புதன், 29 ஆகஸ்ட், 2012

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்

நட்பு - பதிவு செய்த நாள் : 28/08/2012

உலகின்  பணக்கார  நாடுகளெல்லாம் கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. உலகிலேயே உயரமான கட்டடம் எங்களிடம்தான் உள்ளது எனச் சொல்வதற்காகவே கட்டப்படும் விண்ணை முட்டும் கட்டடங்களுக்காக அவர்கள் அள்ளி வீசும் இடாலர்கள், உயூரோ, திர்ரம், இரியால்  தொகையை அளவிட முடியாது! ஆனால் அவற்றைக் கட்டுவதற்காக இரவும் பகலும் உழைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் நம்மவர்களே! நம் மூளையும், அயராத உழைப்பும், சிந்தும் வியர்வையும்தான் அவர்களை மிளிர வைக்கிறது. ஆனால் வெள்ளையன் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்பு  உலகத்துக்கே கட்டுமானத் தொழிலில் நம்மவர்கள்தான் முன்னோடியாக இருந்ததாக வரலாறு சொல்கிறது!
எடுத்துக்காட்டு நம் தஞ்சைப் பெரிய கோபுரம்! உலகின் ஏழு விந்தைகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மொத்தம் மூன்று கட்டங்களாக 177 ஆண்டுகளாகக் கட்டப்பட்டதாம். இவ்…வளவு உயரமாகக்  கட்டப்போகிறோமே, இதன் கீழே உள்ள மண்ணின் தன்மையைச் சோதிக்க வேண்டும் என்கிற அடிப்படை விவரம் கூடவா  தெரியாமல்  இருக்கும்! கட்டிய கொஞ்ச நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாய, பிறகு  இரண்டாம் தளம், மூன்றாம் தளம்  அமைத்து மொத்தமாகச் சாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். உலகில் மிக மோசமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டு இந்தக் கட்டடம். ஆனால் இஃது  உலக விந்தைகளின் பட்டியலில் இன்றும் இருப்பதுதான் மாபெரும்  விந்தை!

ஆனால் நம் தஞ்சையில் உயர்ந்து நிற்கும் 216  அடி தஞ்சைப் பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டதாம்! கட்டடக்கலையில் உலகையே மிரளச் செய்யும் இந்தக் கோயில் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக்  கோபுரத்தில் உள்ள  ஒரே ஒரு பாறை மட்டும் 80தன் (80 ஆயிரம்   கிலோ) எடை கொண்டதாம்! மின்தூக்கி (கிரேன்), இடிப்பான் (புல்டோசர்) போன்ற எந்தவிதத் தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் கட்டப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தலைநிமிர்ந்து காட்சியளிக்கும் இந்தக் கோபுரம் உலக விந்தைகளின் பட்டியலில் இடம் பெறாததே ஒரு விந்தைதான்!
கட்டுமானத் தொழிலில் நாம்தான் பேராளுமைகள் எனச் சொல்வதற்கு இதை விட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்!
நன்றி: ‘மனதில் உறுதி வேண்டும்’ வலைப்பூ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக