செவ்வாய், 30 டிசம்பர், 2014

பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ


59kozhikondaipoo

தேனி மாவட்டத்தில்

விலை இல்லாததால்

பறிக்கப்படாமல் உள்ள

கோழிக்கொண்டைப் பூ – உழவர்கள் கவலை

  தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன.
   தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் பூ வகைகள் ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, சென்னை முதலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
   கடந்த 3 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பூப் பயிரிடலை விட்டு விட்டுத் தொழில்நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர் உழவர்கள். தற்பொழுது போதிய மழை பெய்ததால் பூ வகைகைளைப் பயிரிடத் தொடங்கிவிட்டனர்.
  குறுகிய காலமான இரண்டு அல்லது மூன்றுமாதங்களில் வளரும் பூ என்பதால் கோழிக்கொண்டைப்பூவை அதிக அளவில் உழவர்கள் பயிரிட்டனர். தற்பொழுது இப்பூவை அயிரைக்கல்(கிலோ) 10 முதல் 15 உரூபாய்க்கு வணிகர்கள் வாங்குகின்றனர். பூ பறிக்கக்கூடிய செலவுக்குக் கூடக் கட்டுப்படியாகவில்லை என்பதால் பூக்களை பறிக்காமல் அப்படியே தோட்டத்தில் செடியிலேயே விட்டுவிட்டனர்.
ஒரு சிலர் தங்கள் கால்நடைகளுக்கு உணவிற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை கிடைக்காததால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைஊசிப் பூ
பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைஊசிப் பூ

vaigai_aneesu_name


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக