ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதே
சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு
- காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -
அகநி வெளியீட்டகத்தின் சார்பில்
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் நடைபெற்ற ‘காதல் கவிதை’ நூல்
வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல்,
ஒருவரையொருவர் மனத்தாலும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னெடுத்துக்காட்டான
காதல் வாழ்க்கையாகும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார்.
இவ்விழாவிற்குத் தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர்
எழுதிய ‘ சிவ சிவக்கும் பிரியங்கள் ‘ காதல் கவிதை நூலை வந்தவாசி வட்டார
மருத்துவ அலுவலர் மருத்துவர் செ.வெங்கடெசன் வெளியிட, வந்தவாசி சுழற் சங்க
முன்னாள் தலைவர் கவிஞர் அ.ச.இசாக்கு பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப்
படிகளை நல்நூலகர் கு.இரா.பழனி,இலயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராசு,
நல்வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வெ.அரிகிருட்டிணன் ஆகியோர் பெற்றுக்
கொண்டனர்.
கவிதை நூலை அறிமுகம் செய்து
கவிஞர் மு.முருகேசு பேசும்போது, இன்றைக்கு எல்லாம் வேகமாய் மாறிவருகிற
சமூகத்தில் காதலும், காதலைப் பற்றிய புரிதலும்கூட மாறிப்போய் இருக்கிறது.
பார்த்தவுடன் காதல், பள்ளிப்பருவக் காதல் எனக் காதலை மலினப்படுத்தியதில்
திரைப்படங்களுக்கும் முதன்மைப் பங்கிருக்கிறது.
சமுதாய ஏற்றத் தாழ்வுகள், சாதி, மத
பிரிவினைகள் நீங்கிடக் ,காதல் திருமணங்கள் வழிவகுக்கும். ஆனால், காதல் என்ற
பெயரில் வெறும் உடல் மீதான பாலியல் கவர்ச்சி மட்டுமே முதன்மையாக முன்
நிற்கிறது. பதின்பருவ அகவையினைக் கடந்து, தனக்கென ஒரு வாழ்வை
அமைத்துக்கொள்ள முடியும் என்கிற பொழுதில், தன் இல்வாழ்க்கைக்கான துணையாக
ஒருவரை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்வதே உண்மையான காதலாகும். அத்தகைய
காதலுக்குப் பெற்றோர்கள் தடையாக இருக்காமல் காதலர்களைச் சேர்த்துவைக்க
வேண்டும். கவிஞர் வீ.சிவசங்கர் எழுதியுள்ள காதல் கவிதைகள் அத்தகைய உன்னதமான
காதலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கென அமைந்துள்ளன” என்று
குறிப்பிட்டார்.
நூலாசிரியர் கவிஞர் வீ.சிவசங்கர் ஏற்புரையாற்றினார்.
நிறைவாக, வி.பிரியா நன்றி கூறினார்.
[படக்
குறிப்பு : வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டில் அகநி
வெளியீட்டகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய 'சிவ
சிவக்கும் பிரியங்கள் ' காதல் கவிதை நூலை மருத்துவர் செ.வெங்கடெசன்
வெளியிட, கவிஞர் அ.ஐ.இசாக்கு பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். அருகில்,
நூலாசிரியர் கவிஞர் வீ.சிவசங்கர், கவிஞர் மு.முருகேசு,தொழிலதிபர்
இரா.சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக