தேனி மாவட்டத்தில்
நெடுஞ்சாலைத்துறை இசைவில்லாமல்
தோண்டப்படும் சாலைகள்
தேவதானப்பட்டிப் பகுதியில் தனியார்
தோட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்குச் சாலைகளில்
அகழ்பொறிகளைக்கொண்டு தோண்டுவதால் சாலைகள் விரைவில் பழுதாகின்றன.
தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம்
ஊராட்சிப்பகுதியில் குளம், ஏரிகளின் அருகில் வேளாண் நிலங்களை வாங்கித்
தனியார் நிறுவனங்கள் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்துள்ளனர்; தங்களது
தோட்டங்களுக்கும் கனிமநீர்த்தொழிலுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர்.
இதற்கென இரவோடு இரவாகச் சாலையைத் தோண்டிக், குழாய்யைகளைப் பதித்து
விடுகின்றனர். மிகுபளு ஊர்திகள் செல்லும்போது குழாய்கள் உடைப்பு
ஏற்படுகிறது. இவ்வாறு குழாய்கள் உடைப்பு ஏற்படும்பொழுது தண்ணீர் கசிந்து
சாலைகள் சீக்கிரம் பழுதாகின்றன.
தற்பொழுது நெடுஞ்சாலைத்துறை
இசைவில்லாமல், அகழ்பொறிகளை(சேசிபி பொக்லைன்)க்கொண்டு சாலையை உடைத்துக்
குழாய்களை அமைத்து வருகின்றனர். இதனால் நல்ல நிலைமையில் உள்ள சாலைகள் சேதம்
அடைகின்றன. அப்பகுதியில் செல்பவர்களும், தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியம் அல்லது ஊராட்சி சார்பில் சாலையைத் தோன்டுகின்றனர் என நினைத்து
விட்டுவிடுகின்றனர். இதனைப்பயன்படுத்தி இப்பொழுது பகல்நேரத்திலேயே சாலையைத்
தோண்டிக் குழாய்களைப் பதித்துவிட்டு அப்படியே விட்டு
விட்டுச்செல்கின்றனர்.
இவ்வாறு சாலைகள் தோண்டப்படுவதால் அப்பகுதி
மேடாகி வருகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஆங்காங்கே
வேகத்தடை போன்று இருப்பதால் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆனால்,
நெடுஞ்சாலைத்துறையினர் இசைவில்லாமல் சாலையைத் தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கத் தயங்குகிறது.
எனவே நல்ல நிலையில் உள்ள சாலையை தங்கள்
சொந்தப்பயன்பாட்டிற்காகத் தோண்டுபவர்கள் மீது மாவட்ட நிருவாகம் நடவடிக்கை
எடுக்கவேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக