ஞாயிறு, 28 டிசம்பர், 2014

கடன் திரும்பப்பெற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு

SBI-logo01

தேவதானப்பட்டிப் பகுதில்

கறவைமாட்டுக்கடன்

திரும்பப்பெற முடியாமல்

வங்கி அதிகாரிகள் தவிப்பு

தேவதானப்பட்டிப் பகுதியில் வழங்கப்பட்ட கறவைமாட்டுக்கடனைத் திரும்பப் பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறிவருகிறார்கள்.
தேசியமயமாக்கப்பட்ட பாரதஅரசு வங்கிகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி, செயமங்கலம், குள்ளப்புரம் முதலான இடங்களில் உள்ள பாரத அரசு வங்கிக்கிளைகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வங்கியிலும் தொண்டுநிறுவனங்களின் மேற்பார்வையில்தான் கடன் வழங்கப்பட்டது. அப்போது தொண்டுநிறுவனத்தினரும் வங்கி அதிகாரிகளும் இணைந்து புனையாளாக (பினாமியாக ஆட்களை) வைத்துப் பல கோடி உரூபாய் கடன் வழங்கினார்கள்.
உணவுப்பொருள் அட்டையின் படி, கடவுச்சீட்டு அளவுப்படம் ஆகியவற்றை மட்டும் வாங்கி அவர்கள் பெயரில் கணக்கு தொடங்கிக் கடன் தருவதாகக்கூறி வாடிக்கையாளர்களை அனுப்பி உள்ளனர். அதன்பின்னர் தொண்டுநிறுவன நிருவாகிகளும் வங்கி அதிகாரிகளும் இணைந்து அந்தக்கடனை எடுத்துள்ளார்கள்.
59karavaimaadu01
இதில் ஒரு சில வங்கி மேலாளர்கள் போலியாகக் கணக்கைத் தொடங்கி அதில் கடனைத் திருப்பிச்செலுத்தியதாக போலியாக உயர்அதிகாரிகளுக்குக் கணக்கு காட்டியுள்ளனர். அடுத்து வந்த வங்கி மேலாளர்கள் கணக்கைச் சரிபார்த்ததில் பலகோடி மோசடிநடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல மகளிர் தன்னுதவிக்குழுக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வழங்கப்பட்டது. அதில்   ஒருவரின் உணவுப்பொருள் அட்டையை இணைத்தும் மற்றொருவரின்ஒளிப்படத்தை ஒட்டியும் கடன் அளித்துள்ளார்கள்.
இதில் பெரும்பாலான போலித்தொண்டுநிறுவனங்கள் பலகோடிகளை மாற்றுப்பெயரில் பெற்றுக்கொண்டன. தற்பொழுது கடன் வழங்கிய வங்கி அதிகாரிகளும் இல்லை. தொண்டு நிறுவனங்களும் இல்லை. இதனால் பலகோடி உரூபாய் வங்கிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஒரு சில வங்கிகள் தங்களுடைய எல்லையைத்தாண்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி, பழைய வத்தலக்குண்டு, கரூர், கடமலை-மயிலை, கூடலூர், கம்பம் பகுதிகளிலும் கடன் வழங்கியுள்ளார்கள். தற்பொழுது கடன் வாங்கியவர்கள் பெயரில் வங்கி சார்பாகக் கேட்பு மடல் அனுப்பப்பட்டபோது வாங்காத கடனுக்கு வங்கி அதிகாரிகள் கடன்கேட்பு மடல் அனுப்பியதைக் கண்டு உயர்அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளனர். இதில் சில வங்கி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள்.
தற்பொழுது தேவதானப்பட்டி, செயமங்கலம், குள்ளப்புரம் பாரத அரசு வங்கியில் மறு ஆய்வும், தணிக்கையும் மேற்கொண்டால் பல கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரியவரும்.
மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்களை அரசு தண்டிக்க முன்வருமா?
அரசின் திட்டங்கள் உண்மையான மக்களுக்குப் பயன் தரும் வகையில் செயல்படுமா?
vaigai_aneesu_name


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக