வேண்டாம் விபரீதம்
வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து
அரசுத் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள்,
மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆங்கிலப் பாடமொழி பிரிவுகள் தொடங்கப்படும்
என தமிழகக் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தாய் மொழியே கல்வி
மொழியாக வேண்டும் என்ற கொள்கைக்குச் சாவுமணி அடித்திருக்கிறது.
நாடு விடுதலை பெற்றாலும் ஆங்கிலமே கல்வி மொழியாகத் தொடர வேண்டும் என
கல்வியாளர்கள் சிலர் கூறிய கருத்துக்களுக்கு தேசத் தந்தை காந்தியடிகள்
மிகக்கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
""கல்வியாளர்கள் முடிவு செய்யக்கூடிய விஷயமல்ல இது. என்னுடைய
கருத்துப்படி நம்முடைய குழந்தைகள் எந்த மொழியில் கல்வி கற்க வேண்டும்
என்பதைக் கல்வியாளர்கள் முடிவு செய்ய முடியாது. என்னென்ன பாடங்கள் கற்பிக்க
வேண்டும் என்பதையும் கல்வியாளர்கள் முடிவு செய்ய முடியாது. ஒவ்வொரு
நாட்டிலும் அந்தந்த நாட்டு மக்களின் தேவைக்கேற்ப அவை முடிவு செய்யப்பட
வேண்டும்.
நம்முடைய நாடு விடுதலை பெறும்போது கல்வி மொழி எது என்பது குறித்து
திட்டவட்டமான முடிவு எடுக்கப்படும். கல்வியாளர்கள் பாடத்திட்டம் குறித்தும்
பாடப் புத்தகங்கள் குறித்தும் முடிவு செய்யவேண்டியவர்கள் மட்டுமே. அன்னிய
ஆட்சியின் கீழ் அவர்களின் தேவைக்கேற்ற கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது.
ஆனால், சுதந்திர இந்தியாவில், நாட்டின் தேவைக்கேற்ற கல்விக் கொள்கை
வகுக்கப்படும்.
படித்த வர்க்கத்தைச் சேர்ந்த நாம் கல்விக் கொள்கை எது என்ற கேள்விக்கு
விடை காண முயல்வது சரியாக இருக்காது. நாம் கனவு காணும் வளம் மிக்க சுதந்திர
இந்தியாவை உருவாக்க அது உதவாது. அடிமைத் தளையிலிருந்து பெரு முயற்சி
செய்து, விடுதலை பெற்று நாம் வளரவேண்டும். அரசியல், சமுதாயம், பொருளாதாரம்,
கல்வி, போன்ற எத்துறையாக இருந்தாலும் அவற்றுக்கு இது பொருந்தும். நமது
போராட்டத்தில் முக்கால் பகுதி இதுவாகும்'' என காந்தியடிகள் கூறியுள்ளார்.
பிரிதொரு வேளையில் பயிற்று மொழி தொடர்பாக அவர் மிகக்கடுமையாகக்
கருத்துத் தெரிவித்திருக்கிறார். ""அன்னிய மொழியில் கல்வி என்பது நமது
குழந்தைகளின் மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையில்லாத பளுவினை அவர்கள்
மீது சுமத்தி அவர்களை வெறும் உருப்போடுபவர்களாகவும் போலி நடத்தை
உடையவர்களாகவும் ஆக்கிவிடும். சொந்தமாக சிந்திக்கவோ செயல்படவோ
தகுதியற்றவர்களாக அவர்களை ஆக்கும். நமது சொந்த நாட்டிலேயே நமது குழந்தைகளை
அன்னியர்களாக்கிவிடும். தற்போதைய கல்வி முறையின் மிகப்பெரிய சோகம் இதுதான்.
நமது தாய்மொழியின் வளர்ச்சிக்கு அன்னியக் கல்விமுறை பெரும் தடையாகும்.
எனக்கு மட்டும் ஒரு சர்வதிகாரியின் அதிகாரங்கள் அளிக்கப்படுமானால் அன்னிய
மொழியில் கல்வி பயில்வதற்குத் தடை விதித்துவிடுவேன். நமது ஆசிரியர்களையும்,
பேராசிரியர்களையும் தாய்மொழிக் கல்விக்கு மாறச் செய்வேன்.
இதற்கான பாடப் புத்தகங்கள் தயாரிக்க வேண்டுமே என நான் பொறுத்திருக்க
மாட்டேன். அவை தன்னாலேயே இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளும்.
உடனடியாகப் பரிகாரம் தேடவேண்டிய மிகப்பெரிய தீமை அன்னிய மொழியில் கல்வி
கற்பிப்பதாகும். அன்னிய ஆட்சியினால் விளைந்த பல தீமைகளில் மிகப்பெரிய தீமை
நம் நாட்டு இளைஞர்களுக்கு அன்னிய மொழியில் கல்வி கற்பிப்பதாகும் என நமது
வரலாறு பதிவு செய்யும். மக்களிடமிருந்து அவர்களை அன்னியப்படுத்திவிடும்.
கல்விக்கான செலவு தேவையில்லாமல் அதிகமாகிவிடும். இந்தக் கல்வி முறை
தொடர்ந்து நீடிக்குமேயானால் தேசத்தின் ஆன்மாவை அவை அழித்துவிடும். எனவே
அன்னியக் கல்விமுறை என்ற மாயையிலிருந்து தேசம் எவ்வளவு விரைவில் விடுதலை
பெறுகிறதோ அவ்வளவுக்கு மக்களுக்கு நல்லதாகும்''. (தி செலக்டட் ஒர்க்ஸ் ஆஃப்
காந்தி - வால்யூம் 6 "தி வாய்ஸ் ஆஃப் ட்ரூத்)
தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை பின்கண்டவாறு உள்ளன.
தொடக்கப் பள்ளிகள் 38,82,092.
நடுநிலைப் பள்ளிகள் 23,48,141.
உயர் நிலைப் பள்ளிகள் 19,15,409.
மேல்நிலைப் பள்ளிகள் 48,74,565.
ஆக மொத்தம் 1,30,20,207 மாணவர்கள் பயிலுகிறார்கள்.
தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,15,568 ஆகும். உயர் தொடக்கப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 62,156 ஆகும்.
உயர்நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 71,794 ஆகும்.
மேல் நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,41,509 ஆகும்.
உலகெங்கும் ஆசிரியர், மாணவர் விகிதாசாரம் 1:20 ஆகும். தமிழ்நாட்டில்
இந்த விகிதாசாரம் 1:80 ஆகும். இது எவ்வளவு கவலைக்கிடமானது என்பதை உணர்ந்து,
இந்த விகிதாசாரத்தை உயர்த்தி மாணவர்களின் கல்வித் தகுதியை
அதிகரிப்பதற்குப் பதில் அவர்களின் மேல் தாங்கமுடியாத சுமைகளைச்
சுமத்துவதால் என்ன பயன்?
பெரும்பாலான பள்ளிகளில் கட்டடங்கள், விளையாட்டுத் திடல்கள், தேவையான
கரும்பலகை போன்ற கல்வி உபகரணங்கள் போன்றவை பற்றாக்குறையாக உள்ளன. சுகாதார
வசதிகளும், குடிநீர் வசதியும் போதுமானவையாக இல்லை. கிராமப்புற பள்ளிகளின்
நிலைமை மிகவும் மோசம். இவற்றை மேம்படுத்துவது மிகமிக அவசரமான முன்னுரிமையான
வேலைத் திட்டமாகும். ஆனால், இவற்றில் கவனம் செலுத்தாமல் ஆங்கில வழிக்
கல்வித் திட்டத்தைப் புகுத்துவது என்பது மாணவர்களின் படிப்பைப்
பாழாக்குவதாகும்.
இவர்களில் ஆங்கில வழி கற்றவர்களானலும் தமிழ் வழி கற்றவர்களானாலும்,
கல்லூரிகளில் சேரும்போது அங்கு ஆங்கிலமே கல்விமொழியாக உள்ளபோதிலும், தமிழ்
வழிக் கற்ற மாணவர்கள் அதன் காரணமாகப் பின் தங்கிவிடவில்லை. ஆங்கிலத்தை ஒரு
பாடமாக மட்டுமே கற்றுவந்தபோதிலும் அவர்கள் கல்லூரியிலும் மிகச் சிறப்பாகப்
பயின்று வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இன்னும் சொல்லப் போனால், ஆங்கில வழி கற்றுத் தேர்ச்சி பெற்றுவந்த
மாணவர்களைவிட தமிழ்வழிக் கல்வி கற்று வந்த மாணவர்கள் ஒருபடி மேலாகவே
விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த ஆண்டு நடந்து முடிந்த "பிளஸ்-2' தேர்வில் 100 அரசுப் பள்ளிகள் 100
சதவீத தேர்ச்சிபெற்று சாதனை படைத்திருக்கின்றன. மேலும் எஸ்.சி., எஸ்.டி.
மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதமும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் எஸ்.சி.
மாணவர்களில் 70.4 சதவீதம் பேரும் எஸ்.டி. மாணவர்களில் 71.5 சதவீதம் பேரும்
தேர்ச்சிப் பெற்றள்ளனர்.
அதைப் போல் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின்
எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 7,324 மாணவர்கள் 90
சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சராசரி தேர்ச்சிவிகிதம் 86 முதல் 88
விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவை சாதாரணமான சாதனை அல்ல. மிகவும் பின்தங்கிய
வகுப்புகளைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் பெற்றோர்கள்
கற்றவர்கள் அல்லர். இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப்
பள்ளிகளில் சேர்ந்து படிப்பதைத் தவிர வேறுவழியில்லை. மெட்ரிக் பள்ளிகளில்
உள்ள கல்வி வசதி கட்டமைப்புகள் அரசுப் பள்ளிகளில் இல்லை. இருந்தாலும் இந்த
மாணவர்கள் பாராட்டத்தகும் வகையில் தேர்ச்சிப் பெற்றிருப்பது ஒரு உண்மையை
எடுத்துக்காட்டுகிறது. அந்த உண்மை தாய்மொழியில் அவர்கள் கல்வி கற்றதுதான்
என்பதாகும். இதே மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வி கற்க வைத்தால் நேர்மாறான
விளைவுகள் ஏற்பட்டு அவர்களின் கல்வியும் எதிர்காலமும் பாழாகிவிடும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வந்த 19 ஆயிரம் பேர்களில் 5 பேர் மட்டுமே
"அரசுப் பள்ளியில் வேலை வேண்டாம்' என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்தச்
செய்தி உணர்த்தும் உண்மை என்ன? தகுதித் தேர்வில் வென்றவர்கள் அரசுப்
பள்ளிகளில்தான் பணியாற்றுகிறார்கள், தகுதித் தேர்வில் வெல்லாதவர்கள்தான்
தனியார் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். அப்படியானால், தனியார் பள்ளிகளைவிட
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறப்பானவர்கள் என்பது மறுக்க
முடியாத உண்மையாகும்.
ஒரு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதை நான் எதிர்க்கவில்லை. ஆனால்,
அதுவே பயிற்று மொழி என்று கூறும் போதுதான் எதிர்க்க வேண்டியுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சித்துறையின் தலைசிறந்த விஞ்ஞானிகளான அப்துல் கலாம்,
மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டு பள்ளிக்
கல்வி பயின்றவர்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
1930-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தாய் மொழி வழிக் கல்வியை
வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியாக 1952-ஆம் ஆண்டு
தமிழ் வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 1954-ஆம் ஆண்டு முதல் காமராஜர்
முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் உயர் நிலைப் பள்ளிவரை தமிழே
பயிற்சி மொழியாக இருந்தது.
கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் பல்கலைக் கழக மட்டத்திலும்
தமிழே பயிற்சிமொழியாக வேண்டும் என்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தார்.
1960-ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கோவையில் உள்ள அரசுக்
கல்லூரியில் வரலாறு, அரசியல், பொருளாதாரம், நிலவியல், மனவியல் போன்ற
பாடங்களில் பட்டப்படிப்புகள் தமிழில் தொடங்கப்பட்டன. 1961-ஆம் ஆண்டில்
மேலும் மூன்று கல்லூரிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட்டது. இத்திட்டத்தை
மாநிலம் முழுவதிலும் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டது.
பட்டப்படிப்பை தமிழ் வழிக் கல்வியில் மேற்கொள்வோருக்கு கட்டணச் சலுகைகள்
அளிக்கப்பட்டால் மட்டும் போதாது அவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை
அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால், 1965-ஆம்
ஆண்டு முதலமைச்சராக பக்தவத்சலம் பொறுப்பேற்றபோது இத்திட்டம் மெல்லமெல்லக்
கைவிடப்பட்டது. பள்ளிகளில் தமிழே பாடமொழியாக இருந்ததை மாற்றும் வகையில்
ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு ஆங்கில வழிப் பாடமொழியாக இருக்கும் என அவர்
பிறப்பித்த உத்தரவு தமிழ் பாடமொழிக்குச் சாவுமணி அடித்துவிட்டது. முன்பு
பக்தவத்சலம் அரசு செய்த தவறை இப்போதுள்ள அரசும் செய்யக்கூடாது. அரசுப்
பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவு தொடங்குவது என்பது
இறுதியாகத் தமிழ் பயிற்சி மொழி இல்லாது ஒழித்துவிடும்.
1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது.
பக்தவத்சலம் செய்தத் தவறை திருத்துவதற்குப் பதில் அதை இக்கட்சிகள்
தொடர்ந்தன. இதன் விளைவாக ஆங்கில வழிக் கல்வியின் ஆதிக்கம் பரவியது.
1978-ஆம் ஆண்டுவரை மெட்ரிக் பள்ளிகள் மொத்தம் 34 மட்டுமே இருந்தன.
அவையும் சென்னை, மதுரை, பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன.
பிறகு இப்பொறுப்பை பல்கலைக் கழகங்கள் கை கழுவிய பிறகு இவற்றுக்காக
மெட்ரிக்குலேஷன் போர்டு அமைக்கப்பட்டது. இப்போது உயர்நிலைப் பள்ளிகளில்
மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 2,053 ஆகும். மேல் நிலைப் பள்ளிகளில்
இவற்றின் எண்ணிக்கை 1,421 ஆகும். ஆக மொத்தம் 3,474 மெட்ரிக் பள்ளிகள்
உள்ளன. வெறும் 34 ஆக இருந்த இப்பள்ளிகளின் எண்ணிக்கை நூறு மடங்குக்கு மேல்
பெருகிவிட்டது.
இப்பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் கிடையாது. ஆசிரியர்களும்
பற்றாக்குறை. பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களில் 57 சதவீதம் பேர்
ஆசிரியப் பயிற்சி பெறாதவர்கள். கொத்தடிமை ஆசிரியர்களைப் போல மாதம் ரூ.2,000
அல்லது அதற்குக் குறைவான ஊதியம் பெற்று வேலை பார்த்துத் தீரவேண்டிய
கட்டாயத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிட்டிபாபு தலைமையிலான
நிபுணர் குழு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதிமுறைகளை
அரசுக்குப் பரிந்துரைத்த போதிலும் இதுவரை அரசு ஆணை எதுவும்
பிறப்பிக்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில்
போதுமான தேர்ச்சியில்லாமலும், தமிழ் தெரியாமலும் வளர்ந்து வருகிறார்கள்.
இது எவ்வளவு பெரிய சமூகக் கேடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தாய்வழிக் கல்வி நசிந்து வருவதைக் கண்டு மனம் பொறாத 101 தமிழறிஞர்கள்,
மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையிலான சான்றோர் பேரவையின் சார்பில்
25-4-1998-ஆம் ஆண்டில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத்
தொடங்கினார்கள். குறைந்தபட்சமாக முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புவரை தாய்
மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்பதுதான் அவர்கள் முன்வைத்த ஒரே
கோரிக்கையாகும்.
அப்போது முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி, அமைச்சர் தமிழ்க் குடிமகனை
அனுப்பி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக இக்கோரிக்கையை
ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக நீதிநாயகம் எஸ். மோகன்,
தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அக்குழு அளித்தப் பரிந்துரையில் 1 முதல் 5
வரை உள்ள பள்ளிகளில் தாய் மொழிக் கல்வி அளிப்பதற்கான சட்டத்தை தமிழக அரசு
பிறப்பிக்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறியது.
ஆனால், சட்டம் கொண்டு வருவதற்குப் பதில் 1999-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம்
தேதி அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து ஆங்கில
வழிப் பள்ளிகளின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு
அரசு ஆணை செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச
நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீடு இன்னமும் விசாரிக்கப்படாமல்
அப்படியே கிடக்கிறது.
மோகன் குழு அளித்த பரிந்துரையின்படி தமிழ்வழிக் கல்விக்கான சட்டத்தை
கருணாநிதி கொண்டு வந்திருந்தால் அது நிலைத்து நின்றிருக்கும். ஆனால்
அவ்வாறு செய்யாமல் அரசு ஆணை பிறப்பித்ததின் விளைவாக தாய்மொழிக் கல்வி குழி
தோண்டி புதைக்கப்பட்டது.
தமிழக அரசின் கட்டுத் திட்டங்களுக்கு உட்படாமல் தப்புவதற்காக ஆங்கில
வழிக் கல்வி பள்ளிகள் தங்களை மத்திய அரசின் கல்விக் கழகத்துடன் இணைத்துக்
கொள்கின்றன. அங்கு ஆங்கில வழிக் கல்வி மட்டுமல்ல இந்தியும் கட்டாயப்
பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டிய
அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் 200-க்கு மேற்பட்ட ஆங்கிலவழிப் பள்ளிகளில்
தமிழ் கற்பிப்பதே இல்லை.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வழிப் பள்ளிகள் மத்திய அரசின்
கல்விக் கழகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. பள்ளி வளாகத்திற்குள்
குழந்தைகள் தங்களுக்குள் தமிழில் பேசினால் அதற்குத் தண்டனை விதிக்கப்படுகிற
கொடுமையும் சில பள்ளிகளில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தமிழே புறக்கணிக்கப்படுகிற நிலை நீடிப்பது நமது
குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழ்படுத்திவிடும். உலகம் பூராவும் சிறிய
நாடுகளாக இருந்தாலும் அந்தந்த நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி
கற்பிக்கப்படுகிறது. இந்தியாவிலும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம்,
ஆந்திரம் மற்றும் வங்கம், மராட்டியம், குஜராத் போன்ற பல மாநிலங்களில்
பள்ளிப் படிப்பு என்பது தாய்மொழியில்தான் நடைபெறுகிறது. ஆங்கிலத்தை ஒரு
பாடமாக அங்கெல்லாம் பயிலுகிறார்களே தவிர ஆங்கிலத்தையே பாடமொழியாகக் கொண்டு
பிற பாடங்களையும் கற்பதில்லை.
அறிவியலிலும் பொருளாதாரத்திலும் மிக முன்னேறிய நாடுகளான சீனாவும்,
ஜப்பானும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக
கற்றுக்கொடுக்கின்றனர். ஆனால் ஆங்கிலவழிக் கல்வி அந்நாடுகளில் கிடையாது.
இந்த உண்மையை உணர்ந்து தமிழக அரசு இப்போது பிறப்பித்திருக்கும் ஆணையைத்
திரும்பப் பெறவேண்டும். சகல மட்டங்களிலும் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க
முன்வரவேண்டும்.
"அறிவியலிலும் பொருளாதாரத்திலும் மிக முன்னேறிய நாடுகளான சீனாவும், ஜப்பானும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்றுக்கொடுக்கின்றனர். ஆனால் ஆங்கிலவழிக் கல்வி அந்நாடுகளில் கிடையாது. இந்த உண்மையை உணர்ந்து தமிழக அரசு இப்போது பிறப்பித்திருக்கும் ஆணையைத் திரும்பப் பெறவேண்டும். சகல மட்டங்களிலும் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க முன்வரவேண்டும்" என பழ.நெடுமாறன் வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன். இந்த மாற்றத்துக்குக் காரணம் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு தமிழ்மொழிப் பற்றுக் கிடையாது. தமிழ்த்தாயக்கு 100 கோடியில் சிலை என்பது அரசியல் இலாபம் கருதிச் சொல்லப்படுவது. தமிழீழத்தில் தமிழ் மாணவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழில் கற்றுவருகிறார்கள். மருத்துவம் மட்டும் பின்னாளில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழைக் காணோம். இந்த முடிவுக்குப் பின்னர் தெருவில் மட்டுமல்ல எங்கேயும் தமிழைக் காண முடியாது.
பதிலளிநீக்கு