செவ்வாய், 21 மே, 2013

நில எண்ணெய்ச் செலவைக் குறைக்கலாம்!

நில எண்ணெய்ச்  செலவைக் குறைக்கலாம்!

மின்வெட்டினால் ஏற்படும் டீசல் செலவை, பயோ கேஸ் முறையால் குறைக்கும், செல்வ பாண்டி: நான், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, ஆலங்குளத்தை சேர்ந்தவன். நெல்லையில் உள்ள ஆண்டிப்பட்டியில், சலவை சோப்பு தயாரிக்கும், சிறிய தொழிற்சாலையை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் ஏற்படும் அதிகப்படியான மின் வெட்டை சமாளிக்க, டீசல் மூலம் ஜெனரேட்டர்களை இயக்கி, மின்சாரம் பெற்று வந்தேன். டீசலின் விலையும் அதிகமானதால், மாற்று முறையில் மின்சாரம் கிடைக்க வழி தேடினேன். நான், கிராம பகுதியை சேர்ந்தவன் என்பதால், ஆடு, மாடுகளின் கழிவுகளை கொண்டு, "பயோ கேஸ்' முறையை, சிறிய அளவில், என் வீட்டிலேயே பயன்படுத்தி வந்தேன். பயோ கேஸ் முறையை தொழிற்சாலைக்கும் விரிவுபடுத்தியதால், குறைந்த டீசலிலேயே, தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறேன். 400 கன மீட்டர் அளவுக்கு குழி தோண்டி, பயோ கேஸ் அமைக்க, 20 லட்ச ரூபாய் செலவாகும். மத்திய அரசிடமிருந்து, 40 சதவீத மானியமாக, 8 லட்ச ரூபாய் கிடைக்கும். இதை அமைக்க, 6 சென்ட் நிலம் இருந்தாலே போதும். இம்முறையால், 125 கிலோ வாட் திறன் கொண்ட, இரண்டு ஜெனரேட்டரை, 10 மணி நேரமும், 62.5 கி.வா., திறனுள்ள ஒரு ஜெனரேட்டரை, எட்டு மணி நேரமும் இயக்கி, நாள் ஒன்றுக்கு, 1,000 கி.வா., மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இம்முறையால், 24 மணி நேரமும், தொழிற்சாலையை தங்கு தடையின்றி நடத்த முடிகிறது.தவிர, 125 கி.வா., ஜெனரேட்டர் இயக்க, மணிக்கு, 14 லிட்டர் டீசல் தேவைப்பட்ட நிலையில், தற்போது, 3 லி., டீசலே போதும். 62.5 கி.வா., ஜெனரேட்டர் இயக்க மணிக்கு, 8 லிட்டர் டீசல் தேவைப்பட்ட நிலையில், 1 லிட்டர் டீசலே போதுமானதால், மின்வெட்டு ஏற்படும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 500 ரூபாய்க்கான டீசல் செலவு குறைகிறது. இதனால், மாதத்திற்கு, 1 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடிகிறது. இம்முறையை பயன்படுத்தினால், ஜெனரேட்டருக்கான டீசல் செலவு, 80 சதவீதமும், வாகனங்களுக்கான டீசல் செலவு, 50 சதவீதமும் குறைக்கலாம். தொடர்புக்கு: 94433 70098.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக