ஒளிப்படம் எடுப்பதில் புதுமையை ச் செய்யவிரும்பும் கார்த்திகேயன்..
http://www.dinamalar.com/more_picture_html.asp?Nid=716554
செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனராக வேலை பார்ப்பவர்.
வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது.
இதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுடன் சென்று, அவர்கள் படமெடுக்கும் பாங்கினை மனதில் வாங்கி பதியவைத்துக்கொண்டே வந்தார்.
இதே போல தானும் ஒரு சொந்தமாக ஒரு கேமிரா வாங்கி நிறைய படங்கள் எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார்
சமீபத்தில் சொந்தமாக நிக்கான் டி.90 கேமிரா வாங்கினார், கேமிரா வாங்கிய அதிர்ஷ்டம் உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவைக் காண செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து மூன்று கோடி பேர் வருவார்கள் என்பதும், அவர்களில் வெளி உலகத்திற்கு தங்களை காட்டாமல் இருந்து வரும் நாகா சாமியார்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களும் இருப்பார்கள் என்பதும் விசேஷமாகும்.
இது சம்பந்தமான படங்களை எடுத்துக்கொண்டு," நான் எடுத்த படங்களை பாருங்கள், நன்றாக இருக்கிறதா என சொல்லுங்கள் என தயக்கத்துடன் காண்பித்தார்.,உண்மையிலேயே படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தன்.,ஒரு வித்தியாசமான கோணத்தில் படம் பிடிக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து தேர்வு செய்த படங்களை நமது பொக்கிஷம் பகுதியில் முதல் முறையாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கார்த்திகேயேனின் கும்பமேளா அனுபவங்கள் என்ற தலைப்பில் பிரசுரம் செய்திருந்தோம். கார்த்திகேயனுக்கு கடல் கடந்த பகுதிகளில் இருந்தெல்லாம் நல்ல வரவேற்பும், பாராட்டுக்களும் கிடைத்தது.
இதில் கார்த்திகேயேனுக்கு ரொம்பவே உற்சாகம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் அவருடனான சந்திப்பு நிகழ்ந்தது,
அதே தயக்கத்துடன் இப்போது ஒரு முயற்சி எடுத்துள்ளேன், பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.
பலரும் அறியாத பழங்கால இசைகளில் ஒன்று கைலாய இசை., சிவன் கோயில்களில் இரவு நேர சுவாமி புறப்பாட்டினை அறிவிக்கும் விதமாக, இந்த இசை முழங்கப்படும். இந்த இசை, இசைக்கும் போது சத்தமும், சந்தோஷமும் அதிகமாகவே இருக்கும்.
உரல், பிரம்மதாளம், தாரை, நெடுந்தாளை, திருச்சின்னம், எக்காளம், சங்கு, கொம்பு, கொக்கரை என்பது போன்ற பல்வேறு வாத்திய கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் இந்த இசையை எந்த காரணம் கொண்டும் பணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கக்கூடாது என்பது இதன் முக்கிய விதியாகும். இதயபூர்வமாக இந்த இசையை கற்றுக்கொள்ள ஆசைப்படும் யார் வேண்டுமானாலும், தங்களுக்கு பிடித்த வாத்திய கருவிகளை இசைக்க கற்றுக் கொள்ளலாம்.
திருக்காரணி திருக்கைலாய வாத்ய குழு என்ற இந்த இசைக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு முழு நேர தொழில் என்பது வேறாகும். வியாபாரமோ, வேலையோ பார்த்து வருவார்கள், கோயில் விழா நேரங்களில் ஒருங்கிணைந்து இசைத்துவிட்டு சென்று விடுவார்கள்.
இப்படிப்பட்ட அபூர்வ கலைஞர்களை சென்னை சைதாப்பேட்டை கோயில் ஒன்றில் சந்தித்த போட்டோகிராபர் கார்த்திகேயன், உங்களை "பிளாஷ் லைட் 'உபயோகிக்காமல் படம் எடுக்கப் போகிறேன், அதுவம் கறுப்பு, வெள்ளையில். ஆகவே நீங்கள் பாட்டுக்கு உங்கள் இசைத் தொழிலை பாருங்கள், நான் என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு இரவு 11 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை நான்கு மணிவரை அவர்கள் கூடவே இருந்து எடுத்த படங்களில் சிலவற்றை தேர்ந்து எடுத்து இந்த வார பொக்கிஷத்தில் பிரசுரித்துள்ளோம்.
படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியில் பார்க்கலாம்.
அப்பரேச்சர், மற்றும் ஷட்டரில் முடியாத விஷயங்களை கடைசியில் ஐஎஸ்ஒ கொண்டுதான் எடுக்கமுடியும். அந்த முயற்சியே இந்த படங்களாகும்.
இந்த கைலாய இசையைக் கற்றுக் கொள்ளவோ, மேலும் அறிந்து கொள்ளவோ விரும்புபவர்கள் யுவராஜ் என்பவருடன் தொடர்பு கொள்ளவும் அவரது எண்: 9940341564.
படங்கள் குறித்து கார்த்திகேயனுடன் பேச விரும்புபவர்களுக்கு அவரது போன் எண்: 8754481047.
-எல்.முருகராசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக