திங்கள், 27 ஆகஸ்ட், 2012

தொடரியில் மாணவர் தவற விட்ட கல்விச் சான்றிதழ் : ஒப்படைத்த பேருந்து ஓட்டுநர்











விருத்தாசலம்: மாணவர், ரயிலில் தவற விட்ட கல்விச் சான்றிதழ்களை மீட்டு, கன்னியாகுமரிக்கு நேரில் சென்று உரியவரிடம் ஒப்படைத்த அரசு பஸ் டிரைவரை ரயில்வே போலீசார் பாராட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டம், பெத்தேல்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பெவின், 20. பணி நிமித்தமாக தன் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் உத்தரபிரதேச மாநிலம் செல்ல கடந்த 21ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்றார். பெவின், தனது கல்விச் சான்றிதழ் பையை ரயில் பெட்டி மேல் அடுக்கில் வைத்திருந்தார். விருத்தாசலம் ரயில் நிலையம் வந்தபோது, சான்றிதழ் வைத்திருந்த பை காணாமல் போனது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் விசாரித்து வந்தார்.

இந்நிலையில், அன்று இரவு கடலூரிலிருந்து விருத்தாசலம் வந்த (தடம் எண். 219) அரசு பஸ்சில் ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்களுடன் கிடந்த பையை, முத்தாண்டிக்குப்பம் டிரைவர் செல்வமணி கண்டெடுத்தார். சான்றிதழில் இருந்த விலாசத்தை வைத்து கன்னியாகுமரிக்கு நேரில் சென்று மாணவர் பெவினிடம் சான்றிதழ் பையை ஒப்படைத்தார்.தனது சான்றிதழ் கிடைத்து விட்டதாக பெவின், விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தார். அதையடுத்து ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் மற்றும் போலீசார், அரசு பஸ் டிரைவர் செல்வமணி அழைத்து பாராட்டினர். பையை திருடிய மர்ம நபர், அதில் பணம் ஏதும் இல்லாததால் பஸ்சில் போட்டு விட்டுச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக