ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்பேர் சொல்லும்




என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்பேர் சொல்லும்- -செயா சுந்தரம்



சென்னையில் சேர்ந்தால் போல நாலு மரம் வளர்க்கமுடியாது, உடனே ஒரு "பில்டர்' வந்து ,"எந்த காலத்தில சார் இருக்கீங்க...இந்த இடம் எத்தனை லட்சம் பெறும் தெரியுமா''...என்று ஆரம்பிப்பார். இடம் லட்சம் பெறுகிறதோ இல்லீயோ, மரம் வளர்க்க வேண்டும் என்ற லட்சியம் அன்றோடு புதைக்கப்பட்டுவிடும்.

இந்த சூழ்நிலையிலும் ஒருவர் தன் வீட்டின் பெரும்பகுதியில் மக்களுக்கு உதவுவதற்காகவே நிறைய மூலிகை செடிகளை வளர்த்துவருகிறார், அதுவும் முப்பதாண்டுகளுக்கு மேலாக என்றால் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

அவர் பெயர் ஜெயா சுந்தரம். சென்னை ஆதம்பாக்கத்தில் அவரை சந்திக்க போன போது பூ பூத்த நிறைய செடி, கொடிகளை தாண்டிக்கொண்டுதான் போகவேண்டியிருந்தது. புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்துள்ள இவர் சிறந்த இலக்கியவாதி. நிறைய எழுதுகிறார், மனதிற்கு நிறைவான விஷயங்களை மட்டுமே எழுதுகிறார். தான் எழுதும் விஷயம் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற அக்கறையுடன் எழுதுகிறார்.

சென்னையில் ஒரு மாணவன் தனது பள்ளி ஆசிரியை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தபோது பலரும் "உச்' கொட்டிவிட்டு போய்விட்டனர், ஆனால் இவருக்கோ இந்த சம்பவம் மனதை போட்டு பிராண்ட, இது தொடர்பாக முன்னாள் துணைவேந்தவர் சிட்டிபாபு போன்ற கல்வியாளர்களிடம் பேசி, ஏன் மாணவர்களிடையே தற்போது இந்த மனச்சிதைவு என்று ஆரம்பித்ததன் காரணமாக இவரிடம் இருந்து ஆழமான, அர்த்தமுள்ள மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டுரை வெளிவந்தது.

வீட்டில் உள்ள மகனோ, மகளோ, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் எப்படி வளர்கிறார்கள் என்பது அடுத்தவருக்கு தெரியவேண்டாம், ஆனால் அப்பா, அம்மாவிற்காவது தெரிய வேண்டாமா? இந்த நகரத்தின் (அ)நாகரீகத்திற்கு நாம் கொடுக்கும் விலைதான் இது என்று பெற்ற பிள்ளைகள் மீது அக்கறை இல்லாத பெற்றோர் மீது கட்டுரையின் வாயிலாக இவர் சொடுக்கிய வார்த்தை சவுக்கு, இவரது எல்லா எழுத்திலும் ஒளிந்திருக்கிறது.

வாழ்க்கை எந்த வயதிலும் சுவராசியமாக இருக்கவேண்டுமா? பொறுப்பை கண்டு ஒதுங்காதீர்கள், பொறுப்பை சுமந்து பாருங்கள் என்று வாழ்க்கையின் தத்துவத்தை சொல்வது போலவே இவர் செய்தும் வருகிறார். சென்னை பக்கம் உள்ள திருக்காட்டூர் ஸ்ரீ உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் கோயில் திருப்பணியை எடுத்துக்கொண்டுள்ளார்.

இதையெல்லாம் சொன்ன இவர் வீட்டில் உள்ள மூலிகை தோட்டம் பற்றி சொல்லவேயில்லை, அது அவருக்கு சாதாரணமாக பட்டிருக்கிறது. எனக்கோ சொல்லாமல் விட்ட இந்த விஷயம் அசாதாரணமாகபட்டது.

எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரில் உள்ள செடிகளை ஆர்வமுடன் கொண்டுவந்து வீட்டில் வளர்க்கும் இவர் வளர்த்த சில மூலிகை செடிகள் பலருக்கு வைத்தியமுறையில் பலன் தரவே, பின் நிறைய மூலிகை செடிகளை வளர்க்க ஆரம்பித்தார், அந்த வகையில் விபூதி பச்சிலை, முடக்காத்தான், கீழாநெல்லி, கருந்துளசி, அருகம்புல், லெமன்கிராஸ், ஒமம் என்று வீட்டின் நீண்ட வாசல்பகுதி முழுவதும் மூலிகை செடிகளால் பூத்து குலுங்குகிறது.

மூலிகை செடிகளில் இருந்து ஒரு சின்ன இலை பூத்தால் கூட சிறுமியைப் போல சந்தோஷப்பட்டு துள்ளிக்குதித்து கணவர் சுந்தரத்துடன் பகிர்ந்துகொள்ளும் அந்த மகிழ்ச்சிக்கு இணையே இல்லை எனும் இந்த இயற்கை ஆர்வலரும், மூலிகை செடிகளின் காவலருமான ஜெயா சுந்தரத்துடன் பேசுவதற்கான எண்:9710872854.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக