செவ்வாய், 21 மே, 2013

2500 ஆண்டுகளுக்கு முன் வணிக மையமாக இருந்த கொடுமணல்





http://img.dinamalar.com/data/gallery/gallerye_012105520_717723.jpg



ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த, கொடுமணலில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம், 2,500 ஆண்டுகள் பழமையானது என்றும், அது வணிக நகரமாக செயல்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலூகா, சென்னிமலைக்கு மேற்கே, 15 கி.மீ., தொலைவில், நொய்யல் ஆற்றின் வடகரையில், "கொடுமணம்' என்ற வரலாற்று சிறப்புமிக்க ஊர் உள்ளது. சங்க காலத்தில் அரிய கற்களால் ஆன, அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக, கொடுமணம் விளங்கியது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில், "கொடுமணம் பட்ட... நன்கலம்' என, கபிலரும், கொடுமணம் பட்ட வினைமான்' என, அரிசில் கிழாரும் பாடியுள்ளனர்.
இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், மேலை கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்து இருந்தது. 50 ஏக்கர் பரப்பில் ஒன்பது அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில், ஒரு ஈமச் சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன.புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர், ராஜன் தலைமையில், செல்வகுமார், ரமேஷ், பாலமுருகன், பால்துரை, யதீஷ்குமார் ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழு, கடந்த இரண்டு மாதங்களாக, அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது.கடந்த ஆண்டும், இதே போன்ற அகழாய்வில் ஈடுபட்ட போது, 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகப் பெரிய வணிக நகரம் இப்பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த நகரம் இருந்த கால கட்டத்தை, அமெரிக்காவில் உள்ள, காலக்கணிப்பு ஆய்வுக்கூடம், அங்கு கிடைத்த ஆதாரங்களின் பரிசோதனைக்கு பிறகு, உறுதி செய்தது. இந்த தகவல், அண்மையில் வெளியானது.
தற்போது, நடத்தப்பட்ட அகழாய்வில், இந்த இடம், வடநாட்டவர்கள் உடனான வணிக உறவில், முக்கிய பங்கு அளித்திருக்கும் என, தெரிய வந்து உள்ளது.இந்த இடம் நகை தயாரிப்பு மையமாக இருந்திருக்கலாம் என, ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட நகைகளை பெறுவதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வணிகர்கள் வந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின்,
மத்திய கங்கை சமவெளிப் பகுதியில் இருந்து, வணிகர்களும், கைவினைஞர்களும், இங்கு வந்து சென்றதை, தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி ஆட்பெயர்களும், வணிகர் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.இது குறித்து, பேராசிரியர் ராஜன் கூறியதாவது:
இந்த அகழாய்வில் கிடைத்த பண்பாட்டு எச்சங்கள், இவ்வூர், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை பற்றி எடுத்துரைக்கிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், இங்கு விலை உயர்ந்த கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் உருக்கு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம், அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதே, இந்த ஆண்டு நடந்த அகழாய்வின் சிறப்பம்சம்.இத்தொழிற் கூடங்கள், 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளன. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களை பெறுவதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வணிகர்கள் வந்துள்ளனர்.மேலும், கங்கை சமவெளி பகுதி பண்பாட்டுக்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளன. இவை கங்கைச் சமவெளிப் பகுதியில், கி.மு., 6ம் நூற்றாண்டுக்கும், கி.மு., 2ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இந்த மட்பாண்டம், கி.மு., 3ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது.அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், சந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று, மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்!
இந்த கண்டுபிடிப்பு குறித்து, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் கூறியதாவது:
தற்போது, கொடுமணலில் கண்டறியப்பட்ட, தாமிர தொழிற்கூடம், தமிழக வரலாற்றில், மிகவும் முக்கிமானது.
அங்கு காணப்படும், பல்வேறு விதமான அணிகலன்கள், அதை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் நடந்த, அகழாய்வுகளில், கொடுமணல் அகழாய்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமை வாய்ந்தது.எனவே, தமிழக அரசு, கொடுமணல் தொல்லியல் களத்தை, பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். அந்த நிலத்தை கையகப்படுத்தி, பாதுகாக்கப்படும் இடமாக அறிவிக்க வேண்டும். அங்கு எவராலும், சேதம் விளைவிக்காத வண்ணம், கட்டடத்தை எழுப்ப வேண்டும். அதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றைவிளக்கும், இந்த இடத்திற்கு, ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி, பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


நடைமுறை சிக்கல்கள் உள்ளன!


வரலாற்றுச் சிறப்புமிக்க, கொடுமணல் அகழாய்வு களத்தை, பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ள சூழ்நிலையில், அந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு தொல்லியில் துறை தயாராக இல்லை என, தெரிகிறது.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தொல்லியல்துறை அதிகாரி, கூறியதாவது:
தனிப்பட்ட குழுக்களோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ அகழாய்வு செய்யும் போது, அதில் கிடைக்கும் அரிய பொருட்களை மட்டுமே, கையகப்படுத்தப்படும். அப்பொருள், எங்கு கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த இடத்திற்கு அருகில் உள்ள, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மற்றபடி, தவிர்க்கவே முடியாத வகையில், பெரும் கட்டமைப்புடன் காணப்படும் இடங்களை மட்டுமே, கையகப்படுத்துவோம். கையகப்படுத்தும் நிலத்தின் உரிமையாளருக்கு, முறையான இழப்பீடு வழங்கப்படும். தற்போது, கொடுமணலில் கிடைத்துள்ள அரிய பொருட்களை, அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைப்போம். மற்றபடி, நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். - நமது செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக