மண்டையோட்டுப் போராட்டம்
மண்டையோட்டுப் போராட்டம்

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அகழ்களங்களை(கல்குவாரிகளை) மூடுவதற்குப் புதுமைப்போராட்டம்

  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள மல்லனம்பட்டி ஊராட்சிக்குற்பட்ட அழகாபுரி, பூசாரிபட்டி, மல்லனம்பட்டி ஆகிய ஊர்களில் இயங்கும் அகழ்களங்களால் (கல்குவாரிகளால்) பாதிப்படைந்த மக்கள் மண்டை ஓட்டை வைத்து அகழ்களங்களை முற்றுகையிட்டனர். மல்லனம்பட்டி ஊராட்சியில் 3 அகழ்களங்களும், கல் உடைப்பான்களும் இயங்குகின்றன.. உரிமை நிலங்களை விலைக்கு வாங்கி அகழ்களங்களை இயக்கிவருகிறார்கள். இப்பகுதி வேளாண்மை செழித்த பகுதியாகும். மேலும் நிலக்கோட்டை பூச் சந்தைக்கு 50 % பூக்களை இப்பகுதியில் விளைவித்து ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அகழ்களங்களுக்கான உரிமத்தைப் பெற்று சிறிய அளவில் கற்களை உடைத்து 1 அகழ்களம் இயங்கியுள்ளது. அதன்பின்னர்ப் படிப்படியாக 3 அகழ்களங்களுக்கு உரிமம் பெற்றுக் கற்சுரங்கங்களை அமைத்துள்ளனர். மேலும் அகழ்களங்களில் இருந்து வெளியேறும் கற்களைக் கல்லுடைப்பான்ர் கொண்டு உடைத்து சல்லிக்கற்களாகவும், துகள்களாகவும் விற்பனை செய்கின்றனர். அகழ்களங்களில் வெடிவைப்பதற்கு என்று உரிய நேரமும், அவ்வாறு வைக்க கூடிய வெடிபொருட்களுக்கு அளவும் உள்ளது. மேலும் அகழ்களங்களில் பூமிக்கடியில் சில குறிப்பிட்ட தொலைவுவரை தோண்டவேண்டும் என்றும் வலிமைவகை இயந்திரங்களைக்கொண்டு வெடிகள் வெடிக்கக்கூடாது என்றும் பல நிபந்தனைகள் உள்ளன. இவற்றைப் பொருட்படுத்தாமல் கடந்த 1 வருட காலமாக அளவுக்கதிகமான ஒலியுடன் வெடிகளை வைத்துப் பாறைகளை உடைத்து வருகின்றனர். இதனால் கற்கள் பறந்து அப்பகுதியில் உள்ளவர்கள் மேல் பட்டு பலர் காயம்பட்டும், சிலர் இறந்தும் உள்ளனர். அவர்கள் நேர்ச்சியில்(விபத்தில்) இறந்ததாக வழக்காக நிலக்கோட்டைக் காவல்துறையினர் பதிவு செய்துள்ளதால்,   இதன் தொடர்பாக அப்பகுதி மக்கள் முறையீடு அளித்தால், அதற்குச் செவிமடுப்பதில்லை. தொடர்ந்து அகழ்களங்கள் இயங்குவதால் அப்பகுதியில் வேளாண் நிலங்கள் பயன்படுத்தமுடியாமல் இருக்கின்றன. மேலும், பயிர்த்தொழிலுக்குத் தேவையான தண்ணீருக்கான ஆழ்துளைக்கிணறுகள் பாதிப்படைகின்றன. இவற்றைத்தவிர அகழ்களங்களின் அண்மையில் இரண்டு குளங்கள் உள்ளன. அந்தக் குளங்களில் தண்ணீர் தேங்கினால் அகழ்களங்களுக்கு இடையூறு எற்படும் எனக் கருதி இரண்டு குளங்களையும் தண்ணீர் தேங்கவிடாமல் இரவோடு இரவாக உடைத்துள்ளனர். இதனைக்கண்டித்து அந்தப்பகுதியைச்சேர்ந்த ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக மண்டை ஓட்டு, எலும்புடன் அகழ்களத்தை முற்றுகையிட்டனர்.
போதுமணி
  இதன் தொடர்பாக உலகநம்பி என்பவர் கூறுகையில், “மாவட்ட நிருவாகத்திடம் அகழ்களமாகிய கல்சுரங்கத்திற்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை அவற்றின் உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை.   எடுத்துக்காட்டாக, மல்லனம்பட்டி பகுதியில் 3 அகழ்களங்களிலும் கனிமவளத்துறையின் விதிமுறைகளை மீறி இரவு, பகலாக வெடிகள் வெடிக்கின்றனர. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வெடிகள் வெடிப்பதால் கற்கள் சிதறி இருவர் உயிரிழந்துள்ளனர். பலர் கண், தலை போன்றவை காயம்பட்டு உள்ளனர். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான குளத்தில் நீர்தேங்கவிடாமல் தடுத்து அப்பாவி உயிர்களைப் பலிவாங்கிய அகழ்களங்களை மூடவேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது துறையில் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.
போதுமணி
போதுமணி
கண்ணிழந்த இராமசாமி
கண்ணிழந்த இராமசாமி
போதுமணி என்பவர் கூறுகையில், மல்லனம்பட்டி ஊராட்சிப்பகுதியில் முளரி(ரோசா)ப்பூ, அரளிப்பூ, கோழிக்கொண்டை ஊசிப்பூ, மல்லிகைப்பூ, செம்பருத்தி, கனகாம்பரம் போன்றவற்றைப் பயிரிட்டு வருகிறோம். அகழ்களங்களினால் ஏற்படும் தூசிகள் பட்டு அறுவடை செய்யும் நிலையில் பூக்கள் நிறம்மாறி விடுகின்றன. இதனால் விற்பனை செய்யமுடியாமல் போகிறது. மேலும் வேளாண்மைக்கு வேண்டிய தண்ணீரை ஆழ்துளைக்கிணறு மூலம் எடுக்கிறோம். தொடர்ந்து நவீன இயந்திரங்களைக்கொண்டு கல்குவாரிகளின் பாறைகள் உடைப்பதால் போர்வெல்களில் தண்ணீர் வரவில்லை. எனவே கல்குவாரியை மூடவேண்டும். இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம் ” என்றார்.

இதே போல இராமசாமி என்பவர் கூறுகையில், “நான் அதிகாலையில் தோட்டத்தில் பூக்களைப்பறித்து நிலக்கோட்டைச் சந்தைக்கு அனுப்புவது வழக்கம். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மல்லிகைப்பூவைப் பறித்துக் கொண்டிருந்தபோது கற்சுரங்கத்தில் வைத்த வெடி என்னுடைய கண்ணிலும், தலையிலும் பட்டு இடது கண் பார்வை இழந்துள்ளேன். என்னைப்போன்று பலர் பாதிப்படைந்துள்ளனர்” என்றார்.59quary
  இவரைப் போல் பலர் பாதிப்படைந்துள்ளனர். எனவே மாவட்ட நிருவாகமும், கனிமவளத்துறையும் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடிய அகழ்களங்களை மூடவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.