http://www.ilakkuvanar.com/images/Ithazhkal/KuralNeri01.jpg
 குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் வார இதழாக மாற்றக் கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா என்றெல்லாம் வேண்டினர். வாரஇதழாக மாற்றுவதைவிட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இதுகுறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு:
“நற்றமிழில் உரையாட வேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால்கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகின்றது.
 நமக்கோ நாளும் நாளும் செந்தமிழ் சாகடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு பாழும் வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்க இயலவில்லை. ‘மெல்லத் தமிழ் இனிச்சாகும்’ எனும் பேதை மொழியை நாம் அணுவாகச் செத்தேனும் பொய்யாக்க வேண்டும் என்று உறுதிபூண்டு விட்டோம். உள்ளம் உடைமை உடைமை எனும் திருவள்ளுவரின் திருவாய் மொழிக்கேற்ப உள்ள நாம் செந்தமிழ் காக்கும் பணியில் இச்செய்தியிதழை ஆளாக்க முற்பட்டு விட்டோம்.
 நாட்டு மக்களின் நல்லெண்ணம் நம்பால் உள்ளது எனும் துணிவுடையோம். தமிழ்க்காப்பு என்பது கட்சிகளுக்குஅப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது. ஆயினும் இன்று ஆளுங்கட்சியாம் காங்கிரசு இந்தி மொழித் திணிப்புக்கு உடந்தையா இருப்பதனால் தமிழ் காப்புக்கு உரிமை கொண்டாட இயலாது. இந்தி முதன்மை நாளும் நாளும் சுமத்தப்பட்டு வருகின்றது. இதனை அகற்றலே தமிழ்க்காப்பின் முதற்பணியாகும். உண்மைத் தமிழ்ப்பற்றுடைய காங்கிரசுக் கட்சியினர் உள்ளத்தால் நம் பக்கமேஇருப்பர்.”
குறள்நெறி நாளிதழ்: ஐப்பசி 16,1997: செவ்வாய்: 1.11.1966
- புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 46
52puthiyaparvai_ilakkuvanar_chirappithazh01
தரவு : பாபு கண்ணன்