பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராசன் மரணம்
பதிவு செய்த நாள் :
சனிக்கிழமை,
மே 25,
5:01 PM IST
பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல்நல குறைவு காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 19-ந்தேதி வீடு திரும்பினார். மூச்சுக் கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.
1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.
2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.
எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.
2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர்: டி.எம்.எஸ். மறைவுக்கு வைகோ இரங்கல்
பதிவு செய்த நாள் :
சனிக்கிழமை,
மே 25,
7:38 PM IST
சென்னை, மே 25-
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அறுபது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் ஒலித்ததும் நாதவெள்ளமாக தமிழக மக்கள் சிந்தையைக் கவர்ந்ததுமான பாடல்களை தன் கானக் குரலால் பாடிய இசைவேந்தர் டி.எம். சவுந்தரராஜன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, அளவற்ற வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
‘உள்ளம் உருகுதய்யா...’ என்பது உள்ளிட்ட அவரது பக்திப் பாடல்கள் கேட்போரை பரவசத்தில் ஆழ்த்தும். நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர்களது குரலுக்கு ஏற்றவாறு அவரது பின்னணிக் குரல் ஒலிக்கும். தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், உணர்ச்சிப் பாடல்கள் அனைத்துமே காலத்தை வென்றவையாகும்.
டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் மறைந்தாலும் அவரது பாடல்கள், அவரது தேனினும் இனிய இசைக்குரல் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும். அவரது மறைவால், துயரத்தில் துடிக்கும் இசை உலகத்திற்கும், திரை உலகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அறுபது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் ஒலித்ததும் நாதவெள்ளமாக தமிழக மக்கள் சிந்தையைக் கவர்ந்ததுமான பாடல்களை தன் கானக் குரலால் பாடிய இசைவேந்தர் டி.எம். சவுந்தரராஜன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, அளவற்ற வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
‘உள்ளம் உருகுதய்யா...’ என்பது உள்ளிட்ட அவரது பக்திப் பாடல்கள் கேட்போரை பரவசத்தில் ஆழ்த்தும். நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர்களது குரலுக்கு ஏற்றவாறு அவரது பின்னணிக் குரல் ஒலிக்கும். தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், உணர்ச்சிப் பாடல்கள் அனைத்துமே காலத்தை வென்றவையாகும்.
டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் மறைந்தாலும் அவரது பாடல்கள், அவரது தேனினும் இனிய இசைக்குரல் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும். அவரது மறைவால், துயரத்தில் துடிக்கும் இசை உலகத்திற்கும், திரை உலகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் த் திரைப்பட த் துறையில் டி.எம்.எசு. இடத்தை எவராலும் நிரப்பமுடியாது: ஜெயலலிதா
பதிவு செய்த நாள் :
சனிக்கிழமை,
மே 25,
8:02 PM IST
0
சென்னை, மே 25-
முதலமைச்சர் செயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்களை தனது சிம்மக் குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், ‘டி.எம்.எஸ்.’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவருமான டி.எம். சவுந்தரராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
“ராதே என்னை விட்டு ஓடாதேடி” என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த டி.எம்.சவுந்தரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின்னணி பாடும்போது எம்.ஜி.ஆர் அவர்களின் குரலுக்கேற்றவாறும், சிவாஜி கணேசன் அவர்களுக்கு பின்னணி பாடும்போது, சிவாஜி கணேசன் அவர்களின் குரல் போலவும், மற்ற நடிகர்களுக்குப் பாடும் போது அவரவரது குரலுக்கு ஏற்றவாறு தன் குரலை வித்தியாசப்படுத்தி பாடுவதிலும் வல்லவர் டி.எம்.எஸ். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு உச்சரித்துப் பாடியவர்.
முருகக் கடவுள் மீது பக்திகொண்ட டி.எம். சவுந்தரராஜன், முருகப் பெருமான் மீதான “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்”, “உள்ளம் உருகுதய்யா முருகா”, “சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா”, “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்” போன்ற பல பாடல்களுக்கு தானே இசையமைத்து உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
“நான் ஆணையிட்டால்”, “அச்சம் என்பது மடமையடா”, “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு”, “நாணமோ இன்னும் நாணமோ”, “வசந்த முல்லை போலே வந்து”, “மலர்ந்தும் மலராத”, “ஆடலுடன் பாடலைக் கேட்டு”, “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடி ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.
‘அன்பைத் தேடி’ என்ற திரைப்படத்தில் “சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்” என்று துவங்கும் பாடலிலும், ‘சூரியகாந்தி’ என்ற திரைப்படத்தில் “ஓ...மேரி தில் ரூபா” என்று துவங்கும் பாடலிலும் இவருடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகராக விளங்கிய டி.எம். சவுந்தரராஜன், 1960, 1970-களில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்.
நகைச்சுவையானாலும், சோகரசமானாலும், காதல் உணர்வை வெளிப்படுத்தும் பாடலானாலும் அனைத்து உணர்வுகளையும் முழுமையாக வெளிப்படுத்தி பாடக் கூடியவர். இவரைப் போன்று முழுத் திறமைப் படைத்த பாடகர் ஒருவர் இவருக்கு முன்னரும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை என்று கூறுமளவுக்கு ஈடு இணையற்ற திறமை படைத்த ஒரு பின்னணிப் பாடகர் என்று சொன்னால் அது மிகையல்ல.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகத் திறம்படப் பணியாற்றியவர். எனது 2001 – 2006 ஆட்சிக் காலத்தில் எனது பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கு இவர் சொந்தக்காரர்.
டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ரீங்காரமிட்டு அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.
டி.எம்.சவுந்தரராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராசன் மறைவு : கருணாநிதி இரங்கல்
பதிவு செய்த நாள் :
சனிக்கிழமை,
மே 25,
6:31 PM IST
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
1950ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டரில் ‘மந்திரிகுமாரி’ திரைப்படத்திற்கு நான் திரைக்கதை-வசனம் எழுதிய காலத்திலிருந்து, நண்பர் டி.எம்.எஸ். அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு.
திரை இசை, மக்கள் இசை! அதன் அறுபது ஆண்டு கால வரலாற்றில் வேறு எந்தப் பாடகரும் பெறாத இடத்தை டி.எம்.எஸ். பெற்றிருக்கிறார். தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கியவர்; இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனால் சிறந்த பின்னணிப் பாடகராக உருவாக்கப்பட்டவர்.
அந்தக் காலகட்டத்தில் பாரம்பரிய மணம் குன்றாத பல பாடல்களைப் பாடினார். ‘சிந்தனை செய் மனமே’, ‘நான் பெற்ற செல்வம்’ முதலிய பாடல்கள் மறக்க முடியாதவை.
திரை இசையில் அழகான மெல்லிசைப் பாடல்கள் தலை தூக்கியபோது, அந்தப் படலத்தில் சௌந்தரராஜன், முக்கிய பங்கு வகித்தார். அவருடைய இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, உணர்ச்சி பூர்வமான பாட்டு, நடிகருக்கு ஏற்றாற்போல குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை அவருக்கு மிகப் பெரிய புகழை ஈட்டித் தந்துள்ளன.
தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகிய இருவருக்கும் டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்தியதைப்போல் வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தவில்லை.
1974 ஆம் ஆண்டில் இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கியது கழக அரசு; மத்திய அரசு இவருக்கு, ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கிப் பாராட்டியது; இத்தகைய பல்வேறு விருதுகளாலும், பாராட்டுகளாலும் சாதனைகள் படைத்துள்ள டி.எம்.எஸ். அவர்களுக்கு அவர் பிறந்த மதுரையில் பாராட்டு விழா நடத்தவேண்டுமென்று மு.க.அழகிரி ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்று அவரைப் பாராட்டச் செய்தார்.
ஒரு சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டி.எம். சௌந்தரராசன் அவர்கள் இன்று மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக