59vandavasi-vasakarvattam02

புத்தகங்கள்தான் சமூக அக்கறையையும்

பகுத்தறிவையும் தூண்டுகின்றன.         

 வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில்

   கரூர் வைசியா வங்கி மேலாளர் பேச்சு 

             வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மார்கழி 5(திசம்பர் 20) அன்று நடைபெற்ற ‘சந்திப்பு’ சிறப்பு நிகழ்வில், ஒவ்வொரு மனிதனும் சமூக அக்கறையுடன் இருக்கவும், பகுத்தறிந்து வாழ்க்கையைச் சிறப்பாக நடத்தவும் புத்தகங்களே தூண்டுகின்றன என்று கரூர் வைசியா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசினார்.
       இவ்விழாவிற்கு, நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை நல்நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் பெ.பார்த்திபன், எசு.இராமமூர்த்தி, மூன்றாம் நிலை நூலகர் ச.சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக நகர்மன்ற உறுப்பினர் சை.சையது அப்துல் கரீம், கரூர் வைசியா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
     கரூர் வைசியா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசும்போது, இன்றைக்கு மனிதர்களிடையே பேராசையும், தீவிரவாதமும் பெருகிப்போய் கொண்டிருக்கின்றன. பிற மனிதர்கள் மேல் அன்பு செய்யவும் முடியாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
   எப்போதும் தேவையறிந்து செலவு செய்ய வேண்டும். நம் வருமானத்தின் தன்மைகேற்ப கடன் பெறும்போதுதான், நம்மால் திருப்பிச் செலுத்திட முடியும். வரவு இன்றிச் செலவு செய்யும்போது பெருந்துயரத்திற்கு ஆளாக நேரிடும்.
   நமது குழந்தைகள் இன்று அலைபேசி, கணிணி, காணாட்டம்(வீ டியோ கேம்) போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களைச் சமூக விழிப்புணர்வுமிக்க குழந்தைகளாக மாற்றிட புத்தங்களைப் படித்திட வையுங்கள். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே என்று குறிப்பிட்டார்.
       உரூ.1000/- செலுத்தி 156 மற்றும் 157-ஆவது நூலகப் புரவலர்களாக மேலாளர் பா.சுந்தரமூர்த்தி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பொன்.தயாளன் ஆகியோர் இணைந்தனர்.
நிறைவாக, அலுவலக உதவியாளர் மு.இராசேந்திரன் நன்றி கூறினார்.
வங்கி மேலாளர் பா.சுந்தரமூர்த்திக்கு நகரமன்ற உறுப்பினர் சை.சையது அப்துல் கரீம் நினைவளிப்பு வழங்குகிறார். அருகில் நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு, கிளை நல்நூலகர் இரா.பழனி ஆகியோர்
வங்கி மேலாளர் பா.சுந்தரமூர்த்திக்கு நகரமன்ற உறுப்பினர் சை.சையது அப்துல் கரீம் நினைவளிப்பு வழங்குகிறார். அருகில் நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு, கிளை நல்நூலகர் இரா.பழனி ஆகியோர்