சனி, 25 மே, 2013

ஈழத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை: கருணாநிதி வேண்டுகோள்

ஈழத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்


தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசைக் கோரியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:

* இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே?
# 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார்.  அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவில்லையாம். கடந்த நான்காண்டுகளாக மகன் எங்கேயிருக்கிறான் என்று தேடி பலரிடம் உதவி கேட்டும் சோர்ந்து போயிருந்த நிலையில், தற்செயலாக இலங்கையில் வெளிவரும் “தினக்குரல்” நாளிதழில் தன் மகனின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அந்தப் புகைப்படம், இலங்கையிலிருந்து இந்தோனேசியா வந்துள்ள அகதிகளின் படம். அதிலே தனது மகன் துஷ்யந்தன் இருந்ததைப் பார்த்துவிட்டு, அந்தச் செய்தியைப் படித்தபோது, இந்தோனேசியா சிறையில் அந்த ஈழத் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களுக்கு கரப்பான் பூச்சிகளே உணவாகக் கொடுக்கப்படுகிறது என்றும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, எப்படியாவது சிறையிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்தத் தாய் தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் செய்தி படித்தேன். அந்தத் தாயின் துயரத்தையும், இந்தோனேசியாவில் உள்ள மற்ற ஈழத் தமிழர்களின் துயரத்தையும் தீர்க்க இந்திய அரசும், தமிழக அரசும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்; எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

* ஈரோடு மாவட்டத்தில், பெருந் துறையை அடுத்த கொடுமணல் என்ற ஊரில் அகழாய்வு நடத்தப்பட்டதாகவும், அந்த ஊர் 2,500 ஆண்டுகள் பழமையானது என்றும் சொல்கிறார்களே?
# சென்னிமலைக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ளதுதான் கொடுமணல் என்ற சிறப்புமிக்க ஊர். அங்கே 50 ஏக்கர் பரப்பில் 3 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில் ஒரு ஈமச் சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அங்கே விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் உருக்கு உருக்கப்பட்டதற்கான தொழிற்கூடங் களும் கண்டு அறியப்பட்டுள்ளன. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களைப் பெறுவதற் காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் எல்லாம் வந்துள்ளார்கள்.
கொடு மணலில் கிடைத்த மட்பாண்டம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும். அங்கே கிடைத்துள்ள மட்பாண்டங்கள் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று, மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றதாம். இந்தக் கொடுமணல் அகழாய்வு களத்தைப் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டு மென்று கோரிக்கைகள் எழுந்துள்ள சூழ்நிலையில், அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தொல்லியல் துறை தயாராக இல்லை என்று செய்தி வந்துள்ளது. தனது பெயரை வெளியிட விரும்பாத தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், “தனிப்பட்ட குழுக்களோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ அகழாய்வு செய்யும்போது, அதில் கிடைக்கும் அரிய பொருள்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். அப்பொருள் எங்கு  கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த இடத்திற்கு அருகில் உள்ள, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மற்றபடி நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன” என்று கூறியிருக்கிறார்.
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், “கொடுமணலில் கண்டறியப்பட்ட தாமிர தொழிற்கூடம், தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அங்கு காணப்படும், பல்வேறு விதமான
அணிகலன்கள், அதை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில், கொடுமணல் அகழாய்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமை வாய்ந்தது. எனவே தமிழக அரசு, கொடுமணல் தொல்லியல் களத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். அந்த நிலத்தைக் கையகப்படுத்தி, பாதுகாக்கப்படும் இடமாக அறிவிக்க வேண்டும்” என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சங்க இலக்கியமான பதிற்றுப் பத்தில், “கொடுமணம்பட்ட....நன்கலம்” எனக் கபிலரும், “கொடுமணம்பட்ட வினைமான்” என அரிசில் கிழாரும் பாடியுள்ளனர். தொன்மைமிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையிலும், நாகரிகம் மற்றும் பண்பாட்டிலும் மிகுந்த ஈடுபாடும் ஆராய்ச்சி அறிவும் கொண்ட அவரது வேண்டுகோளையேற்று கொடுமணல் அகழாய்வுக் களத்தை தொல்லியல் துறை சார்பில் ஏற்று, அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இல்லாத ஒன்றை இருப்ப தாகக் கூறி, அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சி யிலே ஈடுபடுவதைக் கைவிட்டு; கண் எதிரில் கண்டு பிடிக்கப்பட்ட கொடுமணல் அகழாய்வுக் களத்தைப் பாதுகாக்க முயற்சிப்பதுதான் முறையானது.
கோவையில் 27-6-2010 அன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நான் ஆற்றிய நிறைவுரையில், “கி.பி. இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் தமிழர்களோடு நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பழைய ரோம் நாணயங்கள் தமிழ் நாட்டுக் கடற்கரைகளில் ஏராளமாகக் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மற்ற இடங் களில் கிடைத்தவற்றைவிட, ரோமானிய நாணயங் கள்
இந்தக் கொங்கு நாட்டில்தான் மிகுதியாகக் கிடைத்துள்ளன” என்று குறிப்பிட்டதை மேலும் மெய்ப்பிக்கும் வகையில், பழம்பெருமைமிக்க கொங்குநாட்டின் கொடுமணல் அகழாய்வின் போது இந்த நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

* இரண்டு லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கக் கூடிய முக்கிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப் போவதாகச் சொல்லப்படுகிறதே?
# அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து மசோதா தயாரிக்கப்பட்டு, அமெரிக்க செனட் சபையின் நீதித் துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். தற்போது நீதித் துறை உறுப் பினர்கள் அதைப் பரிசீலித்தபோது, மசோதாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் விழுந்திருக்கின்றன. 8 வாக்குகள் அதிகம் பெற்று மசோதா நீதித் துறைக் குழுவின்
ஒப்புதலையும் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்குச் செல்லும் 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 60 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று மசோதா நிறைவேற வேண்டும். இந்தத் தகவலை நான் இங்கே குறிப்பிடு வதற்குக் காரணம், 26-9-2009 அன்று காஞ்சி புரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் கழகம் நிறைவேற்றிய 8வது தீர்மானத்தில், தமிழகத்திலே அகதிகளாக தங்கி யுள்ள 1 இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் மறு குடியமர்த்தும் முயற்சியாக தமிழக அரசு மத்திய அரசோடு கலந்து பேசி, அவர்கள் தமிழகத் திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தோம். கழகம் ஆட்சியில் இருந்தபோது தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அமெரிக்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடிவு செய்திருப்பதைப்போல, இந்தியாவிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையினை - நிரந்தரமாகப் பாதுகாப்போடு வாழ்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும் என்பது தான் நமது விருப்பமும் வேண்டு கோளும் ஆகும். இங்குள்ள ஈழத் தமிழர்களில், விரும்புவோர்க்குக் குடியுரிமை வழங்குவது, அவர்களது எதிர்காலத்திற்கு நாம் தருகின்ற உத்தரவாதமாக அமையும்.

கருத்துகள்(4)

அண்ணா !நீங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதே இதைபோன்ற சிறிய விசயங்களை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்திருந்தால் நிறைவேற நல்ல சந்தர்ப்பங்கள் இருந்ததே !இப்போது வெளியே வந்த பிறகு கடிதங்கள் எழுதியோ வேண்டுகோள் விடுத்தோ என்ன பயன் விளையுமென்று நினைக்கிறீர்கள் ?ஆனாலும் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய பிறகு ஈழத்தமிழர்க்கு குரல் கொடுப்பது மகிழ்ச்சி
இந்தியக் குடியுரிமை என்று ஒரு விஷயம் இருப்பதும், இந்தியாவில் இலங்கை அகதிகள் இருப்பதும் கருணாநிதிக்கு இப்போது தான் தெரியவந்தது போலிருக்கிறது.
டேய் இந்த டக்க அல்டி வேலை தானே வேணாம் இங்கேறது. நீ யாரு, யேபரு பட்ட அலுநு மக்களக்கு தெரியும்.
ஏன்? இந்தியக் குடியுரிமைப் பிரச்சினையால் வடகிழக்கு மாநிலங்கள் அவதியுறுவது போதாதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக