும். தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். உண்ணும் உணவினும் உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும்”  என நம் கடமையை உணர்த்திச் சென்றுள்ளார். இந்தித் திணிப்பு மட்டுமல்ல! தனித்து வாழக்கூடிய நாம் பல வகைகளில பிற மொழிகளின் அடிமையாக விளங்குகிறோம். அவற்றிற்கு எதிராகவும் பேராசிரியர் இலக்குவனார் தொடர்ந்து போராடி உள்ளார். ”தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி ஆங்கிலமாம், சமயமொழி ஆரியமாம், பாட்டுமொழி தெலுங்காம், வட்டாரமொழி தமிழாம். என்னே விந்தை! தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும். தமிழர்க்குத் தேசிய மொழியும், கல்வி மொழியும், தொடர்பு மொழியும், பாட்டு மொழியும் தமிழாகவே இருத்தல் வேண்டும்” எனப் பிறமொழிகளில் இருந்து தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும்  காக்கப் பேராசிரியர் இலக்குவனார் நமக்குக் காட்டிய காப்பு நெறியைப்  பின்பற்றினால் தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின்  முப்பத்தொன்பதாம் நினைவு நாளில்  வெளியானது. நட்பு :  03/09/2012 )

புதன், 15 நவம்பர், 2017

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3


சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
தமிழ் உணர்விற்கு வந்ததடா பஞ்சம்
என்பதுதான் இன்றைய தமிழ்நாட்டவர் நிலை. எனினும் பல தரப்பு மக்களிடையேயும் நம்நாடு தமிழ்நாடு நாமெல்லாம் தமிழ் மக்கள் என்ற எண்ணம் அரும்பி வருகிறது. எனவே,
எண்ணி மகிழுதடா நெஞ்சம்
தமிழ் உணர்வு மலருதடா கொஞ்சம்
எனச் சிறிது மகிழ்ச்சி கொள்ளலாம். உலகின் முதல் இனம் நம் தமிழினம், உலக முதல் மொழி நம் தமிழ் மொழி என்றெல்லாம் நாம் பெருமை பேசிக் கொண்டாலும்  கல்வி முதலான அனைத்திலும் நாம் அடிமைப்பட்டே கிடக்கின்றோம். அடிமைத் தளையை அறுக்கத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இக்குரலின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டாலும், பெரிய கட்சித் தலைமைகளின் கொத்தடிமைகளாகவே விளங்குகின்றனர். தமிழ்த்தேசிய வாணர்களும் கட்சி அரசியல் ஈர்ப்பாலும் தோழமைக் கட்சிகளின் பதவி நலம் சார்ந்த பிணைப்புகளாலும் உட்பகையினரிடமே உறவாடி வருகின்றனர். இதனால் உண்மையாகவே தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்க முயல்வோர் பின்னடைவையே சந்திக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். தமிழ் மக்களாகிய நாம், நம் நாட்டிலும் பூமிப்பந்தின் பிற பகுதிகளிலும் முழு உரிமையோடு வாழ வேண்டும். இதற்கு இன்று வழிகாட்டக்கூடியவர்களோ மாணாக்கர்களையும் இளைஞர்களையும் தலைமை ஏற்று நடத்திச் செல்பவர்களோ யாருமில்லை. ஆனால், தமிழ்த்தேசிய உணர்வைப் பரப்பித் தமிழ்ப்போராளியாக வாழ்ந்த பேராசிரியர்  முனைவர் சி.இலக்குவனாரின் கருத்துகளைப் பின்பற்றி நடந்தால் நாம் எளிதில் வெற்றி காண முடியும். பேராசிரியர் இலக்குவனார் நமக்குத் தந்த அறிவுரைகளே இலக்குவம் ஆகும். இலக்குவ நெறியில் நாம் வாழ்ந்தால் தமிழ் மக்கள் உரிமை வாழ்வுடன் உயர்ந்தோங்கித் திகழ்வர். தமிழ் மக்களும் அவர்களை வழி நடத்திச் செல்ல விரும்பும் தலைவர்களும் செல்ல வேண்டிய இலக்குவ நெறியில் ஒரு பகுதியை நாம் காண்போம்.
தேசிய நெறி :
  பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் ஒரு புறம்,  பிற அறிஞர்கள் வழியில் இலக்கியப் பணியில் ஈடுபட்டாலும் மறுபுறம் தமிழ்த்தேசிய அறிஞராகத் திகழ்ந்தார்.  நாம், மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழரே என்பதை வலியுறுத்தினார்.  இந்தியமும் திராவிடமும் பேசப்பட்ட காலத்தில்
தமிழரின் அரசை ஆக்குவோம்! – இனித்
 தமிழகம் சிதைவதைத் தாக்குவோம்!
 தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்
 தரணியோர் மதித்திடச் செய்குவோம்!
என்றும்
 உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா!
 உன்றன் நாடும் உரிமை பெற்றிட உழைத்திடு தமிழா!
என்றும் எழுதி வந்தார்.
  இந்திய விடுதலைக்குப் பின்னரும்தமிழர்க்குத் தேசிய மொழி தமிழே என்பதை வலியுறுத்தி வந்தார். இவ்வுணர்வை அனைவரும் பெற்றால்தான் தமிழர் உலகெங்கும் பாதுகாப்புடன் வாழ இயலும். நம் கடமை, நம் தேசியம் தமிழே என்பதை எல்லா வகையாலும் எல்லார்க்கும் உணர்த்த வேண்டுவதே!
அரசு நெறி :
 பேராசிரியர் இலக்குவனார்  தனியுரிமை உடைய மொழி வழித் தேசியக் கூட்டரசே நமக்குத் தேவை என்றும் மொழி  வழி மாநிலங்கள் அல்ல என்பதையும் வலியுறுத்தி வந்தார். அவ்வப்பொழுது எழும்பும், மாநிலத்தில் தன்னாட்சி மையத்தில் கூட்டாட்சி என்னும் வெற்றுக்குரலால் எள்ளளவும் பயனில்லை. ஆசியக் கூட்டரசு, உலகக் கூட்டரசு என்னும் படிநிலைகள் வருவதற்காக  இந்தியக் கூட்டரசு வேண்டும் என்ற பேராசிரியர் இலக்குவனார்  வழியில்  தேசிய  இனங்களின் கூட்டரசை நாம் வலியுறுத்திப் பெற்றால்தான் நம் துணைக்கண்டம் முழுவதும் அமைதி தவழும். நெடுங்காலம் தீராமல் உள்ள காசுமீர்ச்சிக்கல் போன்றவை எல்லாம் காணாமல் போய்விடும்
தெரிவு நெறி :
 அயல்மொழிக் கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்த்திப் பிறமொழிக் கலப்பு இன்றியே எழுதியும் பேசியும், இருக்கின்ற தமிழ்ப்பரப்பையாவது கட்டிக்காக்க வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனார் வேண்டுகோள்.  இதற்கு அரணான அரசு அமைய வேண்டும் என்பதற்காகத்தான் செந்தமிழைக் காப்போர்க்கே தேர்தலில் எம் வாக்கு என்பதே மக்களின் முடிவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ் காக்கும் உண்மையான தமிழார்வலர்களைத்தான் நாம் தேர்ந்து எடுக்க வேண்டுமே யன்றித் தமிழால் தங்களை மட்டும் உயர்த்திக் கொண்டு தமிழைப் புறக்கணிப்பவர்களை அல்ல. எனவேதான் தமிழ்ப்பகைவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என்றார்.
தூய்மை நெறி :
  தமிழின் பேரால் ஆட்சிக்கட்டிலில் ஏறுபவர்கள் காலத்தில்தான் முன்பைவிட மிகுதியாகத் தமிழ்க் கொலைகள் நடைபெறுகின்றன. திரைப்படம், இதழ்கள் என அனைத்து ஊடகங்களிலும் நடக்கும் தமிழ்க் கொலைகளுடன் இப்பொழுது இணையத்தில் நடைபெறும் தமிழ்க் கொலைகள் கணக்கிலடங்கா.  ஒரு மொழியழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகிறது என்பதைச் சான்றுகளுடன் உணர்த்தியவர் பேராசிரியர் இலக்குவனார். அதே நேரம் ஒரு மொழி பேசுநர் உரிமை வாழ்வு வாழாவிடில் அம்மொழியின் பயன்பாடு குறைந்து அம் மொழி அழியும்  என்பதையும் அவர் விளக்கி உள்ளார். தமிழர் உரிமைவாழ்வில் உயர்ந்த நிலையில்  இருந்தால்தான் தமிழ் வாழும் என்பதை வலியுறுத்தியவர் பேராசிரியர் இலக்குவனார். “தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்; தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்” என்னும் பேராசிரியர் இலக்குவனார் முழக்கத்தை நாம் மறவாமல் தவறாமல் பின்பற்றி நடந்தால் உலகெங்கும் தமிழும் வாழும்! தமிழரும் வாழ்வர்! உரிமைவாழ்வினைப் பெறாததால்தான், நம்மால் தமிழ் ஈழப்படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை என்பதையும் ஈழத்தமிழரசை உலகம்  ஏற்கும்படிச் செய்ய இயலவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே நாம் பிழையின்றியும் பிறமொழிக் கலப்பின்றியும் பேசி உழைப்பால் உயர்ந்த செல்வ நிலையை அடைந்து உரிமை வாழ்வைப் பெற வேண்டும்.
  • (தொடரும்)
  • இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின்  முப்பத்தொன்பதாம் நினைவு நாளில்  வெளியானது. நட்பு :  03/09/2012 )