மஞ்சளாறு அணையில்
தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு
தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆறு
அணையில் தற்பொழுது 44 அடி தண்ணீர் உள்ளது. மஞ்சளாறு அணையிலிருந்து
திறந்துவிடப்படும் தண்ணீரானது தேனி, திண்டுக்கல்; மாவட்ட மக்களின்
வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில
மாதங்களுக்கு முன்னர்ப் பெய்த கனமழையை ஒட்டி மஞ்சளாறு அணை திறக்கப்பட்டது.
இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள்,
ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்நிலையில் தலையாறு, மூலையாறு,
வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது.
தற்பொழுது மலைப்பகுதியில் போதிய மழைபெய்யவில்லை.
மஞ்சளாறு அணையின் நீரை நம்பி
தேவதானப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, கெங்குவார்பட்டி,
கெ.கல்லுப்பட்டி, குள்ளப்புரம் பகுதியில் உள்ள உழவர்கள் கரும்பு, நெல்,
வாழை போன்ற நீண்ட காலப்பயிர்களைப் பயிரிட்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 3
வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும்
மேல் உள்ள தென்னை மரங்கள் கருகியது.
இந்நிலையில் மஞ்சளாறு அணையில் தொடர்ந்து
தண்ணீர் திறந்துவிடப்படுவதால் தேவதானப்பட்டி பகுதியில் பயிரிட்ட நீண்ட
காலப்பயிர்களுக்குப் போதிய தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே மஞ்சளாறு அணையில் திறந்துவிடும்
தண்ணீரை நிறுத்தவேண்டும் என இப்பகுதி உழவர்கள் மாவட்ட நிருவாகத்திடம்
கோரிக்கை வைக்கின்றனர். இதன் தொடர்பாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்
முறையீடும் கொடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக